அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற கேள்வி அழுத்தமாக புரையோடியிருந்த 1950-ம் ஆண்டுகளிலேயே ஒரு பெண் தன்னை மல்யுத்தத்தில் தோற்கடிப்பவரே தன்னை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பகிரங்கமாக சவால் விட்டு அந்த சவாலை சாதனையாக மாற்றிய வரலாறு இது.
ஹமீதா பானு. 1950-ம் ஆண்டு "என்னை தோற்கடிக்கும் ஆண் என்னை திருமணம் செய்து கொள்ளலாம்" என்ற அறிவிப்பை வெளியிட்ட போது அவருக்கு வயது 32.
பெண்கள் தெருவில் நடமாடுவதையே கட்டுப்படுத்தும் மனநிலையில் இருந்த அன்றைய ஆண்களுக்கு நிகராக, மேடையேறி மல்யுத்தம் செய்து அந்த ஆண்களையே தோற்கடித்துக் கொண்டிருந்த ஹமீதா பானு மேல் செம்ம கடுப்பில் இருந்தார்கள் அன்றைய ஆண் மல்யுத்த வீரர்கள்.
பெண்ணுடன் மல்யுத்தம் செய்வது கேவலம் என பல ஆண் மல்யுத்த வீரர்கள் ஹமீதா பானுவின் அறிவிப்பை சட்டை செய்யாமல் கடந்து சென்றாலும், ரோஷம் பொத்துக் கொண்டு வந்த சில மல்யுத்த வீரர்கள், ஹமீதாவை திருமணம் செய்வதை விட அவரது திமிரை அடக்க வேண்டும் என்ற மன நிலையுடன் போட்டிக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
1910-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், உத்திரபிரதேசம் மாநிலம் அலிகர் நகரில் பிறந்தவர் ஹமீதா பானு. தாத்தா, அப்பா, அண்ணன் என மொத்த குடும்பமும் மல்யுத்த வீரர்களால் நிரம்பியிருந்ததால்,ஹமீதா பானுவின் ஜீன்களில் மல்யுத்த வித்தைகள் இயற்கையாக பதிந்து விட்டன. சிறு வயது முதலே மல்யுத்த பயிற்சி பெற்று வந்த ஹமீதா பானுவை ஆண் மல்யுத்த வீரர்கள் பெரிதாக மதிக்கவில்லை.
பெண்ணுடன் மல்யுத்தம் செய்வது கேவலம் என சொல்லி பலரும் ஹமீதா பானுவை புறக்கணிக்க, தன் திறமைக்கேற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வந்தார் ஹமீதா பானு.
அன்றைய கால கட்டத்தில் தாங்கள் வீட்டு வேலைக்கு மட்டும் சரியானவர்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதிலேயே ஊறியிருந்தது. வெளியில் நடமாடவே பெண்கள் வெட்கப்பட்ட காலத்தில், ஜட்டி பனியனுடன் பொது வெளியில் ஹமீதா பானுவுடன் மல்யுத்த செய்ய எந்த பெண்தான் முன்வருவாள். சண்டையிட்டு தன் திறமையை நிரூபிக்க எந்த பெண் மல்யுத்த வீராங்கனையும் இல்லாத நிலை, உன்னுடன் சண்டையிடுவது கேவலம் என்று கூறிய ஆண் மல்யுத்த வீரர்களின் புறக்கணிப்பு என தன் நிறமையை நிரூபிக்க எந்த வழியும் இல்லாமல் தவித்த ஹமீதா பானு வேறு வழியில்லாமல் தன்னுடன் மோத தயாராக இருந்த உள்ளூர் சின்ன சின்ன பயிற்சி நிலை ஆரம்ப கட்ட அமெச்சூர் மல்யுத்த வீரர்களுடன் போட்டியிட்டு பயிற்சி பெற்று வந்தார்.
நிச்சயம் ஒருநாள் தன் திறமைக்கேற்ற அங்கீகாரம் க்டைக்கும் என்ற நம்பிக்கையில் பல வருடங்கள் போராடி வந்தார் ஹமீதா பானு. ஆனால், ஆண் மல்யுத்த வீரர்கள் ஹமீதா பானுவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மல்யுத்ததிற்காகவே தன் முழு நேரத்தையும் செலவிட்ட ஹமீதா பானு திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. வயதும் முப்பதை கடந்து விட்டது. இன்னும் தன் திறமையை ஏற்றுக் கொள்ளாத ஆண் மல்யுத்த வீரர்களின் மேல் இருந்த கோபத்தில்தான் அப்படி ஒரு அறிவிப்பை செய்தார் ஹமீதா பானு.
ஹமீதா பானு நினைத்தது போலவே இரண்டு மல்யுத்த வீரர்கள் ஹமீதா பானுவின் சவாலை ஏற்று சண்டைக்கு அழைத்தார்கள்.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகரை சேர்ந்த ஒரு மல்யுத்த வீரர், மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்த இன்னொரு மல்யுத்த வீரர் என இரண்டு வீரர்களையும் சர்வ சாதாரணமாக துவம்சம் செய்து வெற்றி பெற்றார் ஹமீதா பானு.
