இந்த உலகத்துல உயிருள்ள விஷயத்துக்கு மதிப்பு இருக்கோ இல்லையோ, இறந்த பிறகு தான் அதிக மதிப்பு கூடுகிறது. அதுபோல நம் உலகில் இறந்த பிறகு கலைஞர்களுக்கு விருது கொடுப்பது, இறந்த கலைஞர்களின் ஓவியங்கள் கோடிகளில் விற்பது போன்றவை நமக்கு புதிது அல்ல. இந்த பட்டியலில் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் துண்டு லட்சங்களில் ஏலத்துக்கு போனது.
ராணி எலிசபெத் (II) மற்றும் இளவரசர் லெப்டினன்ட் பிலிப் மவுண்பேட்டனின் திருமணம் நவம்பர் 20, 1947 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களின் திருமண கேக் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, சுமார் ஒன்பது அடி உயரத்தில், 200 கிலோ எடையைக் கொண்டிருந்தது. இது மற்ற கேக்குகளை போல் இல்லாமல் தனி சிறப்பு கொண்டது. அப்படி என்ன சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்த கேக் முழுவதும் உருவங்கள், மாட மாளிகைகள், கட்டிடங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2000 துண்டுகளாக வெட்டப்பட்ட கேக், பல்வேறு அனாதை இல்லங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் கேக் பராமரிக்கப்பட்டது மாளிகையில் அல்ல. எலிசபெத்தின் திருமணத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வீட்டு பணியாளர்களுக்கு வெள்ளி முத்திரை பதிக்கப்பட்ட ஒரு சிறிய பெட்டியில் கேக் துண்டுகள் அனுப்பப்பட்டது. எடின்பர்க்கில் உள்ள வீட்டுப்பணியாளரான 'மரியன் போல்சன்' என்பவர்தான் தனது கட்டிலுக்கு அடியில் இவ்வளவு காலமாக பாதுகாத்து வந்துள்ளார். என்ன இருந்தாலும் ராணியிடமிருந்து நேரடியாக வந்த கேக் அல்லவா? பத்திரமாக வைத்திருக்கத்தான் செய்வார்.
தற்போது 77 ஆண்டுகளுக்குப் பிறகு, எதற்கும் பயன்படாத, சாப்பிட முடியாத இந்த கேக் 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு ஸ்காட்லாண்டில் ஏலத்திற்கு போனது. இதை வாங்கியது யார் என்று எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பழமையான அரச கேக்கின் துண்டுகள் இதற்கு முன்பும் விற்கப்பட்டுள்ளன. கிங் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தில் பரிமாறப்பட்ட கேக்கின் ஒரு பகுதி 2021 ஆம் ஆண்டில் ஏலத்தில் 2,565 டாலருக்கு விற்கப்பட்டது.
ஏற்கனவே, அரசி எலிசபெத் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வகையைச் சேர்ந்த கார் 2.37 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டதாம்.
ராணி எலிசபெத்தின் கேக் சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, “இவ்வளவு பழைய கேக்கை 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி என்ன செய்யப்போகிறார்கள்?” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.