மாயன் என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்டது போல உள்ளதா? 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த உலகம் அழியப்போவதாக உலகெங்கும் பரபரப்பு செய்தி ஒன்று பரவி, மக்களை பீதியடைய வைத்தது நம் அனைவருக்குமே தெரியும். அதற்கு முக்கிய காரணம் பழங்காலத்தில் வாழ்ந்த 'மாயன்' என்று அழைக்கப்படும் பழங்குடியினரால் கணிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான். அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்றாலும் உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்கள் இதை நம்பினர்.
தற்போது மாயன் மக்கள் வாழ்ந்த நகரத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் இந்த மாயன்கள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மாயா என்பது ஒரு கலாச்சாரம். மாயா நாகரிகம் என்பது பண்டைய கால அமெரிக்க நாகரிகம் ஆகும். இது மெசோ அமெரிக்கா (மத்திய கால அமெரிக்கா) என்ற இடத்தில் தோன்றியது. இன்றும் மாயன் நாகரீகத்தை கடைபிடித்து சுமார் 70 லட்சம் பேர் வாழ்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த கலாச்சாரம் நிலைத்திருக்க இதை வழிவழியாக பின்பற்றி வரும் மாயா மக்கள் தான் காரணம்.
அந்த காலத்தில் மாயா மக்கள் பிரம்மிப்பூட்டும் கட்டிடங்களை கட்டினர். மாயன்கள் வாழும் வெவ்வேறு நகரங்களில், மன்னர்களும் மகாராணிகளும் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு பல நம்பிக்கைகளும், வழக்கங்களும் உண்டு. விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஆவிகளுடன் தொடர்பில் இருப்பது போன்ற பல வழக்கங்களை கொண்டிருந்தனர்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாயா நகரம் அழியத் தொடங்கியது. பல நகரங்களில் இருந்தும் மக்கள் வெளியேறினர். மாயா நிலப்பகுதிகள் பலவற்றை ஸ்பானிஷ் படையினர் கைப்பற்றினர். காலங்கள் கடந்து போக, காலநிலை மாற்றங்களால் மாயா நகரம் முழுவதுமே பஞ்சத்தில் தத்தளித்தது. மாயா நகரம் தொலைந்து போக இதுவே முக்கிய காரணமாக கருதுகின்றனர்.
தற்போது மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்த மாயன் நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் மெக்சிகோவின் தென்கிழக்கு மாநிலமான காம்பேச்சியில் விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள், பிரமிடுகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வாளரான 'லூக் ஆல்ட்-தாமஸ்' இணையத்தில் ஆராய்ச்சித் தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த மாயன் நகரம் இருந்ததற்கான சாத்தியங்களை கண்டறிந்தார். அவரது குழுவினரின் உதவியோடு மூன்று தொல்லியல் தளங்களையும் கண்டுபிடித்தார். அதன் மொத்த பரப்பளவு ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோ அளவுக்கு இருப்பதாக கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கும் லூக் ஆல்ட்-தாமஸ், "நான் கூகுள் சர்ச்சின் 16வது பக்கத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக ஒரு மெக்சிகன் அமைப்பு நடத்திய லேசர் ஆய்வு ஒன்று கண்ணில் பட்டது. நான் பார்த்தது ஒரு `லிடார்’ லேசர்' சர்வே தான்" என்று கூறியுள்ளார்.
'லிடார்' (Lidar) எனப்படும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்துபோன கட்டமைப்புகளை ஆய்வாளர்கள் வரைபடமாக்கி வருகின்றனர். அப்பகுதியில் புதைந்து போன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லிடார் தொழில்நுட்பம் என்பது`ரிமோட் சென்சிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் லேசர் பல்ஸ்களை பிரதிபலித்து, அந்த சிக்னல் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள பொருட்களை வரைபடமாக்கும் முறை. ஒரு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லேசர் பல்ஸ்கள் வெளியிடப்படும். அது பூமிக்கு அடியே காணப்படும் இடிபாடுகளை கண்டுபிடிக்கிறது. அப்படி எதிர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டது தான் மாயன் நகரம்.
ஆல்ட் தாமஸ், "தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தெரியாத பல தளங்கள் அங்கு இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார். மேலும் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தளங்கள் அனைத்தையும் ஆய்வாளர்களால் அகழாய்வு செய்வது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார்.
இந்த நகரத்திற்கு ஆல்ட்-தாமஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் அருகில் இருந்த ஒரு குளத்தின் பெயரை அடிப்படையாக வைத்து `வலேரியானா’ என்று பெயரிட்டனர்.
இன்றும் மாயன் நாகரிகங்களை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் மாயன் வம்சத்தைச் சேர்ந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர். மாயன் நகரம் அழிந்தாலும், அவர்களின் கலாச்சாரமும் சாதனைகளும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.