ஏஐ கருவிகள் எவ்வளவு மேம்பட்டவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாம் கேட்பவை அனைத்திற்கும் பதில் சொல்லும், பாட்டு பாடும், படம் வரையும், ஏன் கட்டுரை எழுதி கொடுத்து அதற்கு ஒரு வீடியோவையே உருவாக்கி கொடுக்கும். நாம் கேட்கவில்லை எனில் அது எதையும் செய்யாது. இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் தோன்றியதாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது. மனிதர்களின் வேலையை இந்த தொழில்நுட்பம் எளிதாக்கி வருவது நல்ல விஷயம் என்று சொன்னாலும் மனிதர்கள் செய்யும் வேலைக்கு உலை வைத்துவிடும் என்று பெரும்பாலானோர் அச்சப்பட்டது உண்மையில் நடப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
தற்போது தனியார் தொழில்நுட்ப ஐடி நிறுவனங்களான WIPRO, TCS போன்ற முன்னணி நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஊழியர்களின் பணி நீக்கம் என்பது ஒரு மாத காலத்திற்குள் 136% அதிகரித்துள்ளது. அதாவது 82,000 ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே மாதிரியான திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளை தொழில்நுட்பமே செய்து விடுவதால் அந்த பணிக்கு மனிதர்கள் தேவையில்லை என நிறுவனங்கள் நினைக்கின்றன.
சரி, இது ஒரு புறம் இருக்கையில் கேரளாவில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு குற்ற வழக்கையே காவல்துறையினர் தீர்த்துள்ளனர் என்பது தான் ஹைலைட் ஆன நியூஸ். கேட்பதற்கே "அடேங்கப்பா! இப்படியும் கூட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமா?!" என்று மக்களை அசர வைக்கும் அளவிற்கு காவல்துறையினர் சம்பவம் செய்துள்ளனர். அதுவும் கொலை நடந்து முடிந்த 19 வருடங்கள் கழித்து ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது மொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிப்ரவரி 10, 2006 அன்று கேரளாவின் கொல்லம் பகுதியில் ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்டது ரஞ்சனி என்ற இளம் பெண் மற்றும் அவரது 17 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் கேரளா முழுவதையும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை பல வருடங்களாக வழக்கை இழுவையில் வைத்திருந்தது.
உண்மையில் 2006 ஆம் ஆண்டு என்ன நடந்தது? ரஞ்சனி என்ற இளம் பெண் அவள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவில் என்ற நபர் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட காதல் சற்று அடுத்த நிலைக்கு சென்று ரஞ்சனி கர்ப்பமாகினாள். ரஞ்சனி கர்ப்பமாகியது தெரிந்ததும் திவில் நைசாக அவளை விட்டு விலகி பதன்கோட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டான். ரஞ்சனிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது தெரிந்த பிறகு, அவளை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தனது நண்பர் ராஜேஷ் உதவியை நாடினான் திவில்.
திவில் மற்றும் ராஜேஷ் இருவரும் முன்னாள் ராணுவ நண்பர்கள். இருவரும் தெள்ளத்தெளிவாக தன்மீது சந்தேகம் ஏற்படாதவாறு ரஞ்சனியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். ராஜேஷ் தன்னை 'அனில் குமார்' என்ற பெயரில் ரஞ்சனியிடம் நண்பர் போல் அறிமுகமாகிக் கொண்டு உதவி செய்வது போல் நடித்து, நடப்பவை அனைத்தையும் தெரிந்து கொண்டான். ரஞ்சனி மாநில மகளிர் ஆணையத்திடமிருந்து திவில் தான் தனது குழந்தைகளுக்கு தந்தை என்று நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தும் உத்தரவை பெற்றாள். இதை தெரிந்து கொண்ட ராஜேஷ் மற்றும் திவில் தனது அடுத்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.
ராஜேஷ் ரஞ்சனியின் அம்மாவை சில வேலைக்காக உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று வரும்படி வற்புறுத்தினான். ரஞ்சனியின் அம்மா வெளியே சென்ற நேரம் பார்த்து ரஞ்சனி மற்றும் அவளது இரட்டை குழந்தைகளையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ராஜேஷ் மற்றும் திவில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த மூவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறொரு பெயரோடு, வேறு ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதால் அவர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவாகினாலும் செயற்கை தொழில்நுட்பத்திடமிருந்து இருந்து தப்ப முடியாது. கடந்த 2023 ஆம் ஆண்டு கேரள காவல்துறையின் தொழில்நுட்ப புலனாய்வு பிரிவு கடும் குற்ற வழக்குகளை மறுபரிசீலனை செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தொடங்கியது. ரஞ்சனி கொலையாளிகளை கண்டுபிடிக்க முயன்ற அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பழைய புகைப்படங்களை மேம்படுத்தி, 19 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் எப்படி இருக்க முடியும் என்பதற்கான மதிப்பீட்டை உருவாக்கினர். அப்போது ராஜேஷ் மற்றும் திவில் ஆகியோரின் புகைப்படங்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற விவரத்தை எடுத்துக்கொண்டு, அப்புகைப்படங்களை பின்னர் சமூக ஊடகங்களில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டன.
சமூக ஊடகங்களில் ஆராய்ந்த பிறகு ஒரு திருமண புகைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் புதுச்சேரியில் இருந்த சந்தேகத்திற்கிடமான ராஜேஷுடன் 90% ஒற்றுமையை கொண்டிருந்தது. இந்த ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு திவிலையும் போலீசார் கண்டுபிடித்தனர். குற்றம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி, 4ஆம் தேதி புதுச்சேரியில் இருவரையும் சிபிஐ கைது செய்தது. இத்தனை வருடங்களாக புதிய அடையாளங்களை உருவாக்கி விஷ்ணு மற்றும் பிரவீன் குமார் ஆகிய பெயரோடு உட்புற வடிவமைப்பாளர்களாக (Interior designer) பணியாற்றி வந்தனர். இந்த வழக்கு ஏஐ செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வுக்கு வந்தது தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற பல கொலை சம்பவங்களுக்கு இறை தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருப்பது எதிர்காலத்தில் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.