கொரனா பேரழிவு காலத்தில் அனைத்து நாட்டு அரசாங்கமும், கூவி கூவி மக்களை கொரனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அழைத்தது. அப்படி மக்கள் போட்டுக் கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றுதான் கோவிஷீல்டு. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு, சில நேரங்களில் ஏதேனும் பக்கவிளைவுகளை வரலாம் என இந்த ஊசியை தயாரித்த நிறுவனம் அஷ்ற்றாஜெனேகா தற்பொழுது லண்டன் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது.
இரண்டரை வருடங்கள், ஒட்டு மொத்த உலகையே உலுக்கி, மக்களை அவரவர் வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரனா தொற்றால் லட்சக்கணக்கானோர் மாண்டனர். ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே சீர்குலைந்தது. கொரனாவை தடுக்க தடுப்பு மருந்து வராதா என்ற ஏக்கத்தில் மக்களும், அரசாங்கமும் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஆபத்பந்தனாக வந்த தடுப்பூசிகள்தான் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு. இந்த தடுப்பு மருந்து பல நாடுகளின் அரசாங்கங்களால் பொது மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. உலகின் பெரும்பாலான மக்கள் இந்த ஊசிகளை போட்டு கொண்டனர். இந்த தடுப்பூசிகளால், மக்களின் உயிருக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் அல்ல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுமா என்ற கேள்வி அப்பொழுதே சில மருத்துவ வல்லுநர்களாலும், மக்களாலும் எழுப்பப்பட்டது. ஆனால், இந்த தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை, இந்த தடுப்பூசிகள் பக்கவிளைவுகள் அற்ற மிக பாதுகாப்பான மருந்துகள் என வாக்குறுதி கொடுத்தன.
ஆனால், சமீப காலமாக, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பலரின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில்,ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்த "அஷ்ட்ராஜெனேகா" நிறுவனம், "கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு, சில நேரங்களில், அரிதாக சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரத்தம் உறைதல் மற்றும் டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome) போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்பட கூடும்" என ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்துள்ளது. மேலும் இந்த பக்க விளைவுகள் வெகு சிலருக்கு, அதுவும் மிக அரிதாகவே ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது "அஷ்ட்ராஜெனேகா" நிறுவனம்.