கற்பனை செய்து பாருங்க ஒரு சின்ன ஊரில், சூரியன் மேல ஜொலிக்குது, மக்கள் தினசரி வேலையில மும்முரமா இருக்காங்க. திடீர்னு ஒரு பொண்ணு , நடுரோட்டில் நின்னு ஆட ஆரம்பிக்குது. ஆரம்பத்துல எல்லாரும் சிரிச்சு, “ஏய், என்னடி இது புது டான்ஸா?” என்று கேட்டிருப்பாங்க. ஆனா அடுத்த சில நாள்ல அந்த சிரிப்பு பயமாயிடுச்சு. ஏன்னா, அவளோட ஆட்டம் நிக்கல. ஒரு வாரத்துல 30 பேரு அவளோட சேர்ந்து ஆட ஆரம்பிச்சாங்க. ஒரு மாசத்துல 400 பேரு. இது 1518-ல நடந்த உண்மையான “நடனக் காய்ச்சல்”. இந்தக் கதை நம்ம ஊரு பஜனை மாதிரி ஆரம்பிச்சு, பயங்கரமா முடிஞ்ச ஒரு விசித்திர சம்பவம். வாங்க, இதை பற்றி கொஞ்சம் ஆழமா பாப்போம்.
எங்க நடந்துச்சு இது?
இது நடந்தது ஸ்ட்ராஸ்பர்க்-னு ஒரு இடத்துல, இப்போ இது பிரான்ஸ் பக்கம் இருக்கு, ஆனா அப்போ ஜெர்மனியோட ஒரு பகுதியா இருந்துச்சு. 1518-ல ஜூலை மாதம், சுட்டெரிக்கிற வெயிலில் ஃப்ராவ் ட்ரோஃபியா என்ற பெண் ஆட ஆரம்பித்தாள். அவள் ஆடினது நம்ம ஊரு குத்து பாட்டுக்கு ஆடுற மாதிரி இல்ல, நிக்காம தூங்காம சாப்பிடாம ஒரே இடத்தில் ஆட்டம் போட்டாள். அவளை பாத்து மத்தவங்களும் சேர்ந்தாங்க. இது ஒரு வாரத்துல பெரிய கூட்டமாயிடுச்சு. ஆனா இதுல சோகம் என்னனா பல பேர் உடல் சோர்ந்து, சில பேர் இதயம் நின்னு செத்தே போயிட்டாங்க.
ஏன் இப்படி ஆயிடுச்சு?
இப்போ நம்ம ஊருல யாராவது தெருவுல ஆடிட்டே இருந்தா, “பைத்தியம் புடிச்சிருச்சா?”என்று கேட்ப்போம். ஆனா அங்க அப்படி இல்லை. அப்போ மக்கள் இதுக்கு பல காரணம் சொன்னாங்க. சிலர், “இது புனித விட்டஸ்-னு ஒரு சாமியோட சாபம்”னு நம்பினாங்க. நம்ம ஊருல “பேய் புடிச்சிருக்கு”னு சொல்ற மாதிரி, அவங்க அது சாமியோட கோபம்னு நினைச்சாங்க. ஆனா உண்மையில இதுக்கு வேற விளக்கம் இருக்கு. அந்த காலத்துல பட்டினி, நோய், மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து மக்களோட மனதில் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதை “Mass Hysteria”னு சொல்றாங்க அதாவது ஒருத்தருக்கு ஆரம்பிச்ச பைத்தியம் மத்தவங்களுக்கும் பரவுறது.
அப்போ என்ன பண்ணாங்க?
இப்போ நம்ம ஊருல இப்படி நடந்தா, ஊரு பெரியவங்க “கோயிலுக்கு போயி பூஜை பண்ணு”னு சொல்லுவாங்க இல்ல? அங்கயும் அப்படித்தான் அவங்க முதல்ல “இது சாமியோட ஆட்டம்”னு நினைச்சு, இன்னும் ஆட சொன்னாங்க! ஆமாம், இசை வாசிக்கிறவங்கள கூப்பிட்டு, மேளம் அடிக்க சொல்லி, ஆடுறவங்களுக்கு உதவி பண்ணாங்க. ஆனா இது எரியுற தீயில எண்ணெய் ஊத்துற மாதிரி ஆயிடுச்சு இன்னும் பல பேர் ஆட ஆரம்பிச்சாங்க. பிறகு தான் புரிஞ்சுது, இது வேலைக்கு ஆகாதுனு. அப்புறம் ஆடுறவங்கள தடுத்து, ஓய்வெடுக்க வச்சாங்க. ஆனா அதுக்குள்ள பல பேர் உயிர விட்டுட்டாங்க குறிப்பாக ஒரு நாளைக்கு 15 பேர் வரை செத்தாங்க.
இதுக்கு அறிவியல் சொல்றது என்ன?
இப்போ அறிவியல் படிச்சவங்க இத பாக்குறப்போ, “இது ஒரு வகை மன நோய்”னு சொல்றாங்க. அந்த காலத்துல ரொம்ப பேர் வறுமையில இருந்தாங்க, பயம் அதிகமா இருந்துச்சு, மேல சாப்பிடுறதுக்கு ஒரு வகை தானியத்துல “எர்காட்”னு ஒரு பூஞ்சை இருந்திருக்கலாம். இது ஒரு மாதிரி போதை மருந்து மாதிரி மனச தடுமாற வைக்கும். நம்ம ஊருல சில சமயம் “கள்ளுல ஏதோ கலந்து தலை சுத்துது”னு சொல்றோமே, அது மாதிரி ஒரு விஷயம். ஆனா இது முழுக்க உறுதியில்ல சிலர் இத புரியாத மர்மம்னு சொல்றாங்க.
1518-ல நடந்த இந்த நடனக் காய்ச்சல் ஒரு சின்ன ஊரு சம்பவமா ஆரம்பிச்சு, உலக வரலாறுல ஒரு பெரிய கேள்வியா மாறிடுச்சு. இது சாமியோட சாபமா, மனசோட விளையாட்டா, இல்ல எர்காட்-னு ஒரு பூஞ்சையோட தாக்கமா இன்னும் முழுசா புரியல. ஆனா ஒரு விஷயம் தெளிவு மக்கள் ஒரு கூட்டமா ஒரு விஷயத்துல தீவிரமா நம்பினா, அதுக்கு பெரிய விளைவுகள் வரலாம்.