உங்களுக்கு பேட்மேன் தெரியும் ஆனால் 'கேட் பாய்' தெரியுமா? கற்பனை கதாபாத்திரமான 'வவ்வால் மனிதன்' பேட்மேன் கூட சிலபல கருவிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்திதான் இருளில் உள்ள பொருட்களைப் பார்க்க முடியும். ஆனால் இந்த சின்ன பையனுக்கு இருட்டில் இருக்கும் பொருட்களைப் பார்க்க எந்த கருவியோ ஆயுதமோ தேவையில்லை, தங்கம் போல் ஜொலிக்கும் அவனது வெறும் கண்களே போதும். உலகிலேயே முதன்முதலாக தன் பிறவியில் இருந்தே இருளில் இருக்கும் பொருட்களை நன்றாக பார்க்க கூடிய சக்தி கொண்ட சிறுவன்தான் இந்த 'கேட் பாய்'.
இச்சிறுவன் பெயர் 'நாங் யூகி', ஆனால் தற்போது அனைவரும் இவனை 'கேட் பாய்' அல்லது 'ஸ்டார் சைல்டு' என்று அழைக்கின்றனர். அது என்ன 'கேட் பாய்?' அதாவது பூனை போன்ற கண்களை உடையவ சிறுவன். பூனை மற்றும் ஒரு சில உயிரினங்களால் எப்படி இரவு நேரங்களில் இருட்டில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறதோ, அதேபோல் இச்சிறுவனாலும் இரவு நேரங்களில் இருட்டில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடியும்.
சிறுவன் 'நாங் யூகி'யின் கண்கள் தங்க நிறத்தில் தகதகவென மின்னி, பார்க்கவே மிகவும் அபூர்வமாக தோற்றமளிக்கின்றன.
'நாங் யூகி' கைக்குழந்தையாக இருந்த பொழுதே அவனது கண்களின் தகடக தங்க நிறத்தை கவனித்த அவனது பெற்றோர்கள், மற்றவர்களைப் போல 'நாங் யூகி'க்கும் சாதாரண கண்களின் தன்மையை இருக்கும் என நினைத்தனர். ஆனால், சில நாட்கள் கழித்தே 'நாங் யூகி'யின் தகதக தங்க கண்களின் அற்புதமும் அபூர்வமும் அவர்களுக்கு தெரிய வந்தது.
'நாங் யூகி' இரவு நேரங்களில் இருட்டில் டார்ச் லைட் எதுவும் இல்லாமலேயே வீட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, இருட்டில் வீட்டிற்கு வெளியில் உள்ள மரங்களில் இருக்கும் பறவைகளை பார்த்து ரசிப்பது போன்ற விசித்திர பார்வை தன்மையுடன் இருந்தது அவனது பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.
'வாவ்' என வாயை பிளந்த நாங் யூகியின் பெற்றோர் அவனை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். நாங் யூகியின் கண்களில் கடப்பாறை விட்டு குடையாத குறையாக ஆராய்ச்சிகளை செய்த மருத்துவர்கள், கடைசியில் "இது ஒருவித குரோமோசோம் குறைபாடு" என கூறி விளக்கமளித்தனர்.
இந்த தகதக தங்க கண்களை மருத்துவ துறையில் 'கேட் ஐ சின்ரோம் (CES)' என கூறுகின்றனர்.
குரோமோசோம்கள் மனித உயிரணுக்களின் கருவில் அமைந்துள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும், மேலும் ஒரு குழந்தை தங்கள் பெற்றோரிடமிருந்து பெறும் மரபணு தகவல்களை எடுத்துச் செல்வதற்கு உதவும் காரணியாகவும் குரோமோசோம்கள் விளங்குகின்றன. பொதுவாக, ஒரு மனிதனுக்கு தாயிடமிருந்து 23 மற்றும் தந்தையிடமிருந்து 23 என மொத்தம் 46 (23 ஜோடி) குரோமோசோம்கள் இருக்கும்.
எனவே, 'நாங் யூகி' யின் தகதக தங்க கண் 'கேட் ஐ சின்ரோம்' அவனது தாய் அல்லது தந்தைக்கு இருந்திருக்க மேண்டும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கேட் ஐ சின்ரோம் (CES) என்பது கண்டிப்பாக பெற்றோர்களின் மரபணுவில் இருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. இது முற்றிலும் குரோமோசோம்களின் வேலையாக இருந்தாலும், மனிதர்கள் பிறந்த பின் அவர்களின் குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றங்களே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பூனைகள் மற்றும் பிற விலங்குகளும் கூட இரவு நேரங்களில் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் அவற்றின் கண்களில் உள்ள 'டேபெட்டம் லூசிடம்' எனப்படும் உயிரணுக்களின் அடுக்குகள் தான். இந்த 'டேபெட்டம் லூசிடம்' உயிரணுக்களின் உதவியால் பூனைகள், வவ்வால்கள் மற்றும் சில உயிரினங்களால் இரவு நேரங்களில் இருட்டில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறது.
சிறுவன் 'நாங் யூகி'யின் கண்களிலும் 'டேபெட்டம் லூசிடம்' போன்ற உயிரணுக்கள் இருப்பதால்தான் அவனது கண்கள் தகதக தங்க நிறத்தில் இருப்பதுடன், இருட்டில் உள்ள பொருட்களை அவனால் தெளிவாக பார்கமுடிகிறது என மருத்துவர்கள் பெரிய விளக்கங்களை கொடுக்கின்றனர்.
கருஞ்சிறுத்தை, பூனை, போன்ற சில விலங்குகளின் கண்களும் தகதகவென தங்க நிறத்தி இருப்பதை நாம் காணமுடியும் அவற்றிற்கும் காரணம் இந்த 'டேபெட்டம் லூசிடம்' எனப்படும் உயிரணுக்களே.