ஜப்பானின் ஓகினாவா தீவில் ஹாபு (Habu) என்ற விஷப்பாம்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் மக்களிடையே பெரும் பயம் ஏற்பட்டது. இந்த பாம்புகள் மிகுந்த விஷம் கொண்டவை. ஒரு முறை கடித்தால் சில மணி நேரங்களுக்குள் மரணம் நேரிடும். இதனால் மக்கள் வீடுகளில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாம்பின் கடிக்கு ஆளாகும் நிலைமை தான் அங்கு இருந்தது. பாம்பு கடிக்கு அப்போதைய காலத்தில் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே இன்னொரு பெரிய சிக்கலாக மாறியது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற முடியாது. மருத்துவமனைகள் தொலைவில் இருந்ததால், அங்கு போகவும் பெரும் சிக்கல்கள் இருந்தன. இதனால் பலரும் பாரம்பரிய மூலிகைகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலை உருவானது. அதுவும் பல நேரத்தில் பலன் கொடுக்காது.
இதற்கு ஒரு தீர்வு தேட, ஜப்பானிய அரசு இந்தியா மற்றும் இலங்கையை பார்த்தார்கள். அந்த பகுதிகளில் கீரிப்பிள்ளைகள் பாம்புகளுக்கு எதிரியாக இருந்து அவற்றை வேட்டையாடுவதால், இதையே ஜப்பானிலும் பயன்படுத்தலாம் என முடிவு செய்தார்கள். இதன் விளைவாக, 1979 இல் 30 கீரிப்பிள்ளைகள் ஓகினாவா தீவுக்கு கொண்டுவரப்பட்டன. இதுவரை எல்லாம் சரியாக நடந்தாலும் ஜப்பானிய அரசு ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிட்டது.
கீரிப்பிள்ளைகள் மிகவும் வேகமாகச் செயல்படும் ஒரு உயிரினம். அவை விரைவாக பாய்ந்து பாம்புகளை கொல்லும் திறன் கொண்டவை. ஆனால் அவை பகலில் மட்டுமே வேட்டையாடும். ஹாபு பாம்புகளோ இரவில் மட்டுமே செயல்படும். பகலில் அந்த பாம்புகள் மரங்கள், குகைகளில் மறைந்து விடும். இதனால், கீரிப்பிள்ளைகளால் அந்த பாம்புகளை சந்திக்கவே முடியவில்லை. இதனால் பாம்புகளை அதனால் உணவுக்கு கூட கொல்ல முடியவில்லை.
பாம்புகளை வேட்டையாட முடியாததால், கீரிப்பிள்ளைகள் தீவின் பிற உயிரினங்களை வேட்டையாட தொடங்கின. ஓகினாவாவின் அரிய உயிரினங்கள் அவற்றின் இரையாக மாறின. Ryukyu Rabbit என்ற ஓகினாவாவில் மட்டும் வாழும் முயல் இனமே அழிவுக்கு உள்ளானது. கீரிப்பிள்ளைகள் உணவு தேடி, பல உயிரினங்களை அழித்தன. இதனால், பாம்புகள் குறையவே இல்லை. 1979 ஆம் ஆண்டளவில், ஓகினாவா தீவில் மட்டுமே 30 கீரிப்பிள்ளைகள் இருந்தன. ஆனால் 2000 ஆம் ஆண்டளவில், அதே ஓகினாவா தீவில் கீரிப்பிள்ளைகளின் எண்ணிக்கை 10,000 ஆக உயர்ந்தது.
ஜப்பானிய அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் இன்று கீரிப்பிள்ளைகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. ஆனால் ஹாபு பாம்புகள் இன்னும் ஓகினாவாவில் காணப்படுகின்றன. இந்த பாம்புகளின் தாக்கத்தைக் குறைப்பதற்காக தற்போது பாம்பு கடிக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஓகினாவா தீவுகளில் நடந்த இந்த விஞ்ஞானத் தவறு, தீவின் அரிய உயிரினங்களை முற்றிலும் அழித்துவிட்டன. இயற்கை தனது சமநிலையை தானாகவே கண்டுபிடிக்கும். அதனுடன் விளையாடும் மனிதர்களுக்கு சில நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.