அமெரிக்காவின் நியூ ஜெர்சியை மாஹாணத்தை சேர்ந்த வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட் 110 வயதில் மிகவும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வாழ்ந்து வருகிறார். கடந்த மாதம் தனது 110-வது பிறந்தநாளை கொண்டாடினார் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட். உலகின் மிக வயதான நபர்கள் பட்டியலில் இவருடன் இன்னும் 7 பேர் சேர்த்து மொத்தம் எட்டு பேர் மட்டுமே உள்ளனர்.
தனது 110 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட், இத்தனை வயதிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
உலகளவில் பெரும்பாலும் பெண்களே அதிகமாக 100 வயதை கடந்து வாழ்ந்து வருகிறார்கள் (அவர்களுக்கு மனைவிகள் இல்லாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்!!!!), 100 வயது தாண்டி வாழும் மனிதர்கள் பட்டியலில் உள்ள ஒரு சில ஆண்களில் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்டும் ஒருவர். 110 வயதிலும் மூட்டு வலிகள் தவிர்த்து வேறு எந்தப் பிரச்னையும் இன்றி மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகிறார் வின்சென்ட்.
எந்த அரசாங்க உதவியோ, உறவினர்கள், நண்பர்கள், என யாருடைய உதவியும் இல்லாமல் தன் கையே தனக்கு உதவி என்று தன் தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொண்டு, தனக்கான அனைத்து வேலைகளையும் அவரே செய்து கொண்டு, தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வரும் வின்சென்ட், தனக்கான சமையலை செய்வது, தனது மூன்று மாடி வீட்டை பராமரிப்பது, தேவைப்படும் இடங்களுக்கு தானே காரை ஓட்டி செல்வது என படு ஆக்டிவ்வாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த 20 வருடங்களாக புகை பிடிக்கும் பழக்க, 70 வயது வரை செய்த கடுமையான உழைப்பு, ஹம்பர்கர், பால் சாக்லேட், இத்தாலிய உணவுகள், எப்போதாவது பீர், தினமும் ஒரு கப் காஃபி. என சராசரி மனிதர்களை போலவே வாழ்ந்தாலும், தனது ஆரோக்கியத்திற்கென அதிகம் சிரத்தையெடுத்து மிகுந்த கவனம் செலுத்தியதில்லை என்கிறார் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட்.
உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி செய்பவர்களை பார்த்து 'ஏன் இவர்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள்?' என சொல்லி சிரிப்பாராம் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட். இந்த தகவலை சொன்னவர் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்டின் கொள்ளு பேத்தி லிஸ்டா. வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்டிற்கு ஒரு மகன், மூன்று பேரப் பிள்ளைகள், ஏழு கொள்ளு பேர குழந்தைகள் இருக்கிறார்கள்.
தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு அதிர்ஷ்டத்தை காரணமாக சொல்லும் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட், தான் தினசரி தவறாமல் அருந்தும் பால், மற்றும் தனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்வதால் ஏற்படும் சந்தோசம் ஆகியவற்றை தன் நீண்ட ஆயுளுக்கு அடிஷ்னல் காரணங்களாக சொல்கிறார்.
தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், வேறு வழியில்லாமல் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு,பால் பண்ணை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட். பால் பண்ணையில் பணிபுரிந்த ஐந்து வருடங்கள் தன் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாட்கள் என சொல்லும் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட், அந்த நாட்கள்தான் அவருடைய வாழ்க்கைக்கு பலத்தையும் நம்பிக்கையும் உறுதியையும் கொடுத்ததாக கூறுகிறார்.
மேலும், உள்ளூர் தீயணைப்பு நிலையத்தில் சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக தன்னர்வலராக பணிபுரிந்தது தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கிய காரணம் எனக் கூறுகிறார் வின்சென்ட் டிரான்ஸ்பீல்ட். அங்குதான், தனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் என தான் பார்த்த தீயணைப்பு வேலையை பற்றி பெருமிதமாக பேசி சந்தோஷம் கொள்கிறார் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட்.
இன்றும் தினமும் தான் குடிக்கும் பசும் பாலில் சுவைக்காகவும் வைட்டமின் சத்துக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் ஓவல்டின் பவுடரை கலந்து குடித்து வருகிறார் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட்.