பூமியில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பழங்குடியினர் வாழ்கின்றனர். சிலர் தீவுகளிலும், மலைகளிலும், சிலர் காடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் சாதாரண உலகத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கென தனி சமூகத்தை உருவாக்கிக் கொண்டு, வெளி உலகோடு தொடர்பின்றி வாழ்ந்து வருகின்றனர். இதில் பஜாவு என்று கூறப்படும் தனித்துவமான பழங்குடியினர் கடலுக்குள் குடில் அமைத்து வாழ்கிறார்கள். தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீரிலேயே வாழ்ந்து, இறக்கும் இவர்களுக்கு நடக்கப் பழகுவதற்கு முன்பே நீந்தப் பழகியவர்கள்.
இந்த பஜாவு பழங்குடியினர் இந்தோனேசியா, மலேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோர பகுதிகளில் வசிக்கின்றனர். இப்பழங்குடியினர் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சுலு தீவுகள் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
"கடல் நாடோடிகள்", "கடல் ஜிப்ஸிகள்", "நீர் மனிதர்கள்" என்று பல பெயர்களை கொண்ட இந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரமே கடலை நம்பித்தான் உள்ளது. குறிப்பாக தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை கடலிலேயே கழிக்கின்றனர்.
இந்த பழங்குடி மக்கள் வாழ்வது எங்கு தெரியுமா? கடலுக்கு நடுவே குடில் அமைத்து, தனது பிறப்பு முதல் இறப்பு வரை அங்கேயே தனது மொத்த வாழ்க்கையையும் முடித்துக் கொள்கின்றனர். இன்று வரை கடிகாரம், காலண்டர் என எதுவுமே இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய பிறந்தநாள் தேதி கூட தெரியாதாம்.
இவர்களை நிலத்தில் பார்ப்பது மிக மிக அரிது. தாங்கள் பிடித்த மீன்களை விற்று அதன் மூலம் வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் மட்டுமே கரைக்கு வருகின்றனர். மற்றபடி நிலப்பகுதியில் இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை.
நாடோடிகள் போன்று பல இடங்களுக்குச் சென்று மீன் பிடிப்பதால், இந்த பழங்குடியினர் இறுதியில் மலேசியா, புருனே மற்றும் இந்தோனேசியாவின் நீர்நிலைகளில் இடம்பெயர்ந்து, கிழக்கு இந்தோனேசியாவில் மாலுக்கு, ராஜா அம்பட், சுலவேசி மற்றும் கலிமந்தனின் வடக்குப் பகுதியின் கடலில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் மதத்தை வழிபடுகின்றனர். பஜாவு மக்களுக்கு கடல் ஒரு வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக மட்டுமல்லாமல் அவர்களின் அடையாளமாகவும் உள்ளது.
பஜாவு மக்கள் பிறப்பிலேயே அசாதாரண டைவிங் திறன் கொண்டவர்கள். சிறு வயதில் இருந்தே டைவிங் செய்வதால் சாதாரண மக்களை விட 50 சதவீத பெரிய மண்ணீரலை கொண்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் சுமார் 200 அடி ஆழம் வரை சென்று, 5 முதல் 15 நிமிடங்கள் வரை மூச்சு பிடித்து டைவிங் செய்ய முடியுமாம். இதற்கு PDE10A என்ற மரபணுவில் உள்ள வேறுபாடு தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள் தெரியுமா? சதுப்பு நில மரத்தில் கிடைக்கும் மெல்லிய ரப்பர் பட்டையால் கைகளிலேயே சிறிய மரக்கண்ணாடிகள் செய்து கண்களுக்கு பாதுகாப்பாக அணிந்து கொள்கின்றனர். அதனை அணிந்து கொண்டு கைவினை ஈட்டிகளை பயன்படுத்தி மீன், ஆக்டோபஸ் மற்றும் அனைத்து வகை மீன்களையும் வேட்டையாடுகின்றனர். மேலும் இவர்கள் கடலை பற்றி நன்கு தெரிந்து வைத்தவர்கள். அதனாலேயே, குறிப்பாக ஆழ்கடலில் நீந்துவது மற்றும் கடல் வாழ் உயிரினங்களுடன் நட்போடு இருப்பது இவர்களுக்கு கைவந்த கலை. இவர்கள் வசிக்கும் மரப்படகுகளுக்கு லெபா-லெபா என்பது பெயர். இம்மக்கள் அவற்றை வீடுகளாகவும், பயண வழிமுறைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் சில சமூகத்தில் உள்ள மக்கள் கடலோரத்தில் உள்ள தூண் வீடுகளில் குடியேற தொடங்கியிருந்தாலும் பஜாவு பழங்குடியினர் உணவு, வருமானம் மற்றும் அன்றாட தேவைகளுக்கு என எல்லாவற்றிற்கும் கடலையே சார்ந்து உள்ளனர். மீன் பிடிப்பது அவர்கள் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது. பருவ கால மாற்றங்கள் காரணமாக, தற்போது தீவுகளுக்கு இடையில் நகர தொடங்கியுள்ளனர். இப்படி அமைதியான சூழலில் வாழ்ந்து வந்த மக்களுக்கு சுற்றுலா வளர்ச்சி அடைந்ததை அடுத்து பாரம்பரிய மீன் பிடித்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்களது வாழ்வாதாரமே சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் தங்களது கலாச்சாரத்தை பாதுகாக்க இப்பழங்குயினர் பாடுபட்டு வருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே டைவிங் செய்வதும், மீன் பிடிப்பதும், பவளப்பாறைகளுக்கு அருகே வாழ்க்கை என இயற்கையோடு இயற்கையாக பஜாவு பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை இப்படி கடலையே சார்ந்து இருப்பதால் நாடற்றவர்களாலும், சுகாதாரம், கல்வி, முறையான வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி இல்லாதவர்களாகவும் உள்ளனர். உலகின் முதல் மற்றும் கடைசியாக கடலில் வாழும் மக்கள் என்றால், அது பஜாவு இன மக்கள் தான்.