2010ம் ஆண்டு, நவம்பர் 8ம் திகதி. இரவு மணி 10. மூன்று முகமூடி மனிதர்கள் ஜெனிபரின் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தார்கள். அடிக்கடி வந்து போன விருந்தாளிகள் போல், வழிகளை பிசிறில்லாமல் பின்பற்றி வீட்டு பின்பக்கம் வந்த முகமூடிகள் மூவரும், கைகளில் பளபளத்துக் கொண்டிருந்த பிஸ்டலகளை தற்காலிகமாக இடுப்பில் சொருகி பத்திரப்படுத்தி விட்டு, வீட்டு சுவற்றில் ஏறி மொட்டை மாடியை அடைந்தார்கள். மாடியிலிருந்து வீட்டிற்குள் செல்லும் கதவு பூட்டப்பட்டிருக்க தங்களிடம் இருந்த மாற்று சாவியால் கதவை திறந்து படிக்கட்டு வழியாக வீட்டிற்குள் நுழைந்தார்கள் முகமூடிகள். இப்பொழுது அவர்கள் கைகளில் மீண்டும் முளைத்திருந்தன பிஸ்டல்கள்.
கனடாவின் ஓண்டாரியோ மாஹாணம், மொத்த மார்க்கம் நகரமும் ஆழ்ந்து உறங்கி விட்ட நிலையில். இதற்கு மேல் என்ன கொலையா நடந்து விடப்போகிறது என்ற மிதப்பில், வாங்கி வைத்திருந்த சிக்கன் பர்கரை பிய்த்து ஆசுவாசமாக வாயில் அமுக்க சென்ற போலிஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பில் கோட்ஸின் தலையில் இடியை இறக்க வந்தது அந்த அவசர போன்கால்.
ஸார், என் பெயர் ஜெனிபர். யூனியன்வில்லேவில் இருந்து பேசுகிறேன். எங்கள் வீட்டிற்குள் மூன்று முகமூடி கொள்ளையர்கள் புகுந்து எனது அப்பா அம்மாவை துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள். என கதறினாள் ஜெனிபர்.
வாயை அடைத்திருந்த பர்கரை துப்பிவிட்டு, ஜெனிபர் சொன்ன யூனியன்வில்லே வீட்டு முகவரிக்கு தன் போலிஸ் படையுடன் பறந்தார் இன்ஸ்பெக்டர் வில்லியம் பில்கோட்ஸ்..
மொட்டை மாடி படிக்கட்டு வழியாக பதுங்கி பதுங்கி இறங்கிய முகமூடிகள் முதலில் கண்ணில் தென்பட்ட அறைக்குள் நுழைந்தார்கள். கட்டிலில் படுத்து படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் அந்நிய முகமூடிகளின் திடீர் விஜயத்தால் திகைத்துப் பயந்து, அதிர்ச்சியில் கத்த முயல, முகமூடிகளின் பிஸ்டல்கள் ஜெனிபரின் தொண்டையை நெரித்து அவளது சத்தத்தை நிறுத்தின.
ஒரு முகமூடி ஜெனிபரை தன் பிஸ்டல் முனையால் கட்டுப்படுத்த, மற்ற இரண்டு முகமூடிகளும் ஜெனிபரின் அறையை சத்தமில்லாமல் சல்லடை போட்டார்கள். அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், ஆடைகள் என அனைத்தையும் கலைத்துப் போட்டவர்களுக்கு ஜெனிபர் சேமித்து வைத்திருந்த ரெண்டாயிரம் டாலர்கள் பணம் மட்டுமே கிடைத்தது. கோபத்துடன், பிஸ்டல் முனையில் ஜெனிபரை தள்ளிக் கொண்டு அடுத்த அறைக்கு நகர்ந்தார்கள்.