ஹமீதா பானுவின் வெற்றி இன்னும் சில ஆண் மல்யுத்த வீரர்களின் கொம்பை சீவி விட, ஹமீதா பானுவை தோற்கடித்து மல்யுத்த களத்தை விட்டே விரட்ட வேண்டும் என்ற வெறியுடன் அடுத்தடுத்து போட்டிகளுக்கு அழைத்தார்கள் ஆண் மல்யுத்த வீரர்கள்.
தான் நினைத்த களம் அமைந்து விட்ட மகிழ்ச்சியில், வெறி கொண்ட வேங்கையாய் போட்டிக்கு வந்த அத்தனை வீரர்களையும் புரட்டியெடுத்து வெற்றிக் கொடி நாட்டினார் ஹமீதா பானு.
ஆரம்பத்தில் கண்டு கொள்ளப்படாத ஹமீதா பானுவின் மல்யுத்த போட்டிகள் இப்பொழுது மிக பிரபலமாக தொடங்கின. ஹமீதா பானு பங்கு பெறும் போட்டிகளை பற்றிய விளம்பரங்கள் செய்தித்தாள்கள், ரயில் வண்டிகள், பிட் நோட்டிசுகள் என பல வகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஹமீதா பானு பங்கேற்கும் போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்ததால், மைதானங்களில் சிறப்பு இருக்கைகள், பார்வையாளர் கேலரி என அமர்க்களப்பட்டது ஹமீதா பானுவின் மல்யுத்த போட்டிகள்.
அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளால், பெரும் மல்யுத்த வீரர்களின் கவனம் ஹமீதா பானு மேல் திரும்பியது. பரோடாவை சேர்ந்த பிரபல மல்யுத்த சாம்பியன் "பாபா பயில்வானை" ஒரு நிமிடம் 34 விநாடிகளில் வீழ்த்தினார் ஹமிதா பானு. அவமானம் தாங்காமல் அத்துடன் தன் மல்யுத்த வாழ்கை முடிந்து விட்டதாக அறிவித்தார் "பாபா பயிலவான்".
ஹமீதா பானுவின் புகழ் மக்களிடம் வேகமாக பரவியது. "அலிகர் அமேசான்" என்ற செல்ல பெயரில் ஹமீதா பானுவை அழைக்க தொடங்கினார்கள் மக்கள்.
அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவின் மிக பிரபலமான நம்பர் ஒன் பெண் மல்யுத்த வீரங்கனையாக திகழ்ந்தவர்தார் "அமேசான்". ஹமீதா பானுவை அலிகர் நகர அமேசான் என பொருள்படும்படி "அலிகர் அமேசான்" என அழைத்தார்கள் மக்கள்.
5 அடி 3 அங்குலம் உயரத்தில், 107 கிலோ எடையில் இருந்தார் ஹமீதா பானு. தினசரி உணவாக ஐந்து லிட்டர் பால், மூணு லிட்டர் சூப், இரண்டு லிட்டர் பழச்சாறு, ஒரு முழு கோழி, ஒரு கிலோ மட்டன், அரை கிலோ வெண்ணெய், ஆறு முட்டைகள், ஒரு கிலோ பாதாம், ரெண்டு தட்டு பிரியாணி என ஒரு சிறிய கையேந்தி பவனையே சாப்பிட்டு வந்தார் ஹமீதா பானு.
ஒரு நாளில் 9 மணி நேரம் உறக்கம், 3 மணி நேரம் உர பயிற்சி, ஆறு மணி நேரம் மல்யுத்த மயிற்சி என தவறாமல் கடைபிடித்து வந்தார் ஹமீதா பானு.
களத்தில் ஹமீதா பானு வெற்றிகளை குவித்து வந்த நிலையில், அவரது குடும்பத்தினருடன் ஹமீதா பானுவிற்கு பிரச்சினைகள் தொடங்கின. மல்யுத்தம் செய்வதற்காக மாநிலம் மாநிலமாக பயணப்பட்டுக் கொண்டிருந்த ஹமீதா பானுவை பற்றி அக்கம் பக்கத்தினர் அவதூறாக பேச, ஒரு கட்டத்திற்கு மேல் ஊர் வாயை மூட முடியாத குடும்பத்தினர் ஹமீதா பானுவை கட்டுப்படுத்த முயன்றனர்.
தான் நினைத்த வாழ்க்கை இப்பொழுதுதான் கிடைத்துள்ளது, உடனேயே அதை கைவிட சொல்லி குடும்பம் வற்புறுத்த தொடங்கியது.
தன் போராட்டங்களை நினைத்துப் பார்த்த ஹமீதா வேறு வழியின்றி தன் குடும்பத்தை கை விட முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழும் முடிவிற்கு வந்தார் ஹமீதா பானு.
