தற்போதைய 21ம் நூற்றாண்டில், தொலைக்காட்சிகளில் அடிக்கடி வானிலை நிலவரம் சொல்வது போல, "விண்கல் பூமியை நோக்கி வருகிறது, எப்பொழுது வேண்டுமானாலும் அது பூமியை தாக்கலாம்" என்று பரபரப்பு செய்தியைச் சொல்வது வழக்கம். சில ஆர்வக்கோளாறுகள் பயந்து கொண்டு உலகம் அழியப்போவதாக எண்ணி பீதியில் இருப்பர். ஆனால் 1954 ஆம் காலகட்டங்கள் அப்படி அல்ல. ஏதாவது ஒரு நிகழ்வு நடந்த பிறகு தான் அது செய்தியாக மறுநாள் செய்தித்தாள்களில் வரும். இப்படித்தான் 1954-இல் வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நவம்பர் 30, 1954 அன்று அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரில் 'ஏன் ஹாட்சஸ்'என்ற பெண் ஹாயாக தனது வீட்டு சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. ஹாட்சஸ் மற்றும் அவரது கணவர் கண் விழித்துப் பார்க்கும்போது அறை முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. சிம்னி வெடித்து சிதறி விட்டதென்று இருவரும் நினைத்தனர். ஆனால் அறையின் நடுவே கிடந்த ஒரு பெரிய கல்லை பார்த்த பிறகு தான் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடந்திருப்பது தெரிந்தது. அந்தக் கல்லின் எடை சுமார் நான்கு கிலோ இருக்கும்.
ஹாட்சஸ் தனது இடதுபுற வயிற்றில் ஏற்பட்ட காயத்தை கவனித்தார். கூரையை கிழித்து விட்டு விழுந்த அமானுஷ்ய கல் தான் காரணம் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 4 கிலோ எடை உடைய கல் தாக்கி உயிருடன் இருப்பதே பெரிய விஷயம். இந்த கல் விழுவதற்கு முன்பு அலபாமாவில் உள்ள அனைவரும் வானில் சிவப்பு நிற வெளிச்சத்தை கண்டுள்ளனர். அது விண்கல் என்பது பின்னர் செய்தித்தாள்கள் மூலம் தெரியவந்தது.
ஹாட்சஸ் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வந்த ஹாட்சஸ், சிறிய காயம் என்பதால் சீக்கிரம் குணமாகி வீடு திரும்பி விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே போலீஸ் அதிகாரிகளுக்கு விண் கல்லை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விண்கல்லை பறிமுதல் செய்து விமானப்படையிடம் ஒப்படைப்பதாக சொல்லியிருந்தனர். ஆனால் ஹாட்சஸ் பிடிவாதமாக 'அந்தக் கல்லை யாரிடமும் தரப் போவதில்லை' என்று கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, ஹாட்சஸ் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர் 'இது என் வீட்டு கூரையில்தான் விழுந்தது, அதனால் எனக்குத்தான் சொந்தம்' என்று உரிமை கொண்டாடினார். அது ஒரு சாதாரண விண்கல் தான். ஆனால் அதை ஒரு பொக்கிஷமாக நினைத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்று விடலாம் என எண்ணி சிறுபிள்ளைத்தனமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
பல மாதங்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த விண் கல்லுக்காக உரிமை கோரி வழக்கு நடைபெற்றது. இறுதியாக தனது வீட்டு உரிமையாளர்க்கு ஹாட்சஸ் மற்றும் அவரது கணவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து விண் கல்லை பெற்றுக் கொண்டார். விண்கல்லை வாங்கியவுடன் 'ஆஹா ஓஹோ' என்று ஆனந்தத்தில் குதித்தனர். எப்படியும் யாராவது பல லட்சம் ரூபாய் கொடுத்து நம்மிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள் என்று தப்பு கணக்கு போட்டனர். ஆனால் அப்படி எந்த ஆஃபரும் வரவில்லை.
சில நாட்கள் அந்த விண்கல்லை வீட்டின் கதவு மூடாமல் இருக்க ஒரு தடுப்பாக பயன்படுத்தி வந்தனர். இந்தக் கல் ஒரு ரூபாய்க்கு கூட தேறாது போல என்று தெரிந்த பிறகு அலபாமாவில் இருக்கும் கண்காட்சி ஒன்றிற்க்கு இலவசமாக கொடுத்தனர். இன்றும் அது பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஹாட்சஸ் தனது 52 வயதில் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தார். வரலாற்றிலேயே முதல்முறையாக விண்கல் தாக்கி பாதிக்கப்பட்ட ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கே சேரும்.