சமையல் உலக ஜாம்பவானாக வளம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ஒரு புதிய சிக்கலில் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக ஒரு பெண்ணை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்பெண் தற்போது ஆறு மாத காலம் கர்ப்பமாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி தற்போது வைரலாகி, பல குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது.
பிரபலங்களின் இல்லத் திருமணம் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜின் சமையல்தான் என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலமானவர் ரங்கராஜ். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா அளவில் பல முன்னணி பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் வழங்கியவர். இவருடைய சொந்த ஊர் கோவை அருகே மாதம்பட்டி. சினிமாவில் "மெஹந்தி சர்க்கஸ்", "பென்குயின்" போன்ற படங்களில் நடித்து பிரபலமானவரும் கூட. இருந்தும் தனது சமையல் கலையை அடையாளமாக வைத்துக் கொண்டவர்.
தன் தந்தையிடம் இருந்து சமையல் கலையை கற்றுக் கொண்ட ரங்கராஜ் தனது தனிப்பட்ட திறமையால் அமெரிக்காவில் சொந்தமாக ரெஸ்டாரன்ட் திறக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களாக நடுவராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் இருந்தபோது கூட தன்னை பெண்களோடு சேர்த்து வைத்து பேசுவதை துளியும் விரும்பாதவர். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது தான் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை வடிவமைப்பாளருடன் நட்பு
சினிமா பிரபலங்கள் விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை பல முன்னணி பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர் ஜாய் க்ரிசில்டா. குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு வழக்கமாக இவர்தான் ஸ்டைலிஸ்ட். கடந்த இரண்டு சீசன்களாகவே நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இவர்தான் ஆடை வடிவமைப்பாளர். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. லிவ்-இன் உறவில் இருந்து வந்த இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மாதங்களாகவே ரங்கராஜுடன் சேர்ந்து இருப்பது போன்ற பதிவுகளை வெளியிட்டு வந்த ஜாய் க்ரிசில்டா, கடந்த காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜூடன் தர்மபுரிக்கு சென்று கொண்டாடியதாக பதிவிட்டிருந்தார். ஒன்று, இரண்டு பதிவுகள் அல்ல. தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜை குறிப்பிட்டு பல பதிவுகளின் மூலம் கவனம் ஈர்த்து வந்தார். அடிக்கடி "மை மேன்", "மை உயிர், உலகம்" என்று நெருக்கமான பதிவுகளையே வெளியிட்டு வந்துள்ளார் ஜாய்.
தற்போது திருமணம் ஆகிவிட்டதாக ரங்கராஜூடன் ஜாய் க்ரிசில்டா மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை "மிஸ்டர் அன்ட் மிசஸ் ரங்கராஜ்" என்று வெளியிட்டு, பிறகு சில மணி நேரத்தில் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அப்படி என்றால் திருமணத்திற்கான காரணம் இதுதானா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜாய் கிறிஸ்தவர், ரங்கராஜ் இந்து மதத்தை சேர்ந்தவர். ஜாய் வெளியிட்ட பதிவில் மங்கலகரமாக சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து கொண்டு, நெற்றியில் ரங்கராஜ் குங்குமம் வைக்கும்படியான புகைப்படத்தை பார்க்கும்போது ஜாய் மதம் மாறிவிட்டார் என்பது தெரிகிறது.
ஸ்ருதி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி சுருதி ஆவார். இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரும் கூட. இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. ஜாய் வெளியிட்ட செய்திக்கு பிறகு அனைவரும் ஸ்ருதியின் இன்ஸ்டா பக்கத்தை சென்று பார்த்தனர். அதில் ரங்கராஜின் மனைவி என்று தான் இன்னும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் க்ரிசில்டாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையில், ஸ்ருதி விவாகரத்து செய்யப் போகிறார் என்று பேசப்பட்டது. இதை தெரிந்த ஸ்ருதியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் கணவன், மகன்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "மை வோர்ல்ட், மை ட்ரைப், மை ப்ரைடு" என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்ருதி வெளியிட்ட இந்த போஸ்ட் ஏப்ரல் மாதம். ஜூலை மாதமே கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார் ஜாய்.
அப்படி என்றால் விவாகரத்து செய்யாமலேயே வேறொரு பெண்ணோடு தொடர்பிலிருந்து கர்ப்பமாக்கிவிட்டாரா ரங்கராஜ் என்று பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சையால் ரங்கராஜின் கரியரே காலியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவரை திருமண விசேஷங்களுக்கு புக்கிங் செய்ய கண்டிப்பாக யோசிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சைக்கு ஸ்ருதியும் ரங்கராஜூம் என்ன முடிவு காணப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.