இந்த பூமியில் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதுவும் இயற்கை ரீதியாக புதிது புதிதாக அறிவியலாளர்கள் ஏதாவது ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர். நம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சக்திகள், மர்மமான மற்றும் உயிருக்கு ஆபத்தான இடங்களால் நிறைந்துள்ளது பூமி. இங்கு புவியீர்ப்பு விசையே இல்லாத இடங்கள் கூட உள்ளது. ஆனால் சிலவற்றிற்கு மட்டுமே நாம் காரணம் கண்டுபிடித்து இருக்கிறோம். பல ஆச்சர்யங்களும் அதிசயங்களும் இன்னும் விடை தெரியாத மர்மங்களாகவே மனிதர்களை குழப்பி வருகின்றன.
அண்டார்டிகா, பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் பகுதியாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாகவே வந்து சேர்வதால் கண்டம் முழுவதுமே பனிக்கட்டியாக உறைந்து போய் உள்ளது. ஆண்டுக்கு 200 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்கிறது என்றால் நம்ப முடியுமா?
'தாமஸ் க்ரிஃபித் டெய்லர்' என்ற நபர் தனது அண்டார்டிக் பயணத்தின் போது ரத்த நீர்வீழ்ச்சி ஒன்றினை கண்டுபிடித்தார். இந்த நீர்வீழ்ச்சி பனிப்பாறையில் இருந்து சுமார் 15 மீட்டர் உயரத்தில் 'போனி' என்ற ஏரியில் பாய்கிறது.
பனிப்பாறையின் நடுவில் ஒரு விசித்திரமான சிவப்பு நிற கறையை அவர் கவனித்தார். அவர் ஆரம்பத்தில் இந்த நிறம் ஏதோ ஒரு வகையான சிவப்பு பாசிகளால் ஏற்பட்டதாக நினைத்தார். மேலும் ஆய்விற்கு பயன்படுத்த தேவையான மாதிரியை (Samples) அவரால் சேகரிக்க முடியவில்லை. இந்த பள்ளத்தாக்கு "டெய்லர் கிளேசியர்" என்று இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் புதிர் தெரியாமல் இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது இதற்கு விடையை கண்டுபிடித்துள்ளனர்.
தண்ணீரின் சிவப்பு நிறம் இரும்பு ஆக்சைடால் (iron oxide) ஏற்படுகிறது, இது பனிப்பாறையின் கீழ் சிக்கியுள்ள பண்டைய கடல் நீர் காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது உருவாகிறது. கடல் நீர் பல்வேறு வகையான பாக்டீரியாக்களின் தாயகமாக உள்ளது. அவை பனிப்பாறை சூழலின் கடுமையான நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற பாக்டீரியாக்கள் உருவாக முக்கிய காரணம் அங்கு ஒளி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை மற்றும் மிகக் குறைந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
ரத்த அருவியின் தன்மை செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் சூழ்நிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியை நன்கு ஆராய்ச்சி செய்தால், செவ்வாய்க்கிரகத்தின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த அருவி சுமார் இரண்டு மில்லியன் வருடத்துக்குமுன் தோன்றியது என்று கூறியுள்ளனர்.
தற்போது இந்த ரத்த அருவியின் தண்ணீர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று மட்டுமே கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த அருவி எங்கு உருவாகிறது, எங்கு முடிகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுகொண்டிருக்கிறது. விரைவில் இந்த 'ரத்த அருவி' எங்கு உருவாகிறது, எங்கு முடிகிறது என்று கண்டுபிடித்து விடுவார்களாம்.
இந்த இடத்தில் வாழ்ந்த பூர்வ குடிமக்களை எதிரிகள் கொன்று விட்டதாகவும் அவர்கள் ரத்தம் தான் அருவியாக பெருகி ஓடுகிறது எனவும் அங்கு வாழ்ந்து வரும் மக்கள் கூறுகின்றனர்.
இது போன்ற ஆராய்ச்சிகள் நடத்துவதன் மூலம் அண்டார்டிக் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த பொது ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் மக்களிடையே ஊக்குவிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ரத்த அருவியை பற்றிய கேள்விகளுக்கு விடை தெரிந்தாலும் இன்னும் பூமியில் மர்மம் நிறைந்த இடங்களுக்கு விடை தெரியாமல் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.