தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தல், அவருக்கு உதவிய நபர்கள், போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தின் முதலீடுகள் மற்றும் நெட்வொர்க் பற்றிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜாபர் சாதிக்குடன் கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் முகேஷ் (வயது 33), முஜிபுர் (வயது 34), அஷோக்குமார் (வயது 34) மற்றும் சதானந்தம் (வயது 45) ஆகியோரும், ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை பொருள் கடத்தல் மட்டுமின்றி அதன் மூலம் கிடைத்த பணங்களை முறைகேடாக வெளிநாடுகளுக்கு அனுப்புதல் மற்றும் போதை பொருட்களுக்காக வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணத்தை பெறுதல் போன்ற சட்ட விரோத குற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, அமலாக்கதுறையினர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மேல் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரிடமும் அமலாக்க துறையினர் டெல்லி திகார் சிறையில் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
போதை பொருள் கடத்தல் தொழிலில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். போதை பொருள் கடத்தலில் சர்வதேச அளவில் மிகப் பெரிய நெட்வொர்க்கை வைத்துக்கொண்டு 'சிறப்பாக' செயல்பட்டு வந்த அண்ணன் தம்பிகள் மூவருக்கும் வலது கரமாக செயல்பட்டு அவர்களின் கட்டளைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி கொடுத்தவர் சதானந்தம்.
போலிசாருக்கு சந்தேகம் வராதபடி, சென்னை பெருங்குடியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் போதை பொருட்களை தயாரித்துள்ளார்கள் இந்த கும்பலை சேர்ந்தவர்கள்.
தன் கூட்டாளிகள் மற்றும் தன்னிடம் வேலை செய்பவர்களிடம் நெருக்கம் காட்டாமலும் அதிகம் பேசாமலும், ஒரு தலைவனுக்குரிய 'கெத்தோடு' வலம் வந்துள்ளார் ஜாபர் சாதிக். ஜாபர் சாதிக்கிடம் இருந்து கட்டளைகள் மட்டுமே வரும். அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் இருவரும்தான் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் போதைபொருள் பட்டுவாடா மற்றும் டிஸ்ட்ரிபுஷனை களத்தில் இறங்கி முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே பெருமளவான பொதை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவசர சில்லறை தேவைகளுக்கு 'மெத்த பெட்டமைன்' போன்ற போதை பொருட்களை ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரவழைத்துள்ளனர்.
போதை பொருள் டீலர்கள் துணி வியாபாரிகள் போல் பாரிமுனை பஜாருக்கு வந்துள்ளனர். பாரிமுனை பஜாரில் வைத்தே போதை பொருள்களை டீலர்களிடம் ஒப்படைக்கும் மற்றும் பண பரிமாற்ற ரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்கள் ஜாபர் சாதிக் அண்ட் கோ.
வெற்றிகரமான வெளிநாட்டு கடத்தல்களுக்கு பின் தன்னிடம் பணியாற்றும் கைப்பிள்ளைகளுக்கு பண்ணை வீடுகளில் சகல சௌகரிய 'கவனிப்புகளுடன்' விருந்துகளை கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் ஜாபர் சாதிக். ஜாபர் சாதிக்கின் இந்த திரைமறைவு அண்டர்கிரவுண்ட் கடத்தல் தொழில் பற்றி அவரின் நெருங்கிய வெளிவட்டார நண்பர்களுக்கு தெரியாத வண்ணம் மிக சாமார்த்தியமாக நடந்து கொள்வார்.
போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக் கணக்கான வெளிநாட்டு கரன்சிகளை இந்திய ரூபாயாக மாற்றும் பொறுப்பு ஜாபர் சாதிக்கின் தம்பி முகமது சலீமிடம் கொடுக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் ஜாபர்சாதிக் தன்னிடம் கடத்தல் வேலைகளில் பணியாற்றியவர்களின் வங்கி கணக்குகள் மூலமாகவும் பண பரிமாற்றங்களை செய்துள்ளார்.
இப்படியாக பல புதிய தகவல்களை ஜாபர் சாதிக்கின் கூட்டளிகளிடமிருந்து விசாரணையின் மூலம் பெற்றுள்ளார்கள் அமலாக்க துறையினர். விரைவில் போதஒ பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளையும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கிலும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர் அமலாக்க துறையினர்