போர்ச்சுக்கல் நாட்டின் கோய்ம்ப்ரா நகருக்கு அருகில் இருந்த மோண்டோ அரோயோ என்ற சிறிய கிராமம்.
1772-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் திகதி. ஏஞ்சலிகா மரியா என்ற இளம் நர்ஸ் ஒருத்தி தன் வீட்டிற்கு அருகில் இருந்த காட்டு பகுதியில் இருந்த குளம் ஒன்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் நிலை தடுமாறி ஒரு பள்ளத்திற்குள் விழுந்தாள். அந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாத வகையில் மண் மற்றும் சிறுகற்களால் மூடப்பட்டிருந்ததை ஏஞ்சலிகா கவனிக்கவில்லை. சுதாரித்து எழுத்த ஏஞ்சலிகா அப்பொழுதுதான் கவனித்தாள் அந்த பள்ளத்தில் பிறந்து சில மாதங்களேயான பிஞ்சு குழந்தையின் உடல் ஒன்று புதைக்கப்பட்டு அரைகுறையாக புழுக்களால் அரிக்கப்பட்டிருந்தது.
திகிலில் உறைந்த ஏஞ்சலிகா வேகமாக பள்ளத்தை தோண்டி அந்த குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தாள். குழந்தையின் கழுத்தில் இன்னும் அழியாத காயங்களும், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட அடையாளங்களும் இருந்தன.
30 வயதாகும் ஏஞ்சலிகா மரியா அருகில் இருந்த கோய்ம்ப்ரா நகரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நர்ஸாக பணி புரிந்து வந்தாள். ஏஞ்சலிகா பள்ளத்தில் இருந்து ஒரு குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய விவரம் அக்கம் பக்கம் பரவ, கிராம மக்கள் ஒன்று கூடி விட்ட்னர்.ஏஞ்சலிகா கைப்பற்றிய குழந்தையின் சடலம் பற்றி கோய்ம்ப்ரா நகர பாதுகாப்பு அமைச்சர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தது. குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளங்களும் காயங்களும் கழுத்தில் இருந்தன.
குழந்தையின் அடையாளங்கள் குறிப்பெடுக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு தகவல் அனுப்பி தேடத் தொடங்கினார்கள் பாதுகாப்பு அமைச்சகத்தினர்..
அந்த காலகட்டத்தில் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த அரசி மரியா பிரான்ஸிஸ்கா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் "தொட்டில் குழந்தைகள்" திட்டத்திற்கு முன்னோடியான திட்டம் அது. "Foundling Wheel Chair" திட்டம்.
அதாவது, அரசு நடத்தும் அனைத்து ஆதரவற்றோர் இல்லங்கள், மற்றும் அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகளுக்கான தொட்டில்கள் வைக்கப்பட்டிருக்கும்.ஆதரவற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை வளர்க்க போதிய வசதியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை அந்த தொட்டில்களில் ஒப்படைத்து விட்டு செல்லலாம். அந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் அரசே நிறைவேற்றி அந்த குழந்தைகளை வளர்க்கும்.
இப்படிப்பட்ட ஒரு அரசு ஆதரவற்றோர் இல்லம் கோய்ம்ப்ரோ நகரில் செயல்பட்டு வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பிய இறந்த குழந்தையின் அடையாளங்கள், அந்த காப்பகத்தில் இருந்த குழந்தை ஒன்றின் அடையாளங்களை போன்றே இருந்ததால். அந்த காப்பக நிர்வாகிகல் பாதுகாப்பு அமைச்சகம் சென்று, கைப்பற்றப்பட்ட குழந்தையின் சடலத்தை பார்வையிட்டு, அந்த குழந்தை தங்கல் காப்பகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன் லூய்ஸா டீ ஜீஸஸ் என்ற நர்ஸால் தத்தெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தார்கள்.