வீட்டு ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஜெனிபரின் அப்பா ஹூஹன் மற்றும் அம்மா பிக்பேன் இருவரும் தூங்க சென்ற மகள் ஏன் திரும்பி வருகிறாள் என கேள்வியாய் பார்க்க, அவர்கள் கேள்வியை அதிர்ச்சியாய் மாற்றினார்கள் ஜெனிபருக்கு பின்னால் வந்த முகமூடிகளும், அவர்கள் கைகளில் இருந்த பிஸ்டல்களும்.
சத்தமாக கத்த முயன்ற பிக்பேனின் சத்தத்தை மொத்தமாக அடக்கியது, முரட்டு முகமூடி ஒருவன் ஜெனிபரின் கன்னத்தில் இறக்கிய அறை. மூளைக்குள் மின்னல் தெறிக்க மயங்காத குறையாக தளர்ந்து துடித்தாள் ஜெனிபர். சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிப் போன ஹீஹனும் பிக்பேனும் நடுநடுங்கியபடி மூன்று முகமூடிகளும் சொன்னதை மூச்சு விடாமல் கேட்க தொடங்கினார்கள்.
ஜெனிபர், பிக்பேன் இருவரையும் தலா ஆளுக்கொரு முகமூடிகள் கஸ்டடி எடுக்க, ஹூஹனை கஸ்டடி எடுத்த மற்ற முகமூடி ஹூஹனை மிரட்டியபடி மொத்த வீட்டையும் சல்லடை போட்டு ஹூஹன் அவ்வளவு நாளும் உழைத்து சேமித்து வைத்திருந்த பணம் நகைகளை மூட்டை கட்டினான். ஜெனிபர் மற்றும் பிக்பேன் இருவரும் முகமூடிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து தங்களுக்கு தெரிந்த இடங்களில் இருந்த பணம் நகைகளை எடுத்துக் கொடுத்தார்கள்.
பணம் நகைகளை மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் மொத்த குடும்பமும் தங்கள் அத்தனை வருட மொத்த வருமானத்தையும் ஒப்படைத்த பின், அனைத்து பணம் நகைகளையும் ஒரு பேகில் போட்டு மூட்டை கட்டிக்கொண்ட முகமூடிகள், தங்கள் நல்வரவு பற்றி வெளியில் யாரிடமும் முக்கியமாக போலிசிடம் மூச்சுவிடக்கூடாது என வழக்கமான வில்லன்கள் பாணியில் மிரட்டிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தார்கள்.
அதுவரை துப்பாக்கி முனையில் செய்வதறியாமல் தவித்த ஹூஹன், இப்பொழுது முகமூடிகள் கதவை நெருங்கி விட்டார்கள் என்ற துணிவில் மெல்ல தன் செல்போனை எடுக்க முயன்றார். கதவருகில் இருந்து இதை கவனித்த முகமூடி ஒருவனின் பிஸ்டல் ஹீஹனை நோக்கி வெறித்தனமாக வெடித்தது. தோள்பட்டையில் புல்லட் பாய்ந்த ஹூஹன் அலறியபடி தரையில் விழுந்தார்.
கண்முன் தன் கணவனை சுட்ட முகமூடியை நோக்கி ஆக்ரோஷமாய் பாய்ந்தாள் பிக்பேன். இன்னொரு முகமூடியின் பிஸ்டலில் இருந்து பாய்ந்த புல்லட் பிக்பேனின் நெற்றிப் பொட்டில் ரத்த திலகமிட, கணவன் ஹூஹனுக்கு அருகில் சரிந்து விழுந்தாள் பிக்பேன்.
கொடூர கொலைவெறி சம்பவம் நடந்தேறிய சில விநாடிகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜெனிபர் பாய்ந்து ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவை மூடி விட்டு, போலிஸிற்கு போன் செய்தாள்.
நடுநடுங்கியபடி ஜெனிபர் சொல்ல, கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் வில்லியம் பில் கோட்ஸ்.
