இந்த ஏரியில் குளித்தால் நீங்கள் கல்லாக மாறிவிடுவீர்கள் என்று சொன்னால் அங்கு செல்வீர்களா? "என்னதான் நடக்கும் என்று ஒரு கை பார்த்து விடுகிறேன்" என சிலர் நினைப்பீர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள வடக்கு தான்சானியாவில் உள்ள மிகவும் அபாயகரமான பகுதிதான் 'நேட்ரான்' என கூறப்படும் ஏரி. இந்த ஏரியில் விழும் அனைத்து பறவைகளும் கல்லாக மாறி விடுகின்றன. மனிதர்கள் குதித்தால் சில மணி நேரத்தில் மரணம் நிச்சயம். இது மந்திரமோ மாயாஜாலமோ இல்லை. உண்மையில் இந்த ஏரியில் என்ன உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தான்சானியாவில் உள்ள நேட்ரான் ஏரி முழுவதுமே உப்பால் நிறைந்தது. அதிகப்படியான உப்பு படிந்த காரணத்தினால் ஏரி முழுவதுமே சகதியாக காணப்படும். கோடை காலங்களில் உயர் வெப்பநிலை காரணமாக ஏரியின் நீர் ஆவியாகிவிட்டதும், சோடியம் கார்பனேட் என்னும் உப்பு ஏரியில் தங்கி விடுகிறது. இதுவே இந்த ஏரி உப்பு படிந்து காணப்பட காரணம்.
2007 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சில புகைப்பட கலைஞர்கள் அந்த ஏரியின் வழியாக சென்றுள்ளனர். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறுகளால் ஹெலிகாப்டர் நிலை தடுமாறி நேட்ரான் ஏரியில் விழுந்தது. ஏரியில் தானே விழுகிறோம் என்று சந்தோஷப்பட்ட குழுவிற்கு காத்திருந்தது ஆபத்து. நேட்ரான் ஏரியில் விழுந்த அனைவரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இங்கு மற்ற தண்ணீரில் நீந்துவது போல நீரின் தன்மை இலகுவாக இருக்காது. அதனால் தண்ணீரில் மூழ்கி விட்டால் எளிதில் மீண்டு வருவது கஷ்டம்.
ஏரியில் விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் கஷ்டப்பட்டு நீந்திச்சென்று கரையை அடைந்தார். உடனே அருகில் வசிக்கும் 'மாசை' பழங்குடியினரின் உதவியை நாடி மற்ற அனைவரையும் பத்திரமாக மீட்டெடுத்தார். ஏரியிலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் மரண பீதியில் இருந்தனர். ஏனெனில் அவர்களது கண்கள் பயங்கரமாக எரிய ஆரம்பித்தது, ஒருவருக்கு பார்வையே மங்கிப் போனதாக கூறியுள்ளார். இதற்கு தண்ணீரின் pH அளவு 7- க்கு பதிலாக 12-ஆக உள்ளது தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வை அடுத்து 2011 ஆம் ஆண்டு நிக் என்ற புகைப்பட கலைஞர் நேட்ரான் ஏரியின் அழகை புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஒரு பறவை ஏரியின் நீர்ப்பரப்பில் நிற்க முயற்சித்து தடுமாறி உள்ளே விழுந்தது. தண்ணீரில் மூழ்கிய அப்பறவை சில நிமிடங்களில் கல்லாக மாறிவிட்டதை பார்த்த அப்ப புகைப்படக் கலைஞர் அதிர்ச்சியடைந்தார். "பறவை இறந்ததைக் கண்டதும் தண்ணீரிலிருந்து அதனை மீட்டெடுக்க சென்ற போது தான் இதே போன்ற பல நூறு பறவைகள் செத்து மிதந்ததை கண்டு அதிர்ந்து போனேன். நான் அந்த காட்சியை கண்டவுடன் அப்பறவைகள் உயிரோடு இருக்கும் படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன்" என்று கூறியுள்ளார் புகைப்படக் கலைஞர் நிக்.
இது பறவையை மட்டுமல்ல எந்த வகை உயிரினமாக இருந்தாலும் அப்படியே கல்லாக மாற்றிவிடும் இயற்கை தன்மையுடையது. ஆனால் இங்கு வாழும் பிளமிங்கோ என்று கூறப்படும் நாரை வகையைச் சேர்ந்த பறவை இனங்கள் மட்டும் உயிரோடு இருக்கின்றன. அதற்கு காரணம் இயற்கையாகவே நாரையின் தோல் மற்றும் கால் நகங்களின் செதில்கள் மிக தடிமன் உடையது. இந்த நாரையின் மூக்கிலும் குறிப்பிட்ட சுரப்பிகள் உள்ளதால் அதிக உப்பு தன்மையுடைய நேட்ரான் ஏரியின் தண்ணீர் இவைகளை எதுவும் செய்ய முடியாது.
எகிப்திய மக்கள் நேட்ரான் ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி தான் பிணங்களை பதப்படுத்தி வைத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரி, மனிதர்கள், விலங்குகளுக்கு உபயோகமில்லாததாக இருந்தாலும் இந்த பயங்கரமான ஏரியின் அழகைப்பார்க்க பல ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.