"Foundling Wheel Chair" திட்டத்தின்படி, போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள பணக்காரர்கள், குழந்தை இல்லாதவர்கள் அல்லது குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர்கள், "Foundling Wheel Chair" திட்டம் மூலம் அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்த குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி குழந்தைகளை தத்தெடுக்கும் நபர் தனது முகவரி, அடையாள அட்டை விவரங்களை அரசு ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் கொடுக்க வேண்டும்
இந்த விதிகளின் படியே 24 வயது லூய்ஸா டி ஜூஸஸ் என்ற நர்ஸ் சில நாட்களுக்கு முன் கோய்ம்ப்ரோ அரசு ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்து அந்த குழந்தையை தத்தெடுத்து சென்றிருந்தார். காப்பகத்தில் லூய்ஸா டி ஜீஸஸ் கொடுத்திருந்த முகவரி, மற்றும் அடையாள அட்டை விவரங்களை வைத்து லூய்ஸா டி ஜீஸஸை பிடித்தார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.அதற்குள் பத்து நாட்கள் கடந்து விட்டிருந்தது.
லூய்ஸா டி ஜீஸஸை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் வைத்து விசாரித்த அதிகாரிகளிடம் ஆரம்பத்தில் அழுது புலம்பி தனக்கு ஒன்று தெரியாது என நடித்த லூய்ஸா, அதிகாரிகளின் விசாரணையின் தோரணை மாறியவுடன் உண்மைகளை கொட்டத் தொடங்கினாள்.
"Foundling Wheel Chair" திட்டத்தின்படி, குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் நல்லுள்ளங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், குழந்தையின் ஆரம்ப பட்ட செலவிற்காகவும், 600 ரெய்ஸ் (போர்த்துகீசிய ரூபாய்) சன்மானமாக அந்த தத்தெடுக்கும் நபர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் குழந்தைக்கு தேவையான துணிகள் மற்றும் ஒரு மாத காலத்திற்கு தேவையான் உணவு பொருட்கள், சத்து மாவு பொருட்கள் அந்த தத்தெடுக்கும் நபரிடம் கொடுக்கப்படும்.
குடும்ப வறுமை காரணமாக, அநாதையான தான், அந்த 600 ரெய்ஸ் பணத்திற்கும் உணவுப் பொருட்களுக்கும் ஆசைப்பட்டு அந்த குழந்தையை தத்தெடுத்து பின் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்தாள் லூய்ஸா டி ஜீஸஸ்.
லூய்ஸாவின் வார்த்தைகளில் முழு உண்மை இல்லை என்பதையும், அவள் எதையோ மறைக்கிறாள் என்பதையும் ஊகித்த பாதுகாப்பு அதிகாரிகள் லூய்ஸாவின் வீட்டை சோதனையிட்டனர்.
லூய்ஸா பொய் சொல்கிறாள். வேறு ஏதோ காரணத்திற்காக குழந்தையை கொன்றிருப்பாள், அந்த காரணம் என்ன என கண்டுபிடிக்கவே லூய்ஸாவின் வீட்டை சோதனையிட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். ஆனால், அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை குலை நடுங்க வைத்து விட்டது.
லூய்ஸா டி ஜீஸஸின் வீடு முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டு 18 குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. அத்தனை குழந்தைகளும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சில மாத குழந்தைகள். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் லூய்ஸா டி ஜீஸஸின் வீட்டை சுற்றியிருந்த காட்டு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி மேலும் 13 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட குழந்தைகளின் சடலங்களில் பெரும்பாலானவை பல நாட்களுக்கு முன் புதைக்கப்பட்டதால் சிதிலமடைந்திருந்தன. அத்தனை குழந்தைகளையும் "Foundling Wheel Chair" திட்டத்தில் தத்தெடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தாள் லூய்ஸா டி ஜீஸஸ்.
தத்தெடுக்கும் பொழுது கிடைக்கும் ஊக்கத் தொகை 600 ரெய்ஸ் மற்றும் உணவுப் பொருட்களுக்காகவே குழந்தைகளை தத்தெடுத்து, பின் சில நாட்களில் அந்த குழந்தைகளை கொன்று புதைத்து விட்டதாக ஒப்புக் கொண்டாள் லூய்ஸா டி ஜீஸஸ்.
