ஒரு கார்ப்ரேட் கம்பெனி, ஒரு நாட்டை கட்டுப்படுத்தி அதன் பொருளாதாரத்தை முழுமையாக அழிக்க முடியும் என்பதற்கு உண்மையான உதாரணமாக நைஜீரியா தான் இருக்கிறது. இது திரைப்படங்களில் வரும் கதை அல்ல, உண்மையான வரலாற்று சம்பவம். நைஜீரியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்திருந்தது. அந்த வேளையில், 1950 ஆம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அந்த வளம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புது வழியை காட்டும் என்று பலர் நம்பினர் . இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நைஜீரியாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின், பெரும்பாலும் Shell என்ற பெட்ரோலிய கம்பெனி அங்கு அதன் எண்ணெய் சுரங்கங்களை துவங்கின. ஆனால் அது உண்மையில் பெரும் அழிவுக்கு வழிகாட்டியது. Shell நிறுவனம் அலட்சியத்தால் பல எண்ணெய் கசிவுகளை ஏற்படுத்தியது. இந்த கசிவுகளின் விளைவாக, விவசாய நிலங்களும், ஆறுகளும், கடற்கரைகளும் மாசுபட்டன.
நைஜீரியாவின் பொருளாதாரத்தில் முக்கியமாக பங்காற்றுவது விவசாயமும், மீன்பிடி தொழில்களும் ஆகும். ஆனால் ஏற்பட்ட பல எண்ணெய் கசிவுகளால் இந்த நிலங்கள் மாசடைந்து , மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது. இதனால், மக்கள் பலர் பட்டினியால் இறந்தனர்.
இந்த நிலையில், Shell நிறுவனத்தின் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் பல கொடுத்து, எண்ணெய் வளங்களை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தினார்கள். இதனால், அந்த எண்ணெய் வளத்திலிருந்து வரும் வருவாய்கள் அனைத்தும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளின் பாக்கெட்டுக்கும் சென்றுவிட்டது. அதனால், இந்த பணம் பொதுமக்களுக்கு துளியும் செலவிடபடவில்லை. இதன் காரணமாக நாட்டில் 50 சதவீத மக்களுக்கு அடிப்படை கல்வி கூட கிடைக்காமல், அவர்கள் தேவையான மருத்துவ சேவைகளுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையை மாற்றவேண்டிய மக்கள், பல முறை போராடினாலும், அவர்களது போராட்டங்களை இராணுவம் அடக்கியது. பல போராட்ட குழுக்கள் ஆயுதமேந்தி போராடினர். இந்த போராட்டங்களை அடக்குவதற்கு, இராணுவம் வன்முறைகளை பயன்படுத்தியது. பலர் இந்த போராட்டங்களில் உயிரிழந்தனர். சிலர் தூக்கில் இடப்பட்டனர். இந்த நிகழ்வுகளின் காரணமாக, நைஜீரியாவின் வளங்கள் இன்னும் சுரண்டப்பட்டு, அங்கு மக்களின் நிலை மோசமானதாகவே இருந்து வருகிறது. இன்று நைஜீரியா நாடே திவாலாகும் நிலையில் உள்ளது.