சஹாரா பாலைவனம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பரந்த மணல் பரப்புகளும், கடுமையான வறட்சியும்தான். இப்படிப்பட்ட வறட்சி நிறைந்த பாலைவனம் ஒரு காலத்தில் பசுமையாக நீர் மற்றும் தாவரங்களோடு காட்சியளித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மையிலேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் பச்சை பசேல் என ஆறுகள், ஏரிகள் மற்றும் ஹிப்போக்கள் போன்ற நீர் சார்ந்த விலங்குகளின் பெருக்கத்துடன் அவ்வப்போது தாவரங்களாக இருந்தது என்பதற்கான பரவலான சான்றுகள் உள்ளன என்று ஹெல்சின்கி பல்கலைக்கழகம் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி எட்வர்ட் ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார்.
தற்போது விஞ்ஞானிகள் இயற்கை காலநிலை சுழற்சி மற்றும் மனித செயல்பாடுகள் பாலைவனத்தை மீண்டும் பசுமையான நிலப்பரப்பாக மாற்றப் போவதாக கணித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் உலகின் மிகப்பெரிய பாலைவனமாகும். இது மொராக்கோவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தில் மிகக் கொடிய விஷமுள்ள உயிரினங்கள் உள்ளன. இந்த சூடான பாலைவனத்தில் மழை பெய்வதே அரிதான விஷயம். வெப்பம் மிகுந்த இடமாக இருந்தாலும் கூட 2 கோடி பேர் இங்கு வாழ்கின்றனர்.
சஹாரா பாலைவனம் என்றாலே வறட்சி மற்றும் வெப்பம் மட்டுமே நம் நினைவுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே வெள்ளக்காடாக மாறி உள்ளது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஏரி ஒன்றும் முழுவதுமாக நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இது ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரான ரபாத்தில் இருந்து 450 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள டகோனைட் என்ற கிராமத்தில், ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது அங்கு வழக்கமாக பெய்யும் மழையை விட பல மடங்கு அதிகம் என கூறுகின்றனர்.
வரலாறு காணாத மழை பொழிவால் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரிகளும் தண்ணீரால் நிரம்பியுள்ளன. இது நாசா அறிவியல் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. "வெப்ப மண்டல சூறாவளியால் குறைந்த நேரத்தில் அதிகனமழை பெய்துள்ளது. இத்தனை பெரிய மழைப்பொழிவு பதிவாகி 30 முதல் 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இதனால் அப்பகுதியின் வானிலையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். வழக்கத்தை விட ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், நீர் ஆவியாவதை ஊக்குவித்து மேலும் சில புயல்களை உருவாக்கும்", என்று மொராக்கோ வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் பசுமையான நிலப்பரப்பாக இருந்துள்ளது. அப்பொழுது ஆப்பிரிக்கா ஈரப்பதமான நாடாக இருந்ததாக கூறப்படுகிறது. பழங்கால பாறை ஓவியங்கள் மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மூலம் சஹாராவில் ஒரு காலத்தில் உயிர்கள் செழித்து வளர்ந்தன என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற காலநிலை மாற்றங்கள் பூமியின் சுற்றுப்பிதையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக நடக்கின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் பெறப்படும் சூரிய ஒளியின் அளவும் மாறுபடுகிறது. இதன் மூலம் சஹாரா மற்றொரு ஈரப்பதமான கட்டத்தை நெருங்கி வருவதாகவும், இது சஹாராவில் மழை பொழிவை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அப்படி நடந்தால் சஹாரா பாலைவனம் மீண்டும் படிப்படியாக பசுமையாக மாறக்கூடும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.
21 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இது போன்ற காலநிலை மாற்றத்தை தற்போது அடைய முடியுமா என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பாலைவனத்தின் வரலாறு மற்றும் பல்வேறு சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். சஹாரா பாலைவனம் மீண்டும் பசுமையாக மாறினால், அது வரலாற்றில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
2050ல் சஹாரா பாலைவனம் ஆண்டுதோறும் 6000 சதுர கிலோமீட்டர் விரிவடையும் என ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்பமயமாதலால் இத்தகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. சஹாரா பாலைவனம் மட்டுமின்றி இந்தியாவின் தார் பாலைவனமும் பல ஆயிரம் கிலோ மீட்டர் விரிவடையும் என்றும் அடுத்த 100 வருடத்தில் பசுமையாக மாறும் எனவும் 'எர்த்ஸ் ஃபியூச்ர்' என்ற இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. இவை மட்டுமின்றி கிட்டத்தட்ட எல்லா பாலைவனங்களுக்கும் இதே நிலைதான்.
வரலாற்று ரீதியாக பார்த்தால் ராஜஸ்தானின் தார் பாலைவனமும் ஒரு காலத்தில் பசுமையாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவின் தார் பாலைவனம் உருவாகுவதற்கு பருவக்காற்று கிழக்கு நோக்கி நகர்ந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. தற்போது பருவக்காற்று மேற்கு நோக்கி விரிவடையத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தார் பாலைவனம் மீண்டும் பசுமையான நிலமாக மாறும் என நம்பப்படுகிறது. இது உண்மையானால் வருங்காலத்தில் இந்தியாவின் உணவு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். இதனால் சமூக பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மனித வாழ்வும் பரிணாமமும் பிரிக்க முடியாத ஒன்று. பரிணாமத்தால் தான் சஹாரா பாலைவனம் உருவானது. பாலைவனம் பசுமையாக மாறக்கூடும் என்பது மட்டுமின்றி பல கணிக்க முடியாத விளைவுகளும் ஏற்படக்கூடும் என்று பொதுவான கருத்தாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.