IPL-2024 தொடர், லீக் சுற்றுகள் முடிந்து விறுவிறுப்பான ப்ளே ஆஃப் கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் முதல் பாதியில் சொதப்பினாலும், விராடி கோலியின் அதிரடியால் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் வீராட் கோலியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மிக முக்கியமான ப்ளே ஆஃப் போட்டியில் விளையாட உள்ள பெங்களூரு அணி வீரர்கள், தங்களது வலைப் பயிற்சி மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளனர்.
குஜராத் காலேஜ் மைதானத்தில் திட்டமிட்டிருந்த வலைப்பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ரத்து செய்ய காரணம் கோலிக்கு தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்தான் என வங்கதேச பத்திரிக்கை "ஆனந்தபஸார் பத்ரிகா" செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர், ISIS திவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 மர்ம நபர்களை அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மர்ம நபர்களை தீவிரவாத தடுப்பு பிரிவினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்களிடமிருந்து ஆயுதங்கள், சந்தேக வீடியோக்கள் மற்றும் அவர்களின் செல்போன்களில் இருந்து ரகசிய மெஸேஜ்கள் கைப்பற்றப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 மர்ம நபர்கள் கைது செய்யப்பட்ட அன்று, ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று IPL அணிகளும் தங்கள் ப்ளே ஆஃப் போட்டிகளுக்காக அஹமதாபாத் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணி நிர்வாகங்களிடமும் போலிசார் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்தே இரு அணி நிர்வாகங்களும் தங்கள் அணிகளின் பயிற்சிகளை ரத்து செய்துள்ளனர்.
"விராட் கோலிக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி நாட்டின் மிகப் பெரும் சொத்து. அவரை பாதுகாப்பதே எங்களுக்கு மிக முக்கியம்" என குஜராத் போலிஸ் அதிகாரி விஜய் சிங்க ஜாவ்லா தெரிவித்துள்ளார்.
IPL அணியினர் தங்கியுள்ள ஹோட்டல் மற்றும் போட்டி நடக்கும் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலிஸ் பாதுகாப்பௌ பலப்படுத்தபட்டு கடுமையான சோதனைகள் நடை பெற்று வருகின்றன.
அதே சமயம், தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை மறுத்துள்ள குஜராத் கிரிக்கெட் நிர்வாகம், IPL அணிகள் அதிக வெப்ப அலைகளின் காரணத்தினால்தான் பயிற்சி ஆட்டங்களை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளது.