உலகின் பல அழகான தீவுகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஐரோப்பாவின் மிகவும் தொலைதூரக் குடியிருப்புகளில் ஒன்றான "க்ரிம்சி" என்ற பெயர் கொண்ட தீவு பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இது ஐஸ்லாந்தின் வடக்கு கடற்கரையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில், 6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இங்கு நீங்கள் அதிக எண்ணிக்கையிலான பறவை வகைகள் மிகச் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை காணலாம்.
1931 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை, க்ரிம்ஸி தீவிற்கு படகு மூலம் மட்டுமே செல்ல முடிந்தது. அதுவும் கடிதங்களைக் கொடுக்க ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சிறிய படகு ஒன்று வரும். ஆனால் தற்போது, வடக்கு ஐஸ்லாந்து பகுதியில் உள்ள அகுரேரி நகரத்திலிருந்து 20 நிமிட விமான பயணம் மேற்கொள்வதன் மூலமாகவும், டால்பி கிராமத்திலிருந்து மூன்று மணிநேர கப்பல் பயணத்தின் மூலமாகவும் இந்த தீவை அடையலாம். ஆர்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ள ஐஸ்லாந்தின் சிறிய பகுதி தான் இத்தீவு.
இங்குள்ள பறவை இனங்களின் அழகை ரசிப்பதற்கும், ஐரோப்பாவின் தொலைதூர குடியிருப்புகளை காண்பதற்கும், சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு இங்கு பயணம் செய்கின்றனர். இங்கு செழிப்பான பஃபின் பறவைகள், காமிகேஸ் ஆர்டிக் டெர்ன்கள், கருங்கால் கிட்டிவேக்ஸ், ரேஸர்பில்ஸ் போன்ற பல்வேறு பறவை வகைகள் உள்ளன. அதுமட்டுமின்றி ஐஸ்லாந்து செம்மறியாடு, குதிரைகள் போன்றவையும் அதிகம் காணப்படுகின்றன.
இந்த தீவின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை விட கடல்வாழ் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 50,000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
.webp)
இந்தத் தீவில் மொத்தம் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? "கிரிம்சி தீவின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 20 பேர் மட்டுமே", என்று உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியும், ஆர்டிக் ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளருமான 'ஹல்லா இங்கோல்ஃப்ஸ்டோட்டிர்' கூறினார். ஹல்லா தென் கிழக்கு ஐஸ்லாந்தில் வளர்ந்தவர். அவரது சகோதரி கிரிம்சி தீவை சேர்ந்த மீனவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது இந்த தீவில் வாழ்ந்து வந்த ஹல்லா, 2019 ஆம் ஆண்டு முழுமையாக க்ரிம்சி தீவிலேயே தங்க முடிவு செய்துவிட்டார்.
ஹல்லா ஒரு சுற்றுலா நிறுவனத்தை நடத்துவதோடு மட்டுமின்றி, க்ரிம்சி தீவுக்கு பயணம் செய்பவர்களுக்காக ஹோட்டல் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். சுற்றுலா பயணிகளுக்கு க்ரிம்சி தீவின் இயற்கை அழகை சுற்றி காண்பிப்பதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
"நான் இந்த தீவு மீது காதல் கொண்டு வந்தேன். க்ரிம்சி தீவில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் இயற்கை ஆகியவற்றை நான் நேசித்தேன். இங்கு இயற்கை மிகவும் சக்தி வாய்ந்தது. குளிர்காலங்களில் இரவு நேரத்தில் வடக்கு ஒலிகள் எனப்படும் ஆரோரா போரியாலிஸ் மற்றும் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் வானில் தெரியும். பறவைகள் வசந்த காலத்தில் பெரிதளவில் வருகின்றன. க்ரிம்சி தீவில் ஒவ்வொரு பருவ காலமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது" என்று ஹல்லா விளக்கினார்.
இது போன்ற விசித்திர தீவில் வாழ்வது சவாலாக இருந்தாலும், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நகர மக்களை ஒப்பிடும்போது, இயற்கையான சூழலில் வாழ்வது சந்தோஷத்தையும், மனநிறைவையும் கொடுக்கிறது.