அந்த சூழ்நிலையில்தான், மிர்ஸாபூரில் நடைபெற்ற மல்யுத்த போட்டி ஒன்றில் சலாம் பெஹல்வான் என்ற மல்யுத்த வீரருடன் ஹமீதா பானுவிற்கு பழக்கம் ஏற்பட்டது. ஹமீதா பானுவின் திறமையை மதித்து பெருமையாக பேசிய பெஹல்வானின் குணங்களால் கவரப்பட்ட ஹமீதா பானு தன் குடும்ப பிரச்சினைகளை சலாம் பெஹல்வானிடம் சொல்லி அழுதார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட பெஹல்வான் இனி நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்து ஹமீதா பானுவை அவருடைய சொந்த ஊரான அலிகருக்கு அழைத்து சென்றார்.
சலாம் பெஹல்வான் ஹமீதா பானுவை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தார்கள். ஹமீதா பானு தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் பங்கு பெற்று வந்தார். சலாம் பெஹல்வான் ஹமிதா பானுவிற்கு பயிற்சியாளராக செயல்பட்டார்.
ஹமீதா பானுவின் புகழ் மெல்ல இந்தியாவை கடந்து மற்ற ஆசிய நாடுகள், ஐரோப்பா, அமெரிக்க என விரிவடைந்தது. பல வெளிநாட்டு பெண் மல்யுத்த வீரர்கள் ஹமீதா பானுவுடன் மோத தங்கள் ஆர்வத்தை தெரிவித்தார்கள்.
1954ம் ஆண்டு மும்பையில் "ரஷ்யாவின் பெண் கரடி" என செல்லமாக அழைக்கப்பட்ட ரஷ்ய பெண் மல்யுத்த வீராங்கனை சாஸ்டலினை ஒரு நிமிடத்திற்குள் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஹமீதா பானு. அடுத்தடுத்த மாதங்களில் இந்தியா வந்த பல வெளிநாட்டு பெண் மல்யுத்த வீராங்கனைகளும் ஹமீதா பானுவிடம் தோலிவியடைய. ஹமீதாவின் திறமையை பார்த்த பல வெளிநாட்டு பயிற்சியாளர்களும் மல்யுத்த போட்டிகளை நடத்தும் நிறுவனங்களும் ஹமீதாவை ஐரோப்பாவிற்கு வந்து போட்டிகளில் பங்கு பெறுமாறு அழைப்பு விடுத்தனர்.
தன்னுடைய களம் விரிவடைந்து உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கபோவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார் ஹமீதா பானு. வெளிநாட்டு வீராங்கனைகளின் அழைப்பை ஏற்று ஐரோப்பா சென்று மல்யுத்த போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார் ஹமீதா பானு.
ஹமீதா பானுவிற்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் நெருக்கம் ஏற்படுவதை பெஹல்வான் விரும்பவில்லை. அவர் ஹமீதா பானு ஐரோப்பா செல்வதை தடுக்க முயன்றார். ஹமீதா பானு ஐரோப்பா சென்றல் அவரால் அதுவரை தனக்கு கிடைத்து வந்த வருமானம், மற்றும் பெயர் புகழ் தன்னை விட்டு போய் விடும் என பயந்த பெஹல்வான் ஹமீதா பானுவை இந்தியாவில் தன்னுடனேயே இருக்க வற்புறுத்தினார்.
ஆனால், ஹமீதா பானு ஐரோப்பா செல்வதில் உறுதியாக இருந்தார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்ய தொடங்கினார். ஹமீதா பானுவை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்த பெஹல்வான் ஒரு கட்டத்தில் ஹமீதா பானுவின் கை கால்களை அடித்து உடைத்து வீட்டு சிறையில் அடைத்து கொடுமை செய்ய தொடங்கினார்.
பெஹல்வானின் கொடுமைகளால் மெல்ல மெல்ல தன் உடல் வலிமையை இழக்க தொடங்கிய ஹமீதா பானு, தன் இறுதி நாட்கள் வரை கையில் ஒரு தடியுடனேயே நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஒட்டு மொத்த மல்யுத்த களத்தையும் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்த ஹமீதா பானு திடீரென மல்யுத்த களத்தை விட்டு காணமல் போனதால், அவரை வீடு தேடி வந்து அழைக்க முயன்ற பலரையும் ஹமீதா பானுவை சந்திக்க முடியாமல் வீட்டு வாசலிலேயே வைத்து துரத்தி விட்டார் பெஹல்வான்.
காலங்கள் பறந்தோட வலிமை குன்றி செல்லா காசான ஹமீதா பானுவை தனது வீட்டை விட்டு வெளியேற்றினார் பெஹல்வான்.
தனி மரமான ஹமீதா பானு, பிழைப்பிற்கு வழியின்றி ஒரு சிறிய குடிசை வீட்டில் சிறிய கடை ஒன்றை அமைத்து பூந்தி செய்து விற்று தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். 1977ம் ஆண்டு வரை உயிரோடிருந்த ஹமீதா பானு அதன் பின் எப்பொழுது இறந்தார் என்பது கூட பதிவு செய்யப்படாத வரலாறாக மாறிப் போனது.
பெஹல்வான் ஹமீதா பானுவின் பதக்கங்கள் மற்றும் உடைமைகளை விற்று தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.