பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில். அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் மாணவ்ர்கள் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுடன் வணிகம் உட்பட எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும், முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கூடாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த பல வாரங்களாக போராடி வந்தனர். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கூடாரங்களை கலைத்து விட்டு பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என பல்கலைக் கழக தலைவர் மினூஷ் ஷபிக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், பல்கலைக் கழக தலைவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் தொடர்ந்து கூடாரங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்கலைக் கழக ஹாமில்டன் ஹாலை ஆக்ரமித்த மாணவர்கள் அங்கு கூடியிருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல யூத மாணவர்களும் இந்த போராட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியேற கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிந்ததால், வேறு வழியில்லாமல் பல்கலைக் கழக தலைவர் மினூஷ் ஷபிக் போலிஸ் உதவியை கோரினார். மினூஷ் ஷபிக்கின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காவல்துறை, சுமார் 100க்கும் மேற்பட்ட போலிஸாரை கொலம்பியா பல்கலைக் கழக வளாகத்திற்குள் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். ஆனால், போலிசாரின் உத்தரவை ஏற்காத மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட, போலிசார் மாணவர்களை கலைக்க வீரியம் குறைந்த ஸ்டன் எறி குண்டுகளை பயன்படுத்த தொடங்கினர்.
போலிசாரின் நடவடிக்கையால் அதிருப்தியுற்ற மாணவர்கள் போலிசாருடன் வாக்குவாததில் ஈடுபட, வேறு வழியில்லாமல் போலிசார் மாணவர்களை வலுக் கட்டாயமாக பல்கலைக் கழக வளாகத்திற்குள் இருந்து வெளியேற்ற தொடங்கினர். இத்னால், மாணவர்கள் போலிஸ் இடையே கலவரம் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றியதுடன், போராட்டத்தை முன்னின்று நடத்திய 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் கைகளை கட்டி போலிஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர் போலிஸ். கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் மாணவர்கள் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர்
லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலஸ்தீன ஆதரவு இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னிய பல்கலைக் கழக வளாகத்தில் கூடாரம் அமைத்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடிக் கொண்டிருந்த மாணவர்களின் கூடாரங்களுக்குள் நள்ளிரவில் கறுப்பு உடையணிந்த இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் புகுந்து, கூடாரங்களை கலைக்க முயன்றும், பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை அங்கிருந்து வெளியேற சொல்லியும் பிரச்சினை செய்துள்ளனர். இதனால் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஏற்பட்டு நீண்ட நேரம் கலவரமாக நீடித்தது. சம்பவ இடத்திற்கு போலிசார் விரைந்து வந்து, கலவரத்தை கட்டுப்படுத்தியதுடன் இரு தரப்பிலும் பல மாணவர்களை கைது செய்தனர்.
லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் இந்த சம்பவங்களை 'மன்னிக்க முடியாத, வெறுக்கத்தக்க நிகழ்வுகள்' என குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களிடம் போலிஸ் வன்முறையாக நடந்து கொண்டதை எதிர்த்தும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என கோரியும், அமெரிக்காவின் கலிபோர்னியா, யூட்டா, நியூ மெக்ஸிகோ, நியூ ஜெர்ஸி, வர்ஜீனியா, வட கரோலினா, லூசியான என பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக வளாகங்களுக்குள் கூடாரம் அமைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்