உலகில் தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பணத்தின் மீது மோகம் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதித்து விட நினைக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் என இருபாலரும் சரி சமமாக பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் யாரும் கேள்விப்படாத மோசடி ஒன்று நடந்துள்ளது. அதுதான் புத்த துறவியை ஏமாற்றி மோசடி செய்திருக்கும் அக்கிரமம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது. அதற்காக சட்டென்று பரிதாபப்பட்டுவிட வேண்டாம். இவர்கள் செய்த காரியத்தை நினைத்து மொத்த தாய்லாந்துமே அவமானப்படுகிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருப்பதே கலிகாலம். உலகமே நிம்மதியை தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு படி மேலாக சென்று, மனைவி, குழந்தை என டென்ஷன் நிறைந்த இல்லற வாழ்க்கையே வேண்டாமடா சாமி என்று முற்றிலுமாக விடுபட்டு துறவியாக வாழ விரும்புகின்றனர். இதற்கென்றே சில மதங்களில் மதத்தலைவர்கள் போன்று ஒருவர் மற்றவர்களை வழி நடத்துவார். அந்த வகையில் புத்த மதத்தில் ஆர்வம் கொண்டவர்கள் அம்மதத்தில் சேர்ந்து துறவியாக வாழ்கின்றனர். குறிப்பாக தாய்லாந்தில் பல துறவிகளை நாம் பார்க்க முடியும். அங்கு சுமார் 2 லட்சம் துறவிகளும், 85 ஆயிரம் இளைய துறவிகளும் உள்ளனர். அந்நாட்டு மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் புத்த மதத்தையே பின்பற்றுகிறார்கள்.
புத்த துறவிகள் நல்ல எண்ணங்களை மட்டுமே கேட்டுக் கொண்டும், பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட துறவிகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் இவர்கள் செய்த சில்மிஷ வேலைகளை கேட்டால் கண்டிப்பாக ஆடிப்போய் விடுவீர்கள். வழக்கமாக இளைய துறவிகள் தான் பாலியல் குற்றத்தில் சிக்குவார்கள். ஆனால் இம்முறை பல மூத்த துறவிகளும் வசமாக சிக்கியுள்ளனர். இந்த தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்ட துறவிகளை ஏமாற்றி, தனது ஹனி டிராப் வலையில் விழ வைத்து, சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை சுருட்டியுள்ள 'மிஸ் கோல்ஃப்' என்ற பெண்ணை பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.
இவை அனைத்தும் வெளிவந்ததற்கான காரணம் கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு நிகழ்வு. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், பிரபல புத்த ஆஸ்ரமத்தின் தலைவராக இருக்கும் ஒருவர் தனது துறவற வாழ்க்கையில் இருந்து திடீரென விலகி விட்டார். துறவி ஏன் திடீரென துறவறத்தை விட்டுப் போனார் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. அவரை யாராவது மிரட்டினார்களா? அல்லது துறவரத்தை கைவிட யாராவது நெருக்கடி தந்தார்களா? என்ற பல சந்தேகங்கள் எழுந்தன. அதனால், இது குறித்து போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
புத்த துறவர்கள் மிஸ் கோல்ஃப் என்ற பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரகசியமாக இதற்காகவே பெரிய ஹோட்டலில் அறை எடுத்து, அங்கு அந்த பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அக்காட்சிகளை ரகசியமாக அவர்களுக்கு தெரியாமல் மிஸ் கோல்ஃப் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவுகள் தான் அப்பெண்ணின் பெரிய பலமே. இதை வைத்து துறவிகளிடம் பணம் கேட்டு மிரட்டி , தர மறுத்தால் வீடியோக்களை வெளியிடுவதாக பயம் காட்டியுள்ளார். இதில் பயந்து போன துறவிகள் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளனர்.
முதலில் இந்த பணம் எங்கிருந்து வந்தது தெரியுமா? புத்த ஆசிரமத்திற்கு நன்கொடையாக பலரும் கொடுத்து உதவிய தொகை தான் அது. மிஸ் கோல்ஃப் ஒரு துறவியுடன் நெருங்கி பழகி, தன்னுடைய வலையில் சிக்க வைத்து, பிறகு தான் பொய்யாக கர்ப்பமாக இருப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சித்துள்ளார். "உங்கள் குழந்தையை என்னுடைய வயிற்றில் சுமக்கிறேன். அந்த குழந்தைக்கு ஆதரவு தொகையாக 72 லட்சம் பாட் ( 2 கோடி ரூபாய்) தர வேண்டும்" என்று மிரட்ட, பயந்து போன துறவியோ துறவறமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாமடா சாமி என்று துறவரத்தை விட்டே தெறித்து ஓடி விட்டாராம்.
இதுவரையில் அப்பெண் சுருட்டிய மொத்த தொகை கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய். சம்பாதித்த பணத்தையும் சூதாட்டத்தில் வைத்து பெரும் தொகையை இழந்துள்ளார் மிஸ் கோல்ஃப். போலீசார் அப்பெண்ணின் வீட்டில் நடத்திய சோதனையில், கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் லேப்டாப்பில் சேகரித்து வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அத்தனை ஆபாச வீடியோக்களும் துறவிகளை மிரட்டி பணம் பறிக்க சேகரிக்கப்பட்டவையாம். அதிலும் ஒன்பது தலைமை துறவிகளின் வீடியோக்கள் சிக்கியுள்ளன. இவைகளை வைத்து மிரட்டி மூன்று வருடங்களில் மட்டுமே சேகரித்த தொகை 385 மில்லியன் பாட் (100 கோடி ரூபாய்).
இதில் துறவி ஒருவர் அப்பெண்ணை ஷாப்பிங் அழைத்துச் சென்று 75 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கித் தந்திருக்கிறார். துறவிகள் செலவிட்ட தொகை அனைத்தும் ஆசிரமத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டவை என்பதை தெரிந்து, அந்நாட்டு மன்னர் கடும் கோபத்தில் உள்ளாராம். தனது பிறந்த நாளுக்கு 80க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்ப முடிவு செய்திருந்த மன்னர், தற்போது அவை அனைத்தையும் ரத்து செய்து விட்டார். ஒரு இளம்பெண் நினைத்தால் பிரம்மச்சாரிய விதிகளையும் மீற வைக்க முடியுமா என்று மக்கள் உறைந்து போயுள்ளனர்.
இந்த திடுக்கிடும் தகவல்களை தெரிந்த அந்நாட்டு அரசு விதிகளை மீறும் துறவிகளுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. புத்த மத அமைப்பின் நிர்வாக அமைப்பு துறவற விதிமுறைகளை குழு அமைத்து மறு ஆய்வு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.