ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் சோகென் கட்டோ என்ற வயதான மனிதர் வாழ்ந்து வந்தார். ஜூலை 22, 1899 இல் பிறந்த இவர் தனது மனைவி இறந்த பிறகு, மகள் மற்றும் பேத்தியுடன் ஒரே அப்பார்ட்மென்டில் தனித்தனி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது 111. டோக்கியோவின் வயதான நபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டோவிற்கு அவரது 111 வது பிறந்தநாளில் வாழ்த்துவதற்காக அரசு நகர அதிகாரிகள் நீண்ட நாட்களாக முயன்றனர்.
கட்டோவின் குடும்ப உறுப்பினர்கள் எந்த அதிகாரிகளையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. சிலரிடம் கட்டோ யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும், வேறு சிலரிடம் அவர் கிஃபு மாகாணத்தில் இருக்கிறார் என்றும் முன் பின் முரணாக பேசினர். 'முயல் பிடிக்கும் நாயை மூஞ்சிய பார்த்தால் தெரியாதா' என்பது போன்று அவர்களின் நடத்தை இருந்தது.
சந்தேகமடைந்த அரசு அதிகாரிகளும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கட்டோவின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்தனர். உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இது வீடா இல்லை குப்பை கிடங்கா என்பது போல வீடு முழுக்க துர்நாற்றமும் குப்பையுமாக இருந்தது. தண்ணீர் குழாயை திறந்தால் குப்பை கொட்டியது. சரி, வந்த வேலையை பார்ப்போம் என்று அதிகாரிகள் கட்டோவைத் தேடி அவரது படுக்கையறைக்கு சென்றனர். கட்டோவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற அதிகாரிகள், படுக்கையில் மம்மி போன்று உள்ள அவரது உடலைக் கண்டு உறைந்து போயினர். உடனே அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து கட்டோவின் பேத்தியிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் கூறியது,"என் தாத்தா 32 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எங்களால் வெளியில் இருந்து கதவைத் திறக்க முடியவில்லை. என் அம்மா, 'அவரை அங்கேயே விடு' என்று கூறினார். அதன் பிறகு நாங்கள் அவரை கவனிக்க விருப்பமில்லாமல் அப்படியே விட்டு விட்டோம்."
பிரேத பரிசோதனையில் கட்டோவின் மரணத்திற்கான காரணம் மற்றும் நேரத்தை மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. அதனால் அதிகாரிகள் அவர் இருந்த வீட்டிற்கு சென்று தேடுதல் பணி நடத்தினர். 5 நவம்பர்,1978 தேதியிட்ட செய்தித்தாளைத் தவிற வேறு புதிய செய்தித்தாள்கள் எதுவும் அறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அவர் இறந்து 30 வருடங்கள் ஆகி இருக்கலாம் என்று கியோடோ என்ற பிரபல செய்தித்தாளில் உறுதிபடுத்தப்பட்டன.
2010 வரை கட்டோவிற்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்ட பணத்தை, கிடைக்கும் வரை லாபம் என்று மகள் மற்றும் பேத்தி தனது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். 9.5 மில்லியன் யென்னில் இருந்து சுமார் 6.1 மில்லியன் யென் ($70,500) கட்டோவின் வங்கியில் இருந்து சுருட்டப்பட்டது.கட்டோவின் மகள் செய்த தவறுக்காக இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வின் வெளிப்பாடாக, டோக்கியோ அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் இல்லாத முதியோர்களின் பட்டியலை எடுத்தனர். அப்போது 113 வயதான ஃபுசா ஃபுருயாவைக் கண்டுபிடிக்க முயன்றனர், அவர் தனது மகளுடன் வசித்து வருவதாக பதிவு செய்யப்பட்டிருந்தார். விசாரணை நடத்தியதில் புருயாவின் மகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தாயைப் பார்க்கவில்லை என்று தெரியவந்தது.
ஃபுருயா காணாமல் போனது மற்றும் கட்டோவின் மரணம் பற்றிய செய்திகள் நாடு தழுவிய விசாரணையைத் தூண்டின. 77,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் இருந்திருந்தால் 120 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது பெற்றோரின் இறப்பு சான்றிதழை பதிவு செய்யாமல் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், பலருக்கு தனது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூட தெரியாமல் இருக்கலாம்.
186 வயதில் ஒரு மனிதன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 186 ஆண்டுகள் மனிதன் வாழ்வது சாத்தியம் இல்லை அல்லவா?! கட்டோ தற்போது உயிரோடு இருந்திருந்தால் டோக்கியோவின் வயதான நபர்களில் ஒருவராக இருந்திருப்பார். ஜப்பானில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.