நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில், தனியார் இஞ்சினியரிங் காலேஜில் படித்து வரும் மாணவன் பகவதி. கடந்த புதன் கிழமை(மே 1ம் திகதி) இரவு, நாமக்கல் பேருந்து நிலையம் எதிரேயுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏழு சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கி சென்றுள்ளார். வீட்டில் ஆசையாக சிக்கன் ரைஸ் பார்சலை பிரித்து கொஞ்சம் சிக்கன் ரைஸை சாப்பிட்ட பகவதியின் தாய் நதியா, சிக்கன் ரைஸில் இருந்து கெட்ட வாடை வந்ததால், அந்த சிக்கன் ரைஸை தொடர்ந்து சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டார். ஆனால் பகவதியின் 70 வயது தாத்தா சண்முகநாதன் இருந்த பசி கொடுமையில், வாடையை பொருட்படுத்தாமல் அந்த சிக்கன் ரைஸை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்.
நடு இரவில் தாத்தா சண்முகநாதனுக்கு வயிற்று வலி, குமட்டல் என என்னென்னவோ தொந்தரவுகள் ஏற்பட, நடு இரவில் சண்முகநாதனை நாமக்கல் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். தாத்த சண்முகநாதனை உடன் இருந்து கவனித்துக் கொண்டார் பகவதியின் தாய் நதியா. கொஞ்ச நேரத்தில் சிக்கன் ரைஸில் கொஞ்சமாக சாப்பிட்ட பகவதியின் தாய் நதியாவிற்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட, அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் பூச்சிக் கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டது கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், துயரம் என்னவென்றால் தாத்தா சண்முகநாதன் பூச்சிகொல்லி மருந்தின் வீரியத்தால் உயிரிழந்து விட்டார். உடனே, நாமக்கல் மாவட்ட போலிஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பகவதி சிக்கன் ரைஸ் வாங்கிய ஹோட்டலுக்கு விரைந்த போலிஸ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான சோதனைகளை நடத்தியதுடன் தீவிர விசாரணையால் ஹோட்டல் முதலாளி முதல் பாத்திரம் கழுவும் ஆயா வரை அல்லு கழண்டு போய் பீதியில் நின்றிருக்கிறார்கள். போதாதற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, ஹோட்டலுக்கே நேரில் சென்று விசாரிக்க 105 டிகிரி வெயிலை விட சூடாக, சிக்கன் ரைஸ் கொலை நமக்கல் மாவட்டத்தை கொதிக்க வைத்து விட்டது.
பல கட்ட சோதனை விசாரிப்பிற்கு பின் ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்தார்கள் போலிஸ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.
சம்பவம் நடந்த மே 1ம் திகதி மொத்தம் சுமார் 80 சிக்கன் ரைஸ்களை விற்றுள்ளார் ஹோட்டல்காரர். ஆனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. 7 சிக்கன் பார்சலை வாங்கி சென்ற பகவதியின் தாத்த சண்முகநாதன் மற்றும் தாய் நதியா தவிர மிச்சம் 5 பார்சல்களை சாப்பிட்ட யாருக்கும் எதுவும் ஆகவில்லை. எனவே பார்சலை வாங்கிச் சென்ற பகவதியின் மேல் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பகவதியை ஸ்டேஷனுக்கு பார்சல் செய்து, 'பக்குவமாக' விசாரித்ததில், பிஞ்சு உடம்பு, பஞ்சு பஞ்சா பிஞ்சிடும் என்ற பயத்தில், பகவதி உண்மைகளை எல்லாம் கொட்டி விட்டான்.
நாமக்கல்லில் தனியார் இஞ்சினியரிங் காலேஜில் படித்து வரும் பகவதிக்கு, கன்னாபின்னாவென கேர்ள்பிரண்ட்ஸ், கூடவே போதை பழக்கம். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாகவும் பகவதி தன் தாய் நதியாவிடம் சொல்ல, முதலில் படித்து முடி பிறகு பார்க்கலாம் என, தாய் நதியாவும் தாத்தா சண்முகநாதனும் அறிவுரை சொல்லியுள்ளார்கள்.
மீண்டும், மீண்டும் பகவதி தன் கேர்ள்பிரண்ட்ஸுடன் சுற்றுவதும், போதையில் புரண்டு கொண்டிருப்பதும் வாடிக்கையாகி விட, தாய் நதியாவும் தாத்தா சண்முகநாதனும் கொஞ்சம் கடுமையாகவே பகவதியை கண்டித்துள்ளனர்.
ரைட்டு, இவர்களுக்கு சொன்னால் புரியாது. ரெண்டு சிக்கன் ரைஸ் பார்சல் சொல்ல வேண்டியதுதான், என முடிவெடுத்த பகவதி, மே 1ம் திகதி தன் திட்டப்படி மொத்த குடும்பத்திற்கும் சிக்கன் ரைஸ் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வரும் வழியில், அதில் இரண்டு பார்சல்களில் மட்டும் பூச்சி கொல்லி மருந்தை கலந்து விட்டான். தாய், மற்றும் தாத்தாவிற்கு மட்டும் பூச்சி கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்து விட்டான்.
தன் கிறுக்கு தனத்தை போலிஸிடம் பகவதி சொல்லி சரண்டரான நிலையில், சிகிச்சையில் இருந்த தாய் நதியாவும் உயிரிழந்து விட்டார்.
மொத்தத்தில் போதைக்கு அடிமையான ஒரு இளைஞனால் இரண்டு உயிர்கள் பலியாகி விட்டார்கள். நாமக்கல் போலிஸ் பகவதியை கைது செய்து, மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை கவனிக்க தொடங்கியுள்ளனர்.
சீல் வைக்கப்பட்ட ஹோட்டல் முதலாளியின் நிலைதான் பரிதாபம். அவர் ஹோட்டல் மீண்டதா? அவர் நிலமை என்னவென்பது இப்போதைக்கு தெரியவில்லை!!!!!!!