பிறப்பும், இறப்பும் அனைவருக்குமே சமம். எப்படி பிறக்கிறோம், எப்படி இறக்கிறோம் என்று தெரிந்த நமக்கு, இறந்த பிறகு நம் ஆத்மாவிற்கு என்ன ஆகும், நம் யோசனைகள் வேறுபடுமா போன்ற பலவிதமான கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும். இதற்கு பதில் அளிக்கும்படி, இறந்த பின் சில நிமிடங்களில் உயிர் பிழைத்த ஒருவர் கூறும் அமானுஷ்ய கதையை பார்ப்போம்.
2019 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள 68 வயது மூதாட்டியான சார்லட் ஹோம்ஸ் ரத்த கொதிப்பு (blood pressure) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருக்கும்போதே ரத்த கொதிப்பு அதிகமாகி திடீரென அவரது மூச்சு நின்று விட்டது. மருத்துவர்கள் இரண்டு முறை பல்வேறு பரிசோதனைகளை செய்த பின் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி படுத்திக் கொண்டனர். சார்லட் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
உடனிருந்த சார்லட்டின் கணவர் செய்வதறியாமல் உறைந்து போய் நின்றார். இதுகுறித்து அவரது கணவர் டேனி கூறியது, "நான் சார்லட்டிடம் இந்த பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது, எவ்வளவு நன்றாக மனம் வீசுகிறது, தயவு செய்து கண் விழித்துப் பார் என்று அழுது புலம்பினேன். அந்த அறையில் பூக்கள் எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும், இருந்தாலும் சார்லட் இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சார்லட்டை திரும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்று விடமாட்டேனா என்ற ஒரு ஏக்கம் மட்டுமே இருந்தது" எனக் கூறியுள்ளார்.
சுமார் 11 நிமிடங்களுக்குப் பிறகு, உடல் அசைவு எதுவுமின்றி கிடந்த சார்லட்டிற்கு திடீரென உயிர் வந்து கண்விழித்து டேனியை பார்த்தார். டேனிக்கு ஒன்றும் புரியாமல் அல்லு விட்டது. உடனே எடுத்தேன் பாரு ஓட்டம் என ஓடிச் சென்று மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வந்தார். மருத்துவர்கள் சார்லட்டின் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதையும் அவர் நார்மலாக பேசுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 'இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்' என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.
சரி, கண்விழித்த சார்லட் எனக்கு என்ன ஆயிற்று என கேட்பார் என நினைத்த மருத்துவர்கள் மற்றும் அவரது கணவருக்கு இன்னொரு அதிர்ச்சி. சார்லட் தான் இறந்த பிறகு சொர்க்கம் மற்றும் நரகத்தைப் பார்த்ததாக இன்னொரு பூகம்பத்தை கிளப்பினார்.
அவர் கூறியது,"நான் கண்விழித்து பார்க்கும் போது டேனி மிகுந்த சோகத்தோடு அறையின் ஓரத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தார். மருத்துவர்கள் என் உடலில் பல்வேறு சோதனைகள் செய்து கொண்டிருந்தனர். பிறகுதான் நான் இறந்து விட்டேன் என்பது தெரிய வந்தது. சில வினாடிகளில் நான் மீண்டும் கண்களை மூடித் திறந்தபோது நான் பூமியை விட்டு வேறொரு உலகத்தில் இருப்பதை உணர்ந்தேன். நான் சென்ற இடம் சொர்க்கம் என்று தெரிந்தது. அது நம் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் பல மில்லியன் மடங்கு அதிகம். அங்குள்ள அனைவரும் கடவுளுக்குப் பணிந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அங்குள்ள இடம் முழுக்க பசுமையாக இருந்தது. சொர்க்கத்தில் உள்ள மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்தோடு இருந்தனர். எனது பெற்றோர்,உடன் பிறந்தவர்கள் போன்ற அனைவரையும் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால், நான் ஐந்தரை மாதம் கர்ப்பமாக இருக்கும் போது இறந்து போன என் குழந்தையையும் கண்டேன்".
நான் கடவுளிடம் 'இது எப்படி சாத்தியம்' என்று கேட்டேன். அதற்கு அவர் 'இங்கு ஆத்மாக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கும்' எனக் கூறினார். மேலும் அங்குள்ள அனைவருமே தனது முப்பது வயது இளமை தோற்றத்தோடு, மிகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.
இதனைக் கேட்ட மருத்துவர்கள் மற்றும் சார்லட்டின் கணவர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மூளை ஏதாவது குழம்பி விட்டதா என்று மருத்துவர்கள் எண்ணினர். மேலும் சார்லட் கூறியது, "அந்த இடத்தில் இருந்து சில தூரம் கடந்து நரகத்தையும் கண்டேன். அங்குள்ள மனிதர்கள் அனைவரும் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் பார்ப்பதற்கே பயமாக, மோசமான அழுகிய வாடை அடித்தது. அங்கு நான் கேட்ட கதறல் சத்தம் இன்னும் என்னை பதைபதைக்க வைக்கிறது. என் அப்பா என்னிடம் வந்து 'இதை பார்த்து எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்' என கூறினார்".
சார்லட் பேசுவதைக் கண்டு அவரது கணவர் 'நீ கூறுவதை நான் நம்புகிறேன்' என்றார். சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, உடல்நலம் சரியாகி கணவரோடு வீடு திரும்பினார். சிலர் சார்லட் கூறியதை நம்பினாலும் சிலருக்கு சொர்க்கம், நரகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை.
சார்லட் 2023 ஆம் ஆண்டு தனது 72 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அதுவரை, இது குறித்த விஷயங்களை நிறைய மக்களிடம் பகிர்ந்து கொண்டும், தொலைக்காட்சியில் பேட்டி அளித்தும் வந்தார். கண்டிப்பாக நாம் இறந்ததற்கு பிறகு ஒரு உலகம் இருப்பதாகவும், அதுவரை நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.