பூமியின் உட்புறத்தில் உள்ள மிகவும் வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கின்றோம். பொதுவாக எரிமலை என்றாலே, அது அமைந்திருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் சூடான வெப்பநிலை நிலவும். ஆனால் ஒரு எரிமலையே பூமியின் குளிர்ச்சிக்கு காரணமாக இருந்தது உங்களுக்கு தெரியுமா?
1831 ஆம் ஆண்டு வெடித்து, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் காலநிலையை குளிர்ச்சி அடையச் செய்த மர்ம எரிமலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்ம எரிமலையை "ஜவாரிட்ஸ்கி" என்றும் கூறுகின்றனர். இது அமைந்துள்ள இடம் 'குரில்' தீவின் ஒரு பகுதியான 'சிமுஷிர்' தீவு. அதிகப்படியான சல்ஃபரை வெளியேற்றியதன் மூலம் காலநிலையை மாற்றி, சூரியனை வெவ்வேறு நிறங்களில் தோற்றமளிக்க செய்தது.
எரிமலையில் இருந்து சிதறடிக்கப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை அடைத்து, சூரிய ஒளி உள்ளே வராமல் தடுக்கப்பட்டது. அதனால், சூரியன் பார்ப்பதற்கே நீல நிறத்தில் காட்சியளித்தது. சூரிய ஒளி இல்லாததால், குரில் தீவுக்கு அருகே உள்ள ஜப்பானில் பஞ்சம் நிலவியது. அப்போது பூமியின் வளிமண்டலத்தை சூழ்ந்த சாம்பல் மற்றும் எரிமலை துகள்கள் ஜவாரிட்ஸ்கி எரிமலை வெடித்ததால் உண்டானவை என்று அன்று வாழ்ந்த மக்களுக்கு தெரியவில்லை.
19ஆம் நூற்றாண்டின் மிக சக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பின் போது, வடக்கு அரைக்கோளத்தில் (Northern hemisphere) சராசரி வெப்பநிலையை விட 1 டிகிரி செல்சியஸ் குறைந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றங்களுக்கு காரணம் எந்த எரிமலை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள ஜாவரிட்ஸ்கி எரிமலை வெடிப்புதான் பூமி குளிர்ச்சி அடைந்ததற்கான காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணரான வில் ஹட்சின்சன் கூறுவது,"உலகின் பெரும்பாலான எரிமலைகளில், அதிலும் குறிப்பாக தொலைதூரங்களில் உள்ள எரிமலைகளின் வரலாற்றை பற்றி எங்களுக்கு மிகவும் குறைவான புரிதல் உள்ளது" என்று கூறுகிறார். "ஒரு காலத்தில் சோவியத்தின் நீர் மூழ்கிக் கப்பல் தளத்தின் தாயகமாக இருந்த சிமுஷிர் தீவில் யாரும் வசிக்கவில்லை. அதனால் அங்கு நடந்த பெரும்பாலான நிகழ்வுகளை சேகரிப்பது சவாலாக இருந்தது", என்று ஹட்சின்சன் விளக்குகிறார். மேலும் இந்த தீவின் வரலாற்றை பற்றி எழுதப்பட்ட ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, கடந்த கால எரிமலை செயல்பாட்டை கண்காணிக்க ஒரு பயனுள்ள வழிகாட்டியாக உதவுகிறது என்கிறார் ஹட்சின்சன்.
மற்ற எரிமலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட துகள்களை வைத்து பார்க்கும் போது, குரில் தீவில் அதிகப்படியான சல்ஃபர் வெளியானது தெரிகிறது. குரில் தீவில் இருந்து எடுக்கப்பட்ட துகள்களை ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் சோதித்த போது, ஜவாரிட்ஸ்கி எரிமலை தான் மிகப் பழமையானது என்றும், 1831 ஆம் ஆண்டு வெடித்ததும் தெரிய வந்தது. அதனால் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தியது ஜவாரிட்ஸ்கி எரிமலையே என்று ஹட்சின்சன் தெளிவுபடுத்தி உள்ளார்.
"இன்று நமது செயற்கைக்கோள்கள் மற்றும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு கண்காணிப்புகள் இருப்பதால், எதிர்காலத்தில் இது போன்ற எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டால், நீண்ட காலத்திற்கு ஒரு மர்மமாக இருக்காது. ஆனால் பல தொலைதூர எரிமலைகளில் அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கும் கருவிகள் இல்லை. மேலும், அடுத்த பெரிய அளவிலான வெடிப்பு எப்போது, எங்கு வரக்கூடும் என்பதை கணிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இந்த வேலை எனக்கு காட்டுகிறது", என்று ஹட்சின்சன் கூறுகிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, பூமியின் நன்மைக்காக இயற்கை சில அழிவுகளை எதிர்கொள்கிறது. ஆனால், மனிதர்கள் இயற்கை கொடுக்கும் பொக்கிஷங்களை நிராகரித்து, மென்மேலும் தீங்குகளை செய்து அழிவை நோக்கி செல்கிறான்.