நமது பிரம்மாண்டமான உலகத்தில் நடக்கும் மர்மங்களை பற்றி எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? பூமியின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், அதன் மறுபக்கத்தில் வரலாற்றையே மாற்றப் போகும் அளவிற்கு மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நமது கையில் நேரமில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு விசித்திரங்களும் மர்மங்களும் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
நம் அனைவருக்கும் அமேசான் காடுகளின் மகிமையை பற்றி அறிந்திருப்போம். 150 முதல் 200 பில்லியன் டன் கார்பன்களை தன்னிடம் சேமித்து வைத்துள்ளது. அங்குள்ள மரங்கள் நாளொன்றிற்கு 20 பில்லியன் டன் நீரை ஆவியாக்கி, உலக சுற்றுச்சூழலுக்கு பெரும்புள்ளியாக திகழ்கிறது. ஒருவேளை அமேசான் மழைக்காடு அழிந்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு, பூமி வெப்பமாகி, மனித இனம் வாழ்வதே பெரும் சவாலாக மாறிவிடும்.
தற்போது விஞ்ஞானிகள் கடலுக்குள் இருக்கும் இரண்டாவது அமேசானை கண்டுபிடித்துள்ளனர். எது?! இரண்டாவது அமேசானா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். கடலின் மேற்பரப்புக்கு அடியில், 5.7 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நுழைவாயில் அமைந்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள ஆறு நாடுகளை இணைக்கிறது. இந்த இடத்தை "பவள முக்கோணம்" என்று கூறுகின்றனர். பவள முக்கோணம் என்பது இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கிணியா, சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு திமோர் முழுவதும் பரவியுள்ள ஒரு கடல் ஆச்சரியமாகும். இந்த அற்புதமான இடம் 'கடலின் அமேசான்' என்று அழைக்கப்படுகிறது.
பவள முக்கோணம் பல உயிர்களின் பெருக்கத்திற்கு புதையலாக இருக்கிறது. மேலும் உலகின் 75% பவள இனங்கள் மற்றும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் இங்கு வாழ்கின்றன.
அமேசான் மழைக் காடுகளைப் போலவே பவள முக்கோணமும் நமது கிரகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. "கிரேட் பேரியர் ரீஃப்" போன்ற ஏராளமான பவளப்பாறைகளைக் கொண்ட இடங்களை விட, பவள முக்கோணம் மிகவும் குறைவாக மக்களிடம் அறியப்பட்டிருந்தாலும், இது உலகின் 30% பாறைகளுக்கு இருப்பிடமாக உள்ளது. பவள இனங்களில் 70% க்கும் அதிகமானவை பவள முக்கோணத்தில் வாழ்கின்றன. உலகின் ஏழு கடல் ஆமை இனங்களில் ஆறு இனங்கள் இங்கு வாழ்கின்றன. மேலும், இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆதரிக்கிறது.
இந்த கவர்ச்சிகரமான பவள முக்கோண பகுதியில் இருக்கும் அழகை காணவும், அதன் ரகசியங்களை கண்டறியவும் பல ஆராய்ச்சியாளர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தற்போது இந்த இடம் ஆபத்தில் இருக்கிறது. அதிகப்படியான மீன் பிடித்தல் மற்றும் சயனைடு வைத்து மீன் பிடிப்பது போன்ற அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் காரணமாக மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த இடம் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
அறிவியல் ஆய்வுகளின் படி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பவள முக்கோணத்தில் உள்ள பவளப்பாறைகள் 2100 ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும் என்கின்றனர். மேலும் மீன்பிடித்தலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பவள முக்கோணத்தை பாதுகாக்க 6 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மற்றும் கடல் பல்லுயிர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு கடலோர வளங்களை தக்க வைக்க தொடங்கினர். மேலும், சுற்றுச்சூழல் மீதான எதிர்மறையான விளைவுகளை குறைக்க, நிலையான சுற்றுலா நடைமுறைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.