ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஒருவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவனை, போலிசார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மே 4-ம் திகதி இரவு, ஹார்ட்வேர் கடை ஒன்றிற்கு அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் கையில் கத்தியுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் போலிஸ்.
போலிஸ் சம்பவ இடத்தை அடையும் முன்னரே அந்த 16 வயது சிறுவன் அங்கிருந்த நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டான். எனவே, போலிசார் அந்த சிறுவனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், போலிசாரிடம் சிக்காமல் தப்பிய சிறுவன் தன்னை பிடிக்க வந்த போலிசாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளான். எனவே, வேறு வழியில்லாமல் போலிசார் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ள்னர்.
குண்டு காயம் அடைந்த அந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் போலிஸ். மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை பரிசோதித்த் மருத்துவர்கள், சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டான் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பெர்த் நகர போலிஸ், அந்த சிறுவன் ஆன்லை மூலம் பயங்கரவாத செயல்கள் குறித்து பயிற்சி எடுத்துள்ளதையும், பயங்கரவாத ரகசிய கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதையும், விசாரணை மூலம் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சம்பவ இடத்தில் வன்முறை செய்யப் போவதாக முதல் நாள் (மே 3-ம் திகதி) போலிஸிற்கு சிறுவன் ஒருவன் போன் செய்து எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், அந்த சிறுவன் குறித்து மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் எனவும் பெர்த் நகர போலிசார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாகவே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் திகதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்தியுடன் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்கிருந்த பாதிரியார் ஒருவரை தான் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தினான். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுவன் மற்றும் தொடர்புடைய ஏழு பேரை சிட்னி போலிசார் கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், " ஆஸ்திரேலியா அமைதியை விரும்பும் தேசம். இங்கு வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை." என தெரிவித்துள்ளார்.