20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மர்மமான சம்பவங்களுள் ஒன்று சோவியத் ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் நடந்த “Dyatlov Pass” சம்பவம். மிகவும் தேர்ச்சிபெற்ற மலையேற்ற குழுவில் 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் அனுபவசாலிகளாக இருந்தும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அவர்களது உடல்களை மீட்கும் போது நடந்த விசித்திரமான சம்பவங்கள் இன்றும் ஓர் புதிராகவே உள்ளன.
என்ன நடந்தது?
1959 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் “Igor Dyatlov” தலைமையிலான 10 பேர் கொண்ட குழு , யூரல் மலைப்பகுதியில் Trekking பயணத்தை தொடங்கினர். அவர்களின் இலக்கு , யூரல் மலைப்பகுதியில் உள்ள “Mount Otorten” மலை சிகரத்தை அடைவது தான் . ஆனால் அதில் ஒருவர் மட்டும் காய்ச்சல் காரணமாக வெளியேறிவிட்டார்.
பிப்ரவரி 1, 1959 அன்று அவர்கள் “Kholat Syakhl” என்னும் மலை அடிவாரத்தில் முகாம் அமைத்தனர். கடைசியாக அக்குழு செய்திகளை பரிமாறிக்கொள்ள 12 ஆம் தேதி தந்தி ஒன்று அனுப்ப முடிவு செய்தனர் . ஆனால் 20 ஆம் தேதி வரை எந்த ஒரு தந்தியும் வராததால், தேடுதல் குழு அமைக்கப்பட்டது . பிறகு உலகையே உறைய வைக்கும் பல திடிக்கிடும் நிகழ்வுகள் நடந்தன.
பிப்ரவரி 26 , 1959 அன்று தேடுதல் குழு முகாமை கண்டுபிடித்தது . ஆனால் பல விசித்திரமான நிகழ்வுகள் அரங்கேறின
கூடாரம் உள்ளே இருந்து கிழிக்கபட்டு இருந்தது
சிலர் காலணி இல்லாமல் உறையவைக்கும் குளிரில் ஓடின தடயம் இருந்தது
கூடாரத்தின் உள்ளே உணவு , உடைகள் எல்லாம் அப்படியே இருந்தன
இது மேன்மேலும் தேடுதல் குழுவை குழப்பம் அடைய செய்தது.
உடல்கள் மீட்பு
தேடுதல் குழு பல நாட்கள் கழித்து அவர்களது உடல்களை மீட்டனர் . முதல் இரண்டு உடல்கள் கூடாரத்தில் இருந்து 1.5 Km தொலைவில் ஒரு மரத்தின் அடியில் கிடைத்தது. மேலும் மரக்கிளை முறிக்கப்பட்டிருந்தது . அவர்கள் காலணி இல்லாமல் இருந்தனர் , அவர்கள் கனத்த ஆடைகள் எதையும் அணியவில்லை. அடுத்த மூன்று உடல்கள் கூடாரத்திற்கும் மரத்திற்கும் நடுவே கிடைத்தன. அவர்கள் கூடாரத்திற்கு திரும்ப முயற்சித்தது போல இருந்தது. மீதமுள்ள கடைசி நான்கு உடல்கள் ஒரு பள்ளத்தாக்கில் 75 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களுக்கு பலமான காயம் ஏற்பட்டு இறந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை ஓடு உட்புறமாக உடைந்தது, இருவருக்கு மார்பெலும்பு முறிந்தது, மேலும் ஒருவருக்கு நாக்கும் கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் இருந்தன. எலும்பு முறிவுகள் மிகவும் கடுமையாக இருந்ததால் நிபுணர்கள் அவற்றை கார் விபத்தில் ஏற்படும் காயங்களுடன் ஒப்பிட்டனர். இருப்பினும், வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாதது குழப்பம் அடைய செய்தது. எதிர்பாராத வகையில் இருவரின் உடையில் அணு கதிர்வீச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சோவியத் அதிகாரிகள் விசாரணை நடத்தினர், ஆனால் தெளிவான பதில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு மே 1959 இல் மூடப்பட்டது, மேலும் அதன் ஆவணங்கள் பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டன.
சதி கோட்பாடுகள்
1) பனிச்சரிவு கோட்பாடு
இது நிபுணர்களால் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு. இந்த கோட்பாட்டின் படி பனிச்சரிவு ஒன்று ஏற்பட்டதால் அவர்கள் கூடாரத்தை கிழித்து கொண்டு வந்தனர்.மேலும் அவர்கள் பீதியினாலும் உறைபனி வானிலையாலும் திசைதிருப்பப்பட்டனர். பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் உள்ள கடுமையான காயங்கள் அதிக எடையுள்ள பனி விழுந்ததால் ஏற்பட்டன. இருப்பினும், அந்த இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை . காயங்கள் மிகவும் விசித்திரமாக இருந்தன.
2) இராணுவ சோதனைகள்
மலையேறுபவர்கள் தற்செயலாக சோவியத் ரஷ்யாவின் இராணுவ சோதனை மண்டலத்தில் அலைந்து திரிந்தனர். ஒருவேளை அவர்கள் “Parachute Mines” போன்ற ரகசிய ஆயுதங்களால் பாதிப்பு அடைந்தது இருக்கலாம் . மேலும் அங்கு வானத்தில் அடர் ஆரஞ்சு நிற பந்து போன்ற ஒன்று தென்பட்டதாக உள்ளூர் வாசிகள் கூறுவது சோவியத் ரஷ்யாவின் ரகசிய ஏவுகணையாக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது
3) Infrasound கோட்பாடு
Infrasound என்பது மனிதர்களால் கேட்க முடியாத ஆனால் உணரக்கூடிய “Low Frequency” அலைகளைக் குறிக்கிறது. மலையின் மீது வீசும் காற்று Infrasound ஐ உருவாக்கியது. இதனால் அவர்கள் பீதி அடைந்து கூடாரத்தை விட்டு வெளியேறினர். இந்த கோட்பாட்டின் சிக்கல் என்னவென்றால், அது காயங்களை விளக்கவில்லை.
4) Yeti போன்ற காட்டு விலங்குகளின் தாக்குதல்
ஒரு Yeti அக்குழுவைத் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி இருக்கும் என ஒரு சிலர் வாதிடுகின்றனர். மற்றவர்கள் அது ஒரு பனி கரடியாக கூட இருக்கலாம் என வாதிடுகின்றனர் இருப்பினும், அந்த இடத்தில் விலங்குகளின் தடங்கள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
5) அமானுஷ்ய சக்தி அல்லது Alien கோட்பாடு
அங்குள்ள மக்கள் வானத்தில் அடர் ஆரஞ்சு நிற பந்துகளை பார்ததாக கூறுவதன் மூலம் இது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். வேறு சிலரோ இங்கு ஆவிகள் உலாவுவதாக கருதுகின்றனர்.
இன்று வரை தீர்க்கப்படாத மர்மங்களுள் இதுவும் ஒன்று !!