இந்த உலகில் யாரும் நினைத்துப் பார்த்திடாத அளவிற்கு ஒரு அரிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. அதுதான் ஆப்பிரிக்காவில் உருவாக இருக்கும் புதிய பெருங்கடல். பெருங்கடல் உருவாகிறதா? ஒன்றும் புரியலையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட டெக்கானிக் தகடுகளின் மாற்றத்தால், ஆப்பிரிக்க பூமி இரண்டாகப் பிளவு பட்டு , அதில் ஒரு புதிய பெருங்கடல் உருவாக இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த பூமி 71% தண்ணீரால் சூழப்பட்டது. பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு மற்றும் ஆர்டிக் ஆகிய ஐந்து தனித்துவமான பெருங்கடல்களால் இந்த பூமி சூழப்பட்டுள்ளது. ஆறாவதாக உருவாக போகும் புதிய பெருங்கடல் பூமியில் பெரிதளவில் புவியியல் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். புவியலாளர்களின் கூற்றுப்படி ஆப்பிரிக்க கண்டம் மாறுபட்ட நிலப்பரப்புகளுடன் ஒரு அரிய புவியியல் நிகழ்வை அனுபவித்து வருகிறது.
இதுபோன்று பிரம்மாண்ட பிளவு ஏற்பட்டதற்கான காரணம் 2005 ஆம் ஆண்டில் நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்வு. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் 420 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மேலும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டன. இதன் விளைவாக பூமியின் மிகவும் கடினமான இடங்களில் ஒன்றான அஃபார் பகுதியில் 60 கிலோ மீட்டர் நீளம் வரை பிளவு ஏற்பட்டது.
ஆப்பிரிக்க கண்டத்தின் நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக டெக்கானிக் தகடுகளின் இடம்பெயர்வால் நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதன் விளைவாக ஒரு புதிய பெருங்கடல் 50 மில்லியன் ஆண்டுகளில் உருவாகப் போகிறது. இதே போன்ற நிகழ்வு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சூப்பர் கண்டமான 'பாங்கியா' பிரிந்து செல்லத் தொடங்கியது. பாங்கியாவின் உடைவு இறுதியில் அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடலை உருவாக்கியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பிளவு இரண்டு டெக்கானிக் தகடுகளின் விளைவாகும் - கிழக்கில் சோமாலிய தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு. இந்த இரண்டு டெக்டானிக் தகடுகளும் விலகிச் சென்று, பிளவு ஆழம் அடைவதற்கு காரணமாகின்றன. பூமியில் ஏற்பட்ட பிளவு 3500 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது. இது சிவப்பு கடலில் ஆரம்பித்து மொசாம்பிக் வரை செல்கிறது. வருடத்திற்கு ஒரு சென்டிமீட்டர் அளவு பிளவு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் சோமாலியன் ஆகிய மூன்று கண்ட தகடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள பகுதியை "அஃபார்" என அழைக்கின்றனர். இந்தப் பகுதியில்தான் புதிய பெருங்கடல் உருவாகும்.
"ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலில் இருந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அஃபார் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பிளவு பள்ளத்தாக்கில் புகுந்து ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும். இதனால் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி தனி சிறிய கண்டமாக மாறும்", என்று கடல் புவி இயற்பியலாளரும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கென் மெக்டொனால்ட் கூறினார்.
முன்னதாக, ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் உருவாவதற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் வரை எடுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், தற்போது இந்த நிகழ்வு வேகம் எடுத்து உள்ளதாகவும், 10 லட்சம் ஆண்டுகளிலேயே புதிய பெருங்கடல் உருவாகிவிடலாம் என புவி அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுபோன்று இயற்கை அதிசயங்கள் உலகெங்கும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளில், பூமி தற்போது இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.