வாடகைத்தாய் குழந்தை, அஜித் படத்திலிருந்து நீக்கம், தனுஷுடன் Netflix கல்யாண வீடியோ பஞ்சாயத்து, LIC-யுடன் பட டைட்டில் பஞ்சாயத்து, ரவுண்ட் டேபிள் டிஸ்கஸன் பஞ்சாயத்து என, அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கி, பஞ்சாயத்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதெல்லாம் என்ன பிரம்மாதம் இதை விட ஒரு ஸ்பெஷல் பஞ்சாயத்து செய்கிறேன் பார் என இப்பொழுது இன்னொரு பஞ்சாயத்தை கூட்டி மீண்டும் சமூக வலைதளங்களில் வாங்கிக் கட்டத்தொடங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
புதுச்சேரியில் உள்ள பிரபலமான ஹோட்டலுடன் கூடிய சுற்றுலாத்தலம் 'ஷீகல்ஸ் (Seaguls)'. புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது 'ஷீகல்ஸ்'. கடற்கரையுடன் கூடிய தங்கும் விடுதிகள், டார்ஸான் ஹவுஸ், சின்ன தீவு, கடல் Back Water, போட் சவாரி என நல்ல பொழுது போக்கு மற்றும் சுற்றுலா தளமாக இயங்கி வரும் ஷீகல்ஸ்-ஐ விலை பேசி, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
கடந்த புதன் கிழமை (11 டிசம்பர்) மாலை 7 மணி சுமாருக்கு தனது பிரமாண்ட சொகுசு காரில் புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசியுள்ளார். அது குறித்த தகவல்கள் இப்பொழுது மீடியாவில் வெளியாகி விக்னேஷ் சிவனின் வெள்ளந்தி தனத்தை(!) விளாசி வருகிறார்கள் நெட்டிஸன்கள்.
அமைச்சர் லட்சுமி நாராயணானிடம், தானும் தன் மனைவி நயன்தாராவும் புதுச்சேரியில் ஹோட்டல் பிஸ்னஸ் செய்ய விரும்புவதாக தெரிவித்த விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள 'ஷீகல்ஸ்' ஹோட்டல் என்ன விலைக்கு கிடைக்கும் என கேட்டு, அமைச்சரின் தலையில் இடியை இறக்கியுள்ளார்.
பதறிப்போன அமைச்சர் லட்சுமி நாராயணன், "ஐயா! ராசா.... ஷீகல்ஸ் பாண்டிச்சேரி கவர்ன்மெண்டுக்கு சொந்தமானது. அதையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது." என சொல்லி, ஷீகல்ஸ் ஹோட்டல் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறைக்கு கீழ் இயங்குவதை விலாவரியாக விளக்கி சொல்லியுள்ளார். வெள்ளந்தியான விக்னேஷ் சிவன், அனைத்தையும் அமைதியாக கேட்டு விட்டு, "அப்போ கொஞ்ச வருசத்துக்கு காண்ட்ராக்ட் பேஸிஸ்ல வாடகைக்கு எடுக்க முடியுமா?" எனக் கேட்டு தனது பிஸ்னஸ் மைண்ட் புத்திசாலித்தனத்தை காட்டியுள்ளார்.
ஷீகல்ஸ் ஹோட்டலில் ஏராளமான ஊழியர்கள் பணி செய்வதையும், புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையின் செயல்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களையும் மீண்டும் ஒருமுறை விக்னேஷ் சிவனின் அப்பாவி மண்டையில் ஏறும்படி விளக்கிச் சொன்ன அமைச்சர் லட்சுமி நாராயணன், "வாய்ப்பில்லை ராஜா!" என கையை விரித்துள்ளார்.
விக்ரமாதித்தனை விடாத வேதாளமாக, லட்சுமி நாராயாணனை விடாத விக்னேஷ் சிவன், "பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் பல, தனியார் வசம்தானே உள்ளன, அதில் ஏதாவது ஒரு பகுதியை வாங்க முடியுமா?" எனக் கேட்டுள்ளார்.
புதுச்சேரி கடற்கரை பகுதிகள் 2017-ம் ஆண்டே டெண்டர் விடப்பட்டு, சில பல வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த கடற்கரை பகுதிகளில் ஏதும் செய்ய முடியாது என விளக்கி கூறியுள்ளார் அமைச்சர் லட்சுமி நாராயணன்.
"ஐயோ! நான் இப்ப, பாண்டிச்சேரியில எதையாவது வாங்கியாகனுமே!!!" என அடம்பிடித்த விக்னேஷ் சிவன், விடாப்பிடியாக "பாண்டிச்சேரிக்கு வரும் டூரிஸ்டுகளை கவரும் வகையில் கான்செர்ட் (Music Concert) ஒன்றை நடத்த திட்டமிடுகிறேன். அதற்கு தகுந்த மாதிரி ஏதாவது இடம் கிடைக்குமா?" எனக் கேட்டு, அமைச்சரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியுள்ளார். 'அப்பாடா!' என நிம்மதி பெருமூச்சு விட்ட அமைச்சர், "புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்று இருக்கிறது. ஒரே நேரத்தில் நாலாயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். வேண்டுமென்றால், அந்த ஆடிட்டோரியத்தை, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்துக் கட்டி, எத்தனை நாளுக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்." என எடுத்துக்கூறி, விக்னேஷ் சிவனின் வில்லங்க பிஸ்னஸ் டிஸ்கஷனுக்கு ஒரு எண்டு கார்டு போட்டுள்ளார்.
அமைச்சரின் அட்வைஸால் அமைதியான விக்னேஷ் சிவன், அங்கிருந்து கிளம்பி புதுச்சேரி துறைமுக வளாகம் சென்று, அமைச்சர் குறிப்பிட்ட ஆடிட்டோரியத்தை பார்வையிட்டு, தனது பாடல் கச்சோரிக்கு ஒத்து வருமா என பார்த்து விட்டு சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு இடையில் நடந்த உரையடல் எப்படியோ மீடியா வெளிச்சத்திற்கு வர, ச்சும்மாவே விக்னேஷ் சிவனை தாலாட்டி சீராட்டும் நெட்டிசன்கள் இப்பொழுது பூ, பௌடர், பொட்டு என எக்ஸ்ட்ரா அலங்காரங்களுடன் அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.