போலிஸ் ஜெனிபரின் வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது, முகமூடிகள் அங்கிருந்து அப்பீட் ஆகியிருந்தார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹுஹனும், பிக்பேனும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவமனை பரிசோதனைகளுக்கு பின் ஹூஹன் கோமா ஸ்டேஜில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெனிபரின் தாய் பிக்பேன் சம்பவ இடத்திலேயே உயிரை விட்டது உறுதி செய்யப்பட்டது.
தாயை இழந்து, தந்தையை படுத்த படுக்கையாக அசைவற்ற மோசமான நிலையில் பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு கதறி துடித்துக் கொண்டிருக்கும் ஜெனிபரின் துயரங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியாமல் தவித்த இன்ஸ்பெக்டர் பில் கோட்ஸ், முக்கியமான விசயங்களை மட்டும் விசாரித்து குறித்துக் கொண்டு, மேற்படி தேவைப்படும் விவரங்களை ஜெனிபர் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பிய பின் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்து, ஜெனிபரின் வீட்டில் செய்ய வேண்டிய வழக்கமான புலனாய்வு வேலைகளை செய்து கிடைத்த தடயங்கள் துப்புகள் என சிலவற்றை சேகரித்துக் கொண்டு ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்.
கொள்ளையடிக்க வந்தவர்கள், சேர்த்து கொலையும் செய்துவிட்டு சென்று விட்டார்கள் என வழக்குப் பதிவு செய்து யார் அந்த முகமூடி கொள்ளை ப்ளஸ் கொலைகாரர்கள்? என விசாரணை வலையை விரிக்கத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் வில்லியம் பில் கோட்ஸ்.
ஜெனிபர் சொன்ன சில அடையாளங்களுடன் பொருந்தியிருந்த லோக்கல் கைகள் சிலரை பிடித்து செல்லமாக சில தட்டுகள் தட்டி விசாரித்தார் இன்ஸ்பெக்டர், ஆனால் உருப்படியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நவம்பர் 10ம் திகதி பிக்பேனின் இறுதி காரியங்கள் நடை பெற்றது. அடுத்த நாள் நவம்பர் 11ம் திகதி ஜெனிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து தனக்கு புதிதாக முளைத்திருந்த சில சந்தேகங்களை சொல்லி, ஜெனிபரிடம் விவர விளக்கங்களை பெற்றுக் கொண்டார் பில் கோட்ஸ்.
அதே சமயம், மார்க்கம் நகரின் ஸ்டோஃப்வில்லே மருத்துவமனையில் கோமா ஸ்டேஜில் தீவிர சிகிச்சையில் இருந்த ஹூஹனின் உடல் நிலையில் சில முன்னேற்றங்கள் தெரிய, உடனடியாக ஹூஹனை டொரண்டோ நகர சன்னிபுரூக் ஹாஸ்பிடலுக்கு ஹெலிஹாப்டர் மூலம் கொண்டு சென்று தீவிர மேலதிக சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தனர் போலிஸ்.
நவம்பர் 13ம் திகதி. அதிகாலை. தனது அறையில் செல்போனில் கத்திக் கொண்டிருந்தாள் ஜெனிபர். மறுமுனையில் கொப்பளிக்கும் கோபத்தை அடக்கிக்கொண்டு, அத்தனை திட்டுகளையும் அமைதியாக வாங்கிக் கட்டிக் கொண்ட டேனியல் வோங் பொறுமையாக சொன்னான். நடந்தது நடந்து விட்டது. இனி என் கையில் ஏதும் இல்லை. நீதான் ஏதாவது செய்ய வேண்டும். என்னால் என்ன செய்ய முடியும்? சுற்றி டாக்டர்கள், போலிஸ் இருப்பார்கள். பதறினாள் ஜெனிபர். புரியுது. ஆனால், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைக்கு உன் அப்பாவை பார்க்க செல்லும் போது முயற்சி செய். என்றான் டேனியல் வோங். குழப்பத்துடனும், கோபத்துடனும் என்ன சொல்வதென தெரியாமல் யோசித்தாள் ஜெனிபர். உன் அப்பா வாயை திறந்து விட்டால் நாம் இருவரும் வாழ்க்கை முழுதும் கம்பிக்கு பின்னால் களி தின்ன வேண்டியதுதான். டேனியல் வோங் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜெனிபருக்கு அருகில் இருந்த இன்னொரு செல்போன் சிணுங்கியது. பதட்டத்துடன் அந்த செல்போனை பார்த்தாள் ஜெனிபர். போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. பதட்டத்துடன் டேனியலுடன் பேசிக் கொண்டிருந்த செல்போன் அழைப்பை துண்டித்து விட்டு, போலிஸ் ஸ்டேஷன் அழைப்பை அட்டண்ட் செய்தாள் ஜெனிபர்.
