போர் காலங்களில் ஹீரோக்கள் பல வடிவங்களில் வருவார்கள். ஆனால் உலகமே ஆச்சரியப்பட்ட ஒரு ஹீரோவின் கதை முதலாம் உலகப்போரின் போது நிகழ்ந்தது. இந்த ஹீரோவுக்கு மனித முகமே இல்லை, மாறாக அது இறக்கைகள் கொண்டது. Cher Ami எனும் அந்த சிறிய புறா, தனது தீராத தைரியம் மற்றும் துணிச்சலால் 200 அமெரிக்க வீரர்களின் உயிரைக் காப்பாற்றியது.
1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. பிரான்ஸ் நாட்டின் அடர்ந்த காடுகளில் 500 அமெரிக்க வீரர்கள் ஜெர்மனி வீரர்களால் சூழப்பட்டனர். அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. தப்பிக்க எந்த வழியும் இல்லை. மேலும் துரதிஷ்டவசமாக, அவர்களே ஒருவரை ஒருவர் துப்பாக்கி குண்டுகளால் சுடத்தொடங்கினர்.
இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி அமெரிக்க முகாமுக்கு செய்தியை அனுப்புவது தான். அந்த காலத்தில், மொபைல் போன்கள், ரேடியோ போன்ற உயர்ந்த தொழில்நுட்பங்கள் இல்லாததால், தகவல்களை புறாக்களைக் கொண்டு அனுப்புவதே வழக்கம். அந்த நேரத்தில், Cher Ami எனும் ஒரே புறா மட்டுமே மீதம் இருந்தது. அதனால், முக்கியமான செய்தியை Cher Ami யின் கால்களில் கட்டி அனுப்பினர்.
Cher Ami பறந்து சென்றதும், ஜெர்மானியர்கள் அதை தடுத்து நிறுத்த பல துப்பாக்கிச்சூட்டுகளை நடத்தினர். அதன் ஒரு கால் அடிப்பட்டது, ஒரு கண் காயமடைந்தது . ஆனாலும் Cher Ami தன்னுடைய பயணத்தை நிறுத்தவில்லை. 25 மைல் தூரத்தை, 25 நிமிடங்களில் பறந்து சென்றது. Cher Ami எடுத்துச் சென்ற செய்தி மிக முக்கியமானது. அந்த செய்தி படிக்கப்பட்டவுடன், அமெரிக்க படைமுகாமில் இருந்தவர்கள் விரைந்து சென்று 500 வீரர்களில் 200 பேரின் உயிர்களை காப்பாற்றினார்கள்.
இந்த சாதனைக்கு Cher Ami யை வீரர்களும் உலக மக்களும் பாராட்டினர். Cher Ami குணப்படுத்தப்பட்டு, அதற்கு பிரான்சின் உயரிய பதக்கம் வழங்கப்பட்டது. அதன் பிறகு Cher Ami யின் பெயர் வீரத்திற்கான அடையாளமாக மாறியது. Cher Ami யின் கதை இன்று வரையில் மனிதர்கள் இடையே, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் பெருமையை உணர்த்துகிறது. ஒரு புறாவால் செய்ய முடியாததில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது!