திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் மிட்டனமல்லி பகுதியில் வசித்து வந்தார்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சிவன் நாயர் - பிரசன்னகுமாரி தம்பதி.
ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான சிவன் நாயர், தன் வீட்டிலேயே சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார்.மனைவி பிரசன்னகுமாரி, மத்திய அரசு பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த ஞாயிறு (28 ஏப்ரல் 2024) அன்று மாலை 5 மணியளவில் இவர்களின் மகன் ஹரி, தங்களது சித்த வைத்தியசாலைக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியில் சென்றுள்ளார். வயதான் சிவன் நாயர் மற்றும் மனைவி பிரசன்னகுமாரி இருவரும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்கள்.
அப்போது அங்கு சிகிச்சைக்கு வருவதுபோல வந்த மர்ம நபர் ஒருவர், சிவன் நாயர் - பிரசன்னகுமாரி இருவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார். வெளியில் சென்றிருந்த மகன் ஹரி வீடு திரும்பாத நிலையில், இரவு 8 மணியளவில் பக்கத்து வீட்டு நபர் சிவன் நாயரின் வீட்டிற்கு சென்றபோது, சிவன் நாயர் - பிரசன்னகுமாரி தம்பதி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தம்பதியின் இரட்டை கொலை குறித்து தகவல் முத்தா புதுப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட, போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலிசாருடன், தடயவியல் நிபுணர்கள் மற்றும் டாபி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட சிவன் - பிரசன்னகுமாரி தம்பதி அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகை, பணம் என எந்த விலை மதிப்புமிக்க பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனவே, கொள்ளையடிக்கும் நோக்கில் இரட்டை கொலை நடைபெறவில்லை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மாலை 5 மணியளவில் இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் சிவன் நாயரை சந்தித்து பேசியுள்ளனர். இரண்டு நபர்களில் ஒருவர் வீட்டிற்கு வெளியில் நிற்க, மற்றவர் மட்டுமே வீட்டிற்குள் சென்று சிவன் நாயர் - பிரசன்னகுமாரி தம்பதியை கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை நடைபெறவில்லை என்பதால், குடும்ப விவகாரம் அல்லது ஏதேனும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், அல்லது பழி வாங்கும் நோக்கத்தில் நடந்த கொலையா என போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை கொலை நடந்த இடத்தில் ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அது கொலைகாரனின் செல்போனாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஒருவரை பிடித்து முத்தா புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவனின் மகன் ஹரி, ஆவடி அடுத்த அன்னனூரில் சித்த மருத்துவ கிளீனிக் வைத்துள்ளார். அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் தொழிலாளர்கள் குடியிருக்கும் இந்த பகுதியில், கடந்த வாரம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பரபரப்பே இன்னும் குறையாத நிலையில், அதே பகுதியில் வீடு புகுந்து கணவன்-மனைவி என கொடூரமாக நடந்துள்ள இந்த இரட்டை படுகொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.