உங்க அப்பாவிற்கு சுய நினைவு வந்து விட்டது. அவரை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறீர்களா? என்றார் ஒரு போலிஸ் ஆபிஸர். தடுமாறியபடி வருகிறேன் என்றாள் ஜெனிபர்.
இன்ஸ்பெக்டர் பில் கோட்ஸ் ஹாஸ்பிடலில்தான் இருக்கிறார் நீங்கள் அங்கு செல்லுங்கள் என்று சொல்லியபடி போலிஸ் ஆபிஸர் அழைப்பை துண்டிக்க. அதிர்ச்சியுடன் தனது மற்ற செல்போனிலிருந்து வில்லியம் வோங்கிற்கு போன் செய்தாள் ஜெனிபர்.
சன்னிபுரூக் ஹாஸ்பிடல். கட்டிலில் அசைவற்று படுத்துக் கிடந்த ஹூஹனை சலனமற்று பார்த்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் பில் கோட்ஸ். அருகில் சில மருத்துவர்களும், போலிஸ் ஆபிஸர்களும் நின்று கொண்டிருந்தனர். ஹூஹனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவரது மனைவி பிக்பேன் இறந்த செய்தி இன்னும் ஹூஹனுக்கு சொல்லப்படவில்லை. மெல்ல பேச்சை தொடங்கினார் பில் கோட்ஸ். ஒன்றும் கவலைப் படாதீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கு இனி ஒன்றும் பிரச்சினையில்லை. டாக்டர்கள் உறுதியாக சொல்லி விட்டார்கள். இன்னும் சில நாட்களில் நீங்கள் பழையபடி உங்கள் வேலைகளை பார்க்கலாம்.
கண்களில் வழியும் கண்ணீருடன் இன்ஸ்பெக்டரை பார்த்தார் ஹூஹன். சொல்லுங்கள் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா? பில் கோட்ஸ் கேட்க, தடுமாறி குழறியபடி என் மகள் ஜெனிபர் என்றார் ஹூஹன். ம்ம்ம்... அவருக்கு தகவல் சொல்லியாச்சு, அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து உங்களை பார்ப்பார். கவலைப் படாதீர்கள் என்றார் பில் கோட்ஸ். பயத்தில் உறைந்து இறுகிய முகத்துடன் ஹூஹன் சொன்னார். இல்லை.... வேண்ட்டாம்.... நான் அவளை பார்க்கமாட்டேன். இது அத்தனைக்கும் காரணமே அவள்தான் என கதறினார் ஹூஹன்.
அதிர்ந்த பில் கோட்ஸ், ஹூஹன் இன்னும் கோமாவில்தான் இருக்கிறாரா என சந்தேகத்துடன் அருகில் இருந்த டாக்டர்கள் மற்றும் போலிஸை பார்க்க, ஆள் பக்கா க்ளியர். நம்பலாம். நாங்க கேரண்டி என மருத்துவர்கள் உத்ரவாதம் கொடுத்த பின், கணத்த மௌனத்துடன் ஹூஹனின் வாக்குமூலத்தை குறிப்பெடுக்க தொடங்கினார் பில் கோட்ஸ்.
அதே சமயம், சன்னிபுரூக் ஹாஸ்பிடல் நுழைவாயிலுக்குள் நுழைந்தது ஜெனிஃபரின் கார்.