ஆப்பிரிக்காவில் தனது மனைவியைக் கொன்று அவர் கார் விபத்தில் இறந்து விட்டதாக உறவினர்களிடம் நாடகமாடிய கணவன். இறுதிச் சடங்கு நடத்தியபோது கண்ணெதிரே வந்து நின்று "சர்ப்ரைஸ்! நான் உயிரோட தான் இருக்கேன்" என்று அதிர்ச்சி கொடுத்த மனைவி. பத்து வருடங்கள் தன்னோடு வாழ்ந்த மனைவியை கொலை முயற்சி செய்ய காரணம் என்ன? ஆப்பிரிக்காவை அதிர வைத்த சம்பவம் குறித்து ஒரு பார்வை.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த நொவெல்லா ருக்குண்டோ என்ற பெண் அகதியாக ஆஸ்திரேலியாவிற்கு குடி புகுந்தாள். தனது ஐந்து குழந்தைகளோடு வாழ்ந்து வந்த நொவெல்லா, பலெங்கா கலாலா என்ற நபரை திருமணம் செய்து 10 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. 2015 ஆம் ஆண்டு கலாலாவிற்கு தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாக எண்ணி அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான்.
நொவெல்லா தனது வளர்ப்புத் தாய் இறந்ததற்காக அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆப்பிரிக்காவிற்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் தனது எட்டு குழந்தைகளையும் கணவரிடம் ஒப்படைத்து விட்டு ஆப்பிரிக்கா சென்றாள். இதுதான் நொவெல்லாவை தீர்த்துக்கட்ட சரியான சமயம் என்று எண்ணி பல லட்சம் ரூபாய் செலவு செய்து அடியாட்களை நியமித்தான் கலாலா. சரியான சமயம் பார்த்து தனது மனைவியை கொன்று விட வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் அவனுக்கு இருந்தது.
ஆப்பிரிக்காவில் நொவெல்லா ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தாள். தனது வளர்ப்புதாய் இறந்த சோகத்தில் அழுது கொண்டிருந்த நொவெல்லாவிற்கு கலாலா போன் செய்து ஆறுதல் கூறினான். எப்படியாவது நைசாக பேசி அவளை ஹோட்டலின் வெளியே வர வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தான் கலாலா. ஆனால் நொவெல்லா தனது கணவர் தன் மீது எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்று நம்பி அவன் கூறியது போலவே சிறிது நேரம் வெளியே நடக்கச் சென்றாள் . ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும், சரியான சமயம் பார்த்து கலாலா நியமித்திருந்த கும்பல் துப்பாக்கியை அவளிடம் நீட்டி, காரில் ஏற வைத்து அவளை கடத்திச் சென்றனர்.
நொவெல்லாவிற்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் கதறினாள். ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அவளை கட்டி போட்டனர். கடத்திச் சென்றவர்களில் ஒருவன் நொவெல்லாவைப் பார்த்து, "அப்படி என்ன தவறு செய்தாய்? உன்னை கொல்லும் அளவிற்கு ஏன் அவன் வெறியோடு இருக்கிறான்" என்று கேட்டான். நொவெல்லா 'நீங்கள் யாரைப் பற்றி கேட்கிறீர்கள், எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றாள். உடனே அவன் கலாலாவிற்கு போன் செய்து, "பாஸ், நீங்க சொன்ன மாதிரியே அவளைக் கடத்தி விட்டோம்" என்றான். "அவளைக் கொன்றுவிடு, அவளைக் கொன்றுவிடு" என்று சத்தமிட்ட தன் கணவனின் குரலை கேட்ட நொவெல்லா அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து சுயநினைவிற்கு வந்த நொவெல்லாவை பார்த்து அடியாட்கள், "நாங்கள் உன்னை கொல்லப் போவதில்லை; நாங்கள் பெண்களையும் குழந்தைகளையும் எப்போதுமே கொல்ல மாட்டோம்" என்றனர். "உயிர் பிழைக்க ஆசை இருந்தால் உடனே இந்த நாட்டை விட்டு ஓடி விடு. எங்களால் முடியவில்லை என்றாலும் வேறொருவர் மூலம் உன்னைக் கொல்ல உன் கணவன் முயற்சிக்கலாம்" என்றும் கூறினர். பிறகு ஒரு மெமரி கார்டை அவளிடம் கொடுத்து, "இதில் நாங்கள் உன் கணவரிடம் பேசிய அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன" என்று கூறி அவளை விடுவித்து விட்டனர்.
நொவெல்லாவை கடத்திய கும்பல் கலாலாவிற்கு போன் செய்து அவளை எப்படி கொன்றார்கள், புதைத்தார்கள் என்பது வரை சொல்லி மேலும் சில லட்சங்களை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மனைவி இறந்ததை உறுதி செய்த கலாலா தலைகால் புரியாமல் குதித்தான். உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து நொவெல்லா கார் விபத்தில் இறந்து விட்டதாக நாடகமாடினான். நொவெல்லாவிற்கு இறுதிச் சடங்கும் ஏற்பாடு செய்து மனைவி இறந்த ஆனந்தம் ஒரு பக்கம் இருக்க, முகத்தில் துயரத்தோடு இருக்கும்படி வெளிக்காட்டிக் கொண்டான்.
இறுதிச் சடங்கிற்கு வந்த அனைவரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய கலாலா, அவனை நோக்கி ஒரு உருவம் வருவதைப் பார்த்து ஆடிப் போய்விட்டான். "சர்ப்ரைஸ்! நான் உயிரோட தான் இருக்கேன்", என்று சொல்லி தன் கணவருக்கு ஷாக் கொடுத்தாள் நொவெல்லா. கலாலாவிற்கு பயத்தில் கால்கள் உதறின. "இது உண்மையா? இல்ல நான் பாக்குறது நொவெல்லாவின் ஆவியா" என்று கூறி அவளை தொட்டுப் பார்த்தான். உடனே ஐயோ, என்னை மன்னிச்சிடு என்று சொல்லி அவளின் காலில் விழுந்து சரணடைந்தான் கலாலா.
நொவெல்லா போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தாள். கைது செய்யப்பட்ட கலாலாவிற்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. என்னதான் கணவன் மனைவிக்குள் எவ்வளவோ சண்டைகள் வந்திருந்தாலும் கலாலா செய்த இந்த குற்றத்தை மன்னிக்கவே முடியாது என்று நொவெல்லா தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தாள்.