தமிழக அரசியலில் அடுத்த சரவெடி கூட்டணி இந்த அண்ணன் - தம்பி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமான் - விஜய் அரசியல் கூட்டணிக்கு, தனது முதல் அரசியல் மாநாட்டில் முதல் பிடி மண்ணை அள்ளிப்போட்டார் விஜய். அப்படியா சங்கதி? இந்தா பார் என் ஆட்டத்தை என, கூட்டணியை மொத்தமாக மூட்டை கட்டி படுகுழியில் போட்டு புதைத்தே விட்டார் சீமான்.
நேற்று (நவம்பர் 1), நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டாட்டத்தின் போது நடபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய கருத்துகளுக்கு பலத்த பதிலடி கொடுத்துள்ளார்.
தனது மாநாட்டில், "தமிழ் தேசியமும், திராவிடமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பதுதான் நம்முடைய கருத்து." என தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். விஜயின் இந்த நிலைப்பாட்டிற்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார் சீமான்.
"தமிழ் தேசியமும் திராவிடமும் ஒண்ணு... எங்க கண்ணு.... என்ற புதிய தத்துவத்தை கேட்டதும் பயந்துட்டேன். காட்டுப் பூனையும் நாட்டுக் கோழியும் ஒண்ணு என்கிறார். அண்மையில் வெளிவந்த திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களிலும் ஒருவரே நடித்ததால் இப்படி நினைக்கிறார் போல... ஒண்ணு சாம்பருன்னு சொல்லு இல்ல கருவாட்டு குழம்புன்னு சொல்லு. ரெண்டையும் சேர்த்து கருவாட்டு சாம்பாருன்னு சொல்லாத... தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என்பது கொள்கை அல்ல கூமுட்டை.... அதுவும், அழுகிய கூமுட்டை. ரோட்டுக்கு அந்தப்பக்கம் நில்லு, இல்ல... இந்தப்பக்கம் நில்லு. ரோட்டுக்கு நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்து போய்டுவ.... இது நடுநிலை இல்ல.... கொடுநிலை..." என விஜயின் திராவிட, தமிழ் தேசிய நிலைப்பாட்டிற்கு பதிலடி கொடுத்தார் சீமான்.
தனது மாநாட்டில் பேசும் பொழுது, "அரசியல்ன்னா கோபமா கொந்தளிப்பவர்கள்தான், ஏதோ புரட்சி செய்ய வந்தவங்க என்ற கான்செப்ட் முதல்ல இருந்துச்சு. அதெல்லாம் நமக்கு எதுக்குங்க? அது நமக்கு செட் ஆகாதுங்க! அதனால, ஆ.... ஊ... ஆச்சா போச்சானு கத்துறத விட்டுட்டு, கோபமா கொந்தளிக்குறத விட்டுட்டு நேரடியா விஷயத்திற்கு வந்துட வேணும்." என்று பேசியிருந்தார் விஜய்.
விஜயின் இந்த கருத்து சீமானை பற்றியதுதான் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து சொல்லி வந்த நிலையில் இதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் சீமான்.
"நான் சத்தியத்தை பேசுபவன் அதனால் சத்தமாத்தான் பேசுவேன். சரக்கு இருக்கு கருத்து இருக்கு அதனால என் பேச்சு சத்தமாத்தான் இருக்கும். குட்டிக்கதை சொல்பவன் அல்ல நான். வரலாற்றை சொல்ல வந்தவன். கருவிலேயே என் எதிரி யார் என முடிவு செய்து விட்டு பிறந்தவன். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சிந்தித்து வந்தவன் அல்ல... கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நீங்க இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்க படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிட்டோம். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை, என் நெஞ்சு டயலாக்." என விஜயின் கருத்திற்கு பதிலடி கொடுத்தர் சீமான்.
விஜயின் அரசிய்ல் மாநாட்டிற்கு முன் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்திருந்த சீமான், " விஜயின் கொள்கை, கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே அவர் வேலை செய்தாலும், நான் அவரை ஆதரிப்பேன்." என சொல்லியிருந்தார். ஆனால், விஜயின் மாநாட்டு உரைக்கு பின் சீமானின் அணுகுமுறை மாறியுள்ளது.
"எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டியெல்லாம் எங்கிட்ட காட்ட வேணாம். 2026-ம் ஆண்டு என்னோட ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது." என சீமான் பேசியுள்ளது விஜயுடனான அவரது அரசியல் யுத்தத்தின் ஆரம்பமாகவே அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.