பொதுவாக தவறுகள் நடந்தால் அதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று கூறுவது வழக்கம். ஆனால் ஒரு கோயில் வளாகத்திலேயே பல ஆண்டுகளாக பெண்களுக்கு வன்கொடுமை நடந்துள்ளது என்பதை கேட்கும் போது கடவுளே இல்லை என்று தான் தோன்ற வைக்கிறது. சிவ பக்தர்களுக்கு அமைதியை அளிக்கும் தர்மஸ்தலா கோயில் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயிலுக்குள் இப்படிப்பட்ட செயலை யார் செய்திருக்க முடியும் என்பது தான் தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி.
தர்மஸ்தலா
கர்நாடகாவில் இருக்கும் தர்மஸ்தலா கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இது மஞ்சுநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவன் கோயில் ஆகும். இக்கோயில் கர்நாடக மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். ஜெயின் ஹெக்டே குடும்பத்தினரால் தலைமுறை தலைமுறையாக இக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.தற்போது மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
புனித ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் புகார் அளித்துள்ளார்.
தர்மஸ்தலாவில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த தூய்மை பணியாளர் கடந்த ஜூலை 4-ஆம் தேதி தனது வழக்கறிஞர் மூலம் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிறகு ஜூலை 13ம் தேதி புகார் அளித்த இந்த நபர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு உடல் முழுவதும் கருப்பு துணியை அணிந்து கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெல்தங்கடி முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தூய்மை பணியாளரின் வாக்குமூலம்
வாக்குமூலத்தில் அவர் கூறியது, "1995 ஆம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தினரால் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் அடங்கும். அதில் ஆசிட் மூலம் முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சில உடல்கள் இருந்தன. இறந்த பெண்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் என்னை மிரட்டினார்கள். 1998ஆம் ஆண்டு எனது மேற்பார்வையாளர் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார். இதனால் அவருக்கு நேர்ந்த கொடூரங்கள் என்னை பயத்தில் ஆழ்த்தியது.
இருந்தும் நான் உடல்களைப் புதைக்க மறுப்பு தெரிவித்தேன். ஆனால் என்னையும் எனது குடும்பத்தையும் கொன்று பிணங்களோடு பிணங்களாக எரித்து விடுவோம் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் பயந்து போய் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தேன். நான் இதுவரை நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்துள்ளேன். தர்மஸ்தலா கோயிலைச் சுற்றியுள்ள பல இடங்களில் டீசல் பயன்படுத்தி சில உடல்களை எரிக்கவும், மற்றவற்றை அடக்கம் செய்யும்படியும் நான் கட்டாயப்படுத்தப் பட்டேன். அதிலும் சில குழந்தைகளை பள்ளி சீருடையில் புதைத்துள்ளேன். இப்படி ஒன்று, இரண்டு வருடம் அல்ல..16 வருடங்கள் வரை புதைக்கும் வேலையைச் செய்தேன்.
இறந்தவர்களுக்கு முறையாக சடங்குகள் செய்து மரியாதை செய்யப்படவில்லை. அந்தக் குற்ற உணர்வு தான் என்னை துரத்துகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு எனது உயிருக்கும் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்று பயந்து வேறு மாநிலத்திற்கு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் எனது மனசாட்சி என்னை தூங்க விடவில்லை. அதனால் தான் தற்போது இதனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்து புகார் அளித்தேன்" என்று முன்னால் தூய்மை பணியாளர் கூறினார்.
மேலும் தனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கினால், இந்த குற்றங்களை செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் அடையாளம் காண்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் கூறுவதற்கு ஆதாரமாக, ரகசியமாக தோண்டி எடுக்கப்பட்ட எழும்பு கூடுகளை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். தற்போது சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, 13 இடங்களில் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்திற்கு வரும் பழைய காயங்கள்
தூய்மை பணியாளரின் புகாருக்கு அடுத்து, 60 வயது பெண்மணி ஒருவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் மர்மமான முறையில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். தனது மகள் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாகவும், கடைசியாக தனது மகள் தர்மஸ்தலாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, பிறகு தனது மகளை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
புகார் அளித்தபோது காவல்துறையினர்,"உங்கள் மகள் யாருடனாவது ஓடிப் போயிருப்பார்" என்று அநாகரிகமாக பதில் அளித்தனர். "கோயில் நிர்வாகிகளிடம் விசாரிக்கலாம் என்று சென்றபோது, அவர்களும் என்னை மன வேதனையில் ஆழ்த்தி, சிலர் என்னை தாக்கி சித்திரவதையும் செய்தனர். இதில் மயக்கம் அடைந்த நான் மூன்று மாதங்கள் கோமாவில் இருந்தேன். என் மகள் இறந்திருந்தால் அவளுக்கு முறையாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். புகார் அளித்த இந்த பெண்மணி முன்பு சிபிஐயில் ஸ்டெனோகிராஃபராக பணியாற்றியவர் என்பதால் அவரது புகாரையும் புறந்தள்ள முடியாது.
தற்போதைய நிலவரம்
வழக்கின் சாட்சியாக இருக்கும் தூய்மை பணியாளரை நேரில் அழைத்து வந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளன. அதில் அவர் காட்டிய இரண்டாவது இடத்தில் 25 அடி ஆழம் வரை தோன்றிய போது சிவப்பு நிற ஜாக்கெட், ஒரு பான், ஏடிஎம் கார்டு கண்டெடுக்கப்பட்டன. இவை இந்த வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு, நேத்ராவதி ஆற்றின் கரை ஓரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சங்கள் மூன்றடி ஆழத்தில் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில் தர்மஸ்தலாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.