கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் காட்டில் தனியாக நடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள். திடீரென்று காட்டில் எங்கிருந்தோ வரும் அலறல் சத்தம் உங்கள் இரத்தத்தை உறைய வைக்கிறது. இது ஏதோ ஒரு பேய் படம் அல்ல. இது தான் “Aztec Death Whistle”. மெக்சிகோவில் Aztec இனத்தினர் பயன்படுத்திய ஒரு வித ஒலி கருவி . இக்கருவி எதிரிகளை பயமுறுத்தவும் , பலி சடங்குகள் செய்யவும் பயன்பட்டது. அக்கருவியை பார்க்கும் போதே நமக்கு திகிலூட்டும். ஏனெனில் அதன் முன்பக்கம் மண்டை ஓடு போல இருக்கும். எப்பேர்ப்பட்ட போர்வீரனாய் இருந்தாலும் இக்கருவியின் சத்தம் கேட்டு பயந்தவர்களும் வரலாற்றில் உண்டு.
Aztec இன மக்கள் எகிப்தியர்கள் போல மறுவாழ்வில் நம்பிக்கை கொண்டு இருந்தனர். அவர்கள் சாவை கண்டு அஞ்சவில்லை மாறாக சாவை பெருமையாக நினைத்து கொண்டாடினர். ஈம சடங்கு முதல் போர் வரை "Aztec Death whistle" அவர்களது அன்றாட வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தது என சொன்னால் கூட மிகை ஆகாது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த விசிலை முதலில் எதோ ஒரு பொம்மை என்று நினைத்தனர் . ஆனால் தற்செயலாக இதனை ஊதும் போது பேய் படத்தில் வருவது போல சத்தம் இதிலிருந்து வெளிவந்தது. இதில் திகிலூட்டும் விசயம் யாதெனில் சில விசில்கள் மனித எலும்புகளில் செய்யப்பட்டது . பழங்கால Aztec மக்கள் இந்த விசிலை அவர்களின் காற்று கடவுளான “Ehecatl” க்கு சமர்ப்பித்தனர். சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் Aztec இன மக்கள் எதிரிகளை மனரீதியாக பயமுறுத்த அவர்கள் இத்தகைய விசில்களை பயன்படுத்தினர் என்றும் , மேலும் ஒருவருக்கு ஈம சடங்கு செய்யும் பொழுது இந்த விசில் தரும் ஒலியானது தீய ஆவிகளை விரட்டும் என்று நம்பினர்.
என்னதான் இக்கருவி அவர்களது பலமாக இருந்தாலும் அதுவே பலவீனமாகவும் மாறிவிட்டது. வரலாற்று ரீதியில் அமெரிக்கா சிகப்பு இந்தியர்களின் பூமி. ஆனால் 15 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தவுடன் ஸ்பானியர்களின் பார்வை அமெரிக்கா , மெக்சிகோ பக்கம் திரும்பியது. மத்திய அமெரிக்காவில் பல இன குழுக்கள் வாழ்ந்து வந்தன. இருப்பினும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஸ்பானியர்கள் பூர்வகுடி மக்களை இன அழிப்பு செய்தனர். அதனால் கொடி கட்டி பரந்த Aztec சாம்ராஜ்ஜியம் ஸ்பானியர்களால் சரிந்தது. இன்றும் Aztec இன மக்களின் நாகரிக சுவடுகள் அங்கே கிடைக்கின்றன.