இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரின் உள்ளங்கவர் கன்னியாக வலம் வந்து, 1997-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்ததுடன் உலக மக்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டவர் இளவரசி டயானா.
1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் திகதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் கார் விபத்தில் சிக்கி மரணமடைந்த இளவரசி டயானா மறுபிறவி எடுத்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், பிரபல பாடகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான டேவிட் கேம்பலுக்கு மகனாக பிறந்துள்ளார் என்ற செய்தி இப்பொழுது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் பாடகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமையுடன் பிரபலமாக வலம் வருபவர் டேவிட் கேம்பல் (51 வயது). அடிலெய்ட் நகரில் வசித்து வரும் டேவிட் கேம்பலுக்கு லியோ, பெட்டி, பில்லி என மூன்று குழந்தைகள். இதில் கடைக்குட்டியான ப்ல்லி கேம்பல்தான் இளவரசி டயானாவின் மறுபிறவி என பூகம்ப செய்தி ஒன்று உலகம் முழுதும் உலா வருகிறது.
இளவரசி டயானா இறந்து 19 வருடங்கள் கழித்து 2016-ம் ஆண்டு பிறந்த பில்லி கேம்பல் தனது இரண்டாவது வயதில் தற்செயலாக டயானாவின் புகைப்படத்தை பார்க்க நேர்கிறது. உடனே அவன் தன் தந்தை டேவிட் மற்றும் தாய் லிஸாவிடம் "இது நான்தான்." என சொல்லியுள்ளான்.
"ஆஹா அற்புதம்" என சிரித்தபடி வேறு என்ன விஷயம் என நக்கலாக கேட்ட அப்பா டேவிட்டிடம், "ஒரு நாள் இரவு சைரன் சத்தம் ஆம்புலன் சத்தம் என நிறைய வாகன சத்தங்கள் கேட்டது... கார் ஒன்று பெரிய சத்தத்துடன் எங்கோ இடித்தது... ஒரே இருட்டாக இருந்தது. அதன் பின் நான் இனிமேல் இளவரசி இல்லை என்பதை உணர்ந்தேன்." என சொல்லி அதிர்ச்சியை அள்ளிக் கொட்டியுள்ளான் சிறுவன் பில்லி கேம்பல்.
சில்வண்டு ஏதோ தெரியாத்தனமாக உளறும் என நினைத்த டேவிட் மற்றும் லிஸாவிற்கு பில்லி சொன்ன 'சைரன் சத்தம்', 'ஆம்புலன்ஸ் சத்தம்', 'கார் இடித்தது', என்ற அத்தனை வார்த்தைகளும் இளவரசி டயானாவின் மரணத்துடன் தொடர்புடையதாக இருந்தது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
இதையெல்லாம் விட பேரதிர்ச்சியாக பில்லி சொன்ன 'நான் இளவரசி' என்ற வார்த்தை டேவிட் மற்றும் லிசாவை உலுக்கியெடுத்து விட்டன. காரணம், பில்லிக்கு அந்த நொடி வரை இளவரசி டயானா பற்றி டேவிட்டோ, லிசாவோ அல்லது அவர்களது வீட்டில் இருப்பவர்களோ எந்த விசயத்தையும் சொன்னதில்லை. சொல்லும் அவசியமும் ஏற்பட்டதில்லை. 19 வருடங்களுக்கு முன் பிரான்ஸில் இறந்து போன இங்கிலாந்து இளவரசி டயானா பற்றி ஆஸ்திரேலியாவில் பிறந்த சிறுவனிடம் சொல்ல என்ன இருக்கிறது?
ஆனால், தனக்கு முன்பின் அறிமுகமில்லாத இளவரசி டயானா பற்றி சிறுவன் பில்லி சொன்னதுடன் நிற்காமல் அதன்பின் அடிக்கடி இளவரசி டயானா பற்றி கதை கதையாக சொல்லத் தொடங்கியுள்ளான்.
இளவரசி டயானா வாழ்ந்த, பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் ஸ்காட்டிஷ் இல்லமான பால்மோரல் கோட்டை, டயானா சிறுவயதில் வாழ்ந்த அயர்லாந்து வாழ்க்கை, மற்றும் இளவரசி டயானா அடிக்கடி சென்று வந்த ஸ்காட்லாந்து கில்ட்டட் வொண்டர்லேண்ட் பற்றியெல்லாம் ஏதேதோ தகவல்களை சொல்லி அவனது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளான்.
பில்லி சொல்லும் தகவல்கள் எல்லாம் உண்மையானவையா என அறிந்து கொள்ள இணையம் மற்றும் டயானாவின் வரலாற்று புத்தகங்கள் பலவற்றை தேடிப்படித்த தந்தை டேவிட்டால் ஆச்சர்யத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், பில்லி சொன்ன தகவல்கள் அத்தனையும் துல்லியமாக இருந்தன.
குடும்பத்துடன் சிறுவன் பில்லி கேம்பல்
இளவரசி டயானாவின் மகன்கள் மற்றும் தற்போதைய இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியை பற்றிக் குறிப்பிடும்பொழுது தனது மகன்கள் (!) என்றே குறிப்பிட்டுள்ளான் சிறுவன் பில்லி(!!!)
இளவரசி டயானா பற்றிய பில்லியின் துல்லியமான தகவல்களால் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்த அப்பா டேவிட் கேம்பல் தனது மீடியா பிரபலத்தை பயன்படுத்தி பில்லியின் போன ஜென்ம ஞாபகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இப்பொழுது உலகம் முழுதும் உள்ள பிரபல பத்திரிக்கைகள் பலவும் சிறுவன் பில்லியை பேட்டி காண போட்டிக் போட்டுக் கொண்டு முண்டியடிக்கின்றன. ஒரிஜினல் இளவரசி டயானாவின் வாழ்க்கை முழுதும் ஒரு நொடி கூட இடைவெளி விடாமால் உளவும் படை போல் துரத்தி வந்த மீடியாக்கள் இப்பொழுது மறு ஜென்ம டயானா 'பில்லி கேம்பலை' துரத்தத் தொடங்கியுள்ளன.
"டேய் சோனமுத்தா.... இத மாதிரி பல கதைகள் பார்த்தாச்சு.... 'பொல்லாக் ட்வின்ஸே' எங்களுக்கு தெரியும்.... டயானா ஹிஸ்ட்ரிய மூட்டை கட்டி வைச்சுட்டு, பில்லி பயலுக்கு ஸ்கூல் பாடத்த சொல்லிக் குடு" என டேவிட் கேம்பலை பார்த்து வெவரமாக சிரிப்பவர்களும் ஆஸ்திரேலியாவில் உண்டு.