ஸ்ரீவில்லிபுத்துார்: தன்னிடம் கல்லூரியில் படித்த மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக நடக்க தூண்டிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பணியாற்றி வந்தார் நிர்மலாதேவி. கணிதத் துறை பேராசிரியரான நிர்மலா தேவிக்கு, மதுரை பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித் துறையிலும் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளுடன் நல்ல நட்பும் அந்த அதிகாரிகளின் மூலம் பெரும் செல்வாக்கும் இருந்து வந்தது. தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கு, கல்லூரி மற்றும் பல்கலை கழக நிர்வாகத்தில் உயர் தவியில் உள்ள தன்னுடைய நண்பர்கள் சிலருடன் பாலியல் ரீதியில் அனுசரித்து சென்றால், எதிர்காலத்த்தில் அந்த மாணவிக்கு சலுகைகள் மற்றும் நல்ல பலன்கள் கிடைக்கும் என நிர்மலா தேவி போனில் பேசிய உரையாடல் 'ஆடியோ' பதிவாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மாணவி மட்டுமின்றி, மேலும் பல மாணவிகளையும் நிர்மலா தேவி பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நிர்மலா தேவியின் நட்பு வட்டாரத்தில் இருந்த பல பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தகவல்கள் வேகமாக பரவியது.
நிர்மலா தேவியின் செல் போன் பேச்சு 'ஆடியோ' பதிவினை ஆதாரமாக வைத்து, 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நிர்மலா தேவியின் நட்பு வட்டத்தில் இருந்த மதுரை பல்கலை கழக பேராசிரியர் முருகன், அலுவலர் கருப்பசாமி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போது அருப்புகோட்டை எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி வழக்கை புலனாய்வு செய்து, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின், வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கல்லுாரி செயலர், பாதிக்கப்பட்ட மாணவியர், பேராசிரியர்கள், பல்கலை அலுவலர்கள் என மொத்தம் 84 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கில் 192 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கொரனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்ற பணிகள் முடங்கியதால், இந்த வழக்கின் விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டது. கொராவிற்கு பின்னும் வழக்கின் வேகம் மந்தமாக இருந்ததால், வழக்கை விரைந்து முடிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிர்மலா தேவி வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து வேகம் பிடித்த வழக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் விசாரணை மூலம் விரைவில் முடிவை நோக்கி நகர்ந்தது.
முன்னாள் அருப்புகோட்டை எஸ்.பி ராஜேஸ்வரி தற்பொழுது ஐ.ஜி யாக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் மார்ச் 14ம் திகதி கோர்ட்டில் சாட்சியமளித்தார். ஏப்ரல் 1ம் திகதி, இறுதிக் கட்ட வாதங்கள் நிறைவு பெற்று, ஏப்ரல் 26ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 26ம் திகதி நிர்மலா தேவி ஆஜராகவில்லை. நீதிமன்றத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, பாதி வழியில் நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்து விட்டார் என நிர்மலா தேவியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே தீர்ப்பு தேதியை ஏப்ரல் 29ம் திகதியாக மாற்றி அறிவித்தார் நீதிபதி பகவதி அம்மாள். ஏப்ரல் 29ம் திகதி நிர்மலா தேவி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார் நீதிபதி பகவதி அம்மாள்.
நேற்று(29 ஏப்ரல் 2024) காலை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மதியம் 1:10 மணிக்கு நீதிபதி பகவதி அம்மாள் தனது தீர்ப்பை வாசித்தார்.
முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்பதால், இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார் நீதிபதி பகவதி அம்மாள். அதேசமயம் நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 30ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். அதன்படி, இன்று(30 ஏப்ரல் 2024) நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதியம்மாள் தனது தீர்ப்பு விவரங்களை அறிவித்தார். மேலும், நிர்மலா தேவிக்கு ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்தார் நீதிபதி பகவதி அம்மாள்.