கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்ட சொந்த மகனையே கருணை கொலை செய்ய அரசிடம் அனுமதி கேட்கும் தாயால் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே என்ற இடத்தில் வசித்து வருபவர் ரேணுகம்மா (45 வயது). சிறிய கையேந்தி பவன் அளவிலான ஹோட்டல் ஒன்றை நடத்தியபடி வறுமையில் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரேணுகம்மாவிற்கு அபிஷேக் (25 வயது) என்ற மகன் இருக்கிறார்.
தகாத நண்பர்களின் பழக்கத்தால் குடி போதைக்கு அடிமையான அபிஷேக், கஞ்சா போதைக்கும் பெரும் அடிமையாக இருந்து வருகிறார். அனுதினமும் கஞ்சா அடித்து விட்டு அந்த போதையில் அக்கம்பக்கத்தினரிடம் வம்பிழுத்து சண்டைக்கு செல்வது, தெருவில் போவோர் வருவோரை தேவையில்லாமல் வசை பாடி அடி வாங்குவது என, பொழுது விடிந்தால் ஏதாவது ஒரு பிரச்சினையை தாய் ரேணுகம்மாளுக்கு கொடுத்து, அவரை நிம்மதியாக ஹோட்டல் வேலையை செய்ய விடாமல் செய்து வந்துள்ளார்.
வாய்த்தகராறு, அடிதடி சண்டை என காலம் கடத்தி வந்த அபிஷேக்கின் அடாவடிகள் அதிகமாகி சமீப காலமாக சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீடு பெண்களிடம் அத்துமீறி பாலியல் சேட்டைகளை செய்யத் தொடங்கியுள்ளார். அபிஷேக்கின் அடாவடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அபிஷேக்கை அடித்து துவைப்பதுடன், அமைதியாக வாழ நினைக்கும் ரேணுகாம்மாளையும் தொந்தரவு செய்கின்றனர்.
"மகனை ஒழுங்காக கண்டித்து வை இல்லையென்றால் நடப்பது வேறு..." என நித்தம் மிரட்டல் சத்தங்களால் மனம் நொந்து பெரும் மன உளைச்சலால் நிம்மதியான வாழக்கை வாழ முடியாமல் தவித்து வந்த ரேணுகாம்மாள், வேறு வழியில்லாமல் மகன் அபிஷேக்கின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளை வைக்க ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
நேராக, 'துருவகெரே காவல் நிலையம்' சென்ற ரேணுகாம்மாள், போலிஸிடம் "என் மகனை நிரந்தரமாக சிறையில் அடையுங்கள், அல்லது நானே அவனை கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்" என கண்ணீர் விட்டு கதறி கெஞ்சி கேட்டுள்ளார்.
ரேணுகாம்மாளின் கதறலை கேட்டு கவலையடைந்த போலிஸ் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகின்றனர்.