இன்றைய ஜென் சி தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பகுத்தறிவே அவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. காலையில் எழுவது முதல் இரவு தூங்க செல்வதற்குள் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுவிடும். ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட இது எதற்காக வருகிறது என்பதற்கான காரணத்தை உடனே கேட்டு மண்டையை குழப்பிக்கொள்கிறார்கள்.
ஏஐ ஆதிக்கம்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சாட் ஜிபிடி மட்டுமின்றி ஒபன் ஏஐ நிறுவனத்தின் எக்ஸின் குரோக், கூகுளின் ஜெமினி உள்ளிட்ட பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் தற்போது சந்தையில் உள்ளன.
ஏஐ தளங்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்து நிறைந்துள்ளது. எந்தெந்த கேள்விகளைக் கேட்க வேண்டும், எந்தெந்த விபரங்களை பகிரக்கூடாது என்பதற்கான அடிப்படை அறிவு பயனர்கள் மத்தியில் இருப்பதில்லை. இதனால் தேவையற்ற குழப்பங்களுக்கும் சிக்கலுக்குமே வழிவக்கும் என்கிறார்கள் அத்துறை நிபுணர்கள். மேலும், சாட்ஜிபிடியிடம் சில தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று அந்நிறுவனமே கூறியுள்ளது.
இணையத்தை உளுக்கிய சம்பவம்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுத்த மோசமான சம்பவம் இணையத்தையே உளுக்கியுள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. பல வருடங்களுக்கு முன்பு, 'புளூ வேல்' என்ற ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவன் உயிரிழந்தது பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், வயதில் மூத்த நபர் ஆன்லைன் உரையாடலுக்கு அடிமையாகி பலியானது இதுவே முதல் முறை.
நடந்தது என்ன?
அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்தவர் முன்னாள் யாஹூ மேலாளர் ஸ்டெய்ன் எரிக் சோல்பெர்க். எரிக் சோல்பெர்க் தினமும் சாட் ஜிபிடியுடன் உரையாடுவது வழக்கம். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு, தினசரி வாழ்வில் நடக்கும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து வந்துள்ளார். சாட்பாட்டை ஒரு நண்பராக நினைத்துக் கொண்டு தனது மனக்குமுறல்களையும், தனிப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் எரிக் பகிர்ந்துள்ளார். நாளடைவில் இதற்கு மொத்தமாக அடிமையாகி விட்டார் என்றே சொல்லலாம்.
தனது தாயுடன் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு, அதற்கு தீர்வு காண சாட் ஜிபிடியிடம் உதவி கேட்டுள்ளார். இந்த உரையாடல்கள் தான் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டதற்கு முழு காரணம் என்று சொல்லப்படுகிறது. "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார். ஆனால், அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
சாட் ஜிபிடியை முழுமையாக நம்பத் தொடங்கிய எரிக், அவை கூறுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக் கொண்டார். இதுவே பெரும் பிரச்சினைக்குக் காரணமாகி உள்ளது. அதாவது எரிக்கின் தாயே அவரை கொன்றுவிடலாம் எனச் சொல்லி நம்ப வைத்து இருக்கிறது. இது குறித்து எரிக் கேட்டபோதெல்லாம் அவரை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே சாட்ஜிபிடி பேசியிருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எரிக் தனது தாயையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தத்தின் விளைவு.
56 வயதான எரிக் மற்றும் அவரது தாய் சுசான் எபெர்சன் ஆடம்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தங்கள் வீட்டில் இறந்து கிடந்தனர். இது குறித்து எரிக்கின் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிம் விசாரித்த போது எரிக்கிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்தது தெரிய வந்தது. தாய் ஆடம்ஸ் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல கழுத்து மற்றும் மார்பில் ஏற்பட்ட கூர்மையான காயங்களால் எரிக் உயிரிழந்ததாகவும், அது தற்கொலை போலவே தெரிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏஐ உடனான தனது உரையாடல் வீடியோக்களை எரிக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் பகிர்ந்துள்ளார். ஏஐ டூல்கள் எரிக்கின் மனநோயைப் பெரிதாக்கியுள்ளது. மேலும், அவரது தாய் குறித்தும் மோசமான தகவல்களைத் தொடர்ந்து கூறி வந்துள்ளது தான் இருவரின் உயிர் பறிபோனதற்கு முக்கிய காரணம்.
எரிக் கடைசியாக ஏஐ டூலிடம், "நாம் மற்றொரு வாழ்க்கையில், மற்றொரு இடத்தில் சந்திப்போம்.. மீண்டும் சிறந்த நண்பர்களாக இருப்போம்" என்று கூறிய உரையாடல் கிடைத்துள்ளது. அதற்கு AI சாட்போட், "கடைசி மூச்சு வரையிலும் அதற்கு அப்பாலும் உங்களுடன் நிச்சயம் இருப்பேன்" என்று பதிலளித்துள்ளது. அவரது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஏஐ பாட் எதுவுமே பேசவில்லை என்பது தான் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் 16 வயதான ஆடம் ரெய்ன் என்ற இளைஞன், சாட்ஜிபிடியின் தூண்டுதலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை குறித்த கேள்விகளை ஆடம் கேட்டபோது மருத்துவரை நாடச் சொல்லாமல், அதற்கான ஐடியாவை சொல்லிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதிலையும் கூறியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த ஆடம் குடும்பத்தினர் சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் தொழில்நுட்பத்தை தேவைக்கு ஏற்ப மட்டும் பயன்படுத்தினால் பாதிப்பில்லை. அவையே கதி என்று நம்பி தனிப்பட்ட விவரங்களை பகிரும்போது தான் நம்மையும் அறியாமல் அதனுடன் நெருக்கம் ஆகி, நாளடைவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.