சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, தொடர்ந்து 36வது முறையாக நீட்டித்துள்ளது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதனால் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் ஜூன் 4ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு(2023) ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான விசாரணை (2024ம் ஆண்டு) ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ந்து 36வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.