தெலுங்கு சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்று கொண்டாடப்பட்ட நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் விவாகரத்து பெரும் பேசு பொருளாக மாறியது. அதற்குப் பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சோபிதா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கினாலும், எதற்கும் அலட்டிக்காமல் இருவரும் அமைதியாக இருந்தனர். நடிகை சமந்தா ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட், டோலிவுட் ரசிகர்கள் என அனைவருமே சமூக வலைதளங்களில் 'இருந்தாலும் சமந்தாவை போல் வருமா' என்று சோபிதாவின் தோற்றத்தை கேலி செய்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருபவர்கள் எவருக்கும் வாய் திறக்காமல் இருந்து வந்த ஜோடி, சமீபத்தில் 'வோக்' என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் மாறி மாறி இருவரும் பேசிக்கொண்டது "எதுவுமே ஒத்து போகலையே" என்று கூறும்படி அவர்களுக்குள் இருக்கும் வேற்றுமையை வெளிப்படையாக காட்டுகிறது.
'வோக்' நடத்திய நேர்காணலில் இருவருக்கும் பொதுவான பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முதல் கேள்வியாக, "தன் மீது தவறு இல்லை என்றாலும் முதலில் மன்னிப்பு கேட்பவர் யார்" என்ற கேள்விக்கு சோபிதா தன்னை தானே சுட்டி காட்டினார். அதற்கு சைதன்யா, "உனக்கு தேங்க்யூ, சாரி சொல்றதில்ல நம்பிக்கை இல்லையே. மறந்துட்டியா?" என்றார். அதற்கு சோபிதா காதலில் நன்றி சொல்வதும் சாரி சொல்வதும் சகஜம் தான் என்றார்.
அடுத்ததாக கேட்கப்பட்ட கேள்விதான் இந்த மொத்த இன்டர்வியூவின் ஹைலைட். "யார் முதலில் தனது காதல் விருப்பத்தை வெளிப்படுத்தியது?" என்ற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், சோபிதா சைதன்யாவை கை காட்டினார். அதற்கு சைதன்யாவும் சிரித்துக் கொண்டே "வித் ப்ளஷர்" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். என்ன தான் சமூக வலைதளங்களில் 'சோபிதா தான் சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம்' என்று கூறி வந்தாலும், உண்மையில் சைதன்யாவே இரண்டு பெண்களின் வாழ்க்கையிலும் முதல் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார்.
மேலும் இருவரில் யார் நன்றாக சமைப்பவர் என்ற கேள்விக்கு, "சைதன்யா எனக்கு ஒவ்வொரு இரவும் நன்றாக ஹாட் சாக்லேட் செய்து கொடுப்பார்" என்று சோபிதா பெருமையாக கூறினார். ஆனால் காபி போடுவது சமையலில் அடங்காதே என்று நாக சைதன்யா பதில் அளித்தார். மேலும் பல கேள்விகளுக்கு இருவரும் கிரிஞ்சாக பதில் அளித்து வந்தது பார்ப்பதற்கு சுவாரஸ்யம் அற்ற ஜோடியாக தெரிந்தது.
கடுமையான சூழ்நிலையை சரியாக கையாளுபவர் யார் என்று கேட்டதற்கு, சோபிதா என்று நாக சைதன்யா ஒப்புக்கொண்டார். சைதன்யா கூறவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது சோபிதா துலிபாலா மட்டுமே. சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஜோடிக்கும் மக்கள் மனதில் இந்த அளவிற்கு வெறுப்பு உண்டானது இல்லை. மேலும் இருவரில் மிகவும் ரொமாண்டிக்கான நபர் நாகசைதன்யா என்று சோபிதா கூறினார்.
இருவரும் பேசிக் கொள்ளும் விதத்தில் இருந்தே அவர்களுக்குள் நிறைய வேற்றுமைகள் இருப்பது தெரிகிறது. "எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்", என்று நியூட்டன் சொன்னது போல இருவருக்கும் உள்ள வேற்றுமையே அவர்கள் சேர்ந்ததற்கு காரணமாக இருக்கலாம். இந்த நேர்காணலை 'வோக்' பத்திரிக்கை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டது. கமெண்ட் ஏரியாவில் இருவரையும் ஆதரித்தும், எதிராகவும் பலதரப்பட்ட விமர்சனங்களை காண முடிந்தது.