வெவ்வேறு அரசு ஆதரவற்றோர் காப்பகம், மற்றும் மருத்துவ மனைகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்த லூய்ஸா டி ஜீஸஸ், தத்தெடுக்கும் பொழுது சில இடங்களில் தன்னுடைய ஒரிஜினல் முகவரி மற்றும் அடையாள அட்டைகளை கொடுத்திருந்தாள். பல இடங்களில் போலி முகவரி மற்றும் அடையாள அட்டைகளை பயன் படுத்தியிருந்தாள்.
1748-ம் ஆண்டி டிசம்பர் 10-ம் திகதி பிறந்த லூய்ஸா டி ஜீஸஸின் பெற்றோர் மானோயில் ரோட்ரிகஸ் மற்றும் மரியன்னா இருவரும் சாதாரண விவசாயிகள். மேனுவல் கோமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட லூய்ஸா டி ஜீஸஸின் நடவடிக்கைகள் சரியில்லாததால் கணவன் மேனுவல் கோமஸ் பிரிந்து சென்று விட, தனி மரமான லூய்ஸா டி ஜீஸஸ் கொய்ம்ப்ரோ நகரில் இருந்து கனின்ஹோஸ் நகருக்கு பார்சல்களை டெலிவரி செய்யும் பணி செய்து வந்தாள். அந்த வேலையில் சரியான வருமானம் கிடைக்காததால் "Foundling Wheel Chair" குழந்தைகளை தத்தெடுத்து சம்பாதித்த பின் அந்த குழந்தைகளை கொலை செய்யும் முறையை பின் பற்றி பணம் சம்பாதிக்க தொடங்கினாள்.
பார்சல் டெலிவரி செய்யும் பணியில், பார்சல்களை கஸ்டமர்களிடம் டெலிவரி செய்யும் பொழுது அவர்கள் தங்கள் அடையாள அட்டை மட்டும் முகவரி விவரங்களை லூய்ஸா டி ஜீஸசிடம் கொடுத்ததால், அந்த விவரங்கள குழந்தைகளை தத்தெடுக்கும் பொழுது அரசு காப்பகங்களில் கொடுத்து ஏமாற்றியிருக்க்கிறாள். தன்னை நர்ஸ் என சொல்லி பல அரசு காப்பக அதிகாரிகளை ஏமாற்றியிருந்தாள் லூய்ஸா டி ஜீஸஸ்.
லூய்ஸா டி ஜீஸசின் 33 கொலைகளையும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
லூய்ஸா டி ஜீஸஸ்
1772-ம் ஆண்டு ஜூலை 1-ம் திகதி. 24 வயது வயது லூய்ஸா டி ஜீஸஸின் கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டப்பட்டு கைகள் இரண்டும் காட்டப்பட்டு கொய்ம்ப்ரோ நகர தெருக்களில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டாள். ஒரு நீதிபதி லூய்ஸா டி ஜீஸஸின் கொலைகள் பற்றிய விவரங்களை தேதி வாரியாக படித்துக் கொண்டு பின் தொடர்ந்தார். நகரை முழுவதுமாக சுற்றி முடித்த பின் நகரின் மையப்பகுதியில் பொது மக்கள் முன்னிலையில், லூய்ஸா டி ஜீஸஸின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டன. நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிகளால் லூய்ஸா டி ஜீஸஸின் உடல் முழுதும் சூடுகள் வைக்கப்பட்டன.
இறுதியில் 'கரோட்டட்' என்ற மரண தண்டனை சேரில் லூய்ஸா டி ஜீஸஸ் அமர வைக்கப்பட்டு, அவளது கழுத்து மரக் கட்டைகளால் நெரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.
போர்ச்சுக்கல் வரலாற்றில் கடைசியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் லூய்ஸா டி ஜீஸஸ்.