2018ம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் நீதிமன்றத்தையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் குழப்பம் அடையச் செய்தது. எஸ்ரா, மோனிகா என்று இரு பெயர்களை கொண்ட அந்த பெண் கொலையாளியா அல்லது வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 20 வயதில் இரண்டு காதலனுடன் தொடர்பு, பெயர் மாற்றம் என இன்னும் பல மர்மங்கள் நிறைந்தாக எஸ்ரா வாழ்க்கை நிறைந்துள்ளது.
எஸ்ரா பிறக்கும்போது அவளது அம்மாவிற்கு வயது 14. தந்தை யார் என தெரியவில்லை. எஸ்ராவிற்கு அவளது அம்மா 'மோனிகா கே' என்று பெயரிட்டாள். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது 4 வயதில் வளர்ப்பு தந்தையால் தத்தெடுக்கப்பட்டு, தனது 12 வயது வரை புதிய தாய் தந்தையரோடு வாழ்ந்து வந்தாள். அதன் பிறகு, அவளது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் தனது வளர்ப்பு தந்தையின் அன்பில் வளர்ந்து வந்தாள் எஸ்ரா. அவளது பெயரையும் எஸ்ரா கார்லன் என மாற்றிக்கொண்டாள்.
இப்படிப்பட்ட குடும்ப பின்னணியோடு எஸ்ராவின் வாழ்க்கை அமைந்திருந்தது. சில நாட்களுக்கு பிறகு, மீண்டும் தனது பெயரை மாற்றிக்கொண்டாள் எஸ்ரா. பெயர் மாற்றம் செய்து கொண்டால் தானும் புதிய மனிதராகலாம் என்று நம்பி, 'இன்டூ தி வைல்ட்' படத்தில் வரும் பிரபலமற்ற சாகச வீரர் கிறிஸ் மெக்காண்ட்லஸின் நினைவாக அவள் "எஸ்ரா மெக்காண்ட்லெஸ்" என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு விஸ்கான்சினின் ஈவ் கிளேரிக்கு குடிபெயர்ந்தாள். அங்குதான் அவளுடைய காதல் வாழ்க்கை தொடங்கியது.
19 வயதான எஸ்ரா மெக்காண்ட்லெஸ் இராணுவ ரிசர்வில் மருத்துவராக பணிபுரியும் ஜேசன் மெங்கல் என்ற 33 வயதான நபரை சந்தித்தாள். என்னதான் 14 வயது வித்தியாசத்தில் இருந்தாலும் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப்போயின. திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட காஃபி ஷாப்பில் சந்திப்பார்கள். அங்கு பரிஸ்டாவாக வேலை செய்யும் 23 வயதான அலெக்ஸ் வுட்வொர்த் உடன் இருவருக்கும் நட்பு உண்டாகியது.
நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற, அலெக்ஸ் மற்றும் எஸ்ரா ரகசியமாக ஜேசனுக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். எஸ்ரா ஜேசனையும் காதலித்தாள். அய்யோ குழப்பமா இருக்கே என்று பார்ப்பவர்களுக்கு தோன்றலாம். ஏனெனில் இது லவ் ட்ரயாங்கில் அல்ல, லவ் ஸ்கொயர். அலெக்ஸ் உடன் எஸ்ராவுக்கு தொடர்பு இருப்பது ஜேசனுக்கு தெரிந்து, மூவருக்குள்ளும் கடும் சண்டை ஏற்பட்டது. இதை தீர்க்க எஸ்ரா இருவரையும் பிரேக்கப் செய்துவிட்டு தானாக வேறொரு திட்டம் தீட்டினாள்.
ஜேசனின் நண்பர் எஸ்ராவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாள் எஸ்ரா. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டது. எஸ்ராவின் இந்த வினோத நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஜேசன், எஸ்ரா அலெக்ஸ் வீட்டிற்கு செல்வதைத் தெரிந்து அவளை பின்தொடர்ந்தான். கண்டிப்பாக எஸ்ரா ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இருக்கிறாள் என்று ஜேசனுக்கு தெரிந்தது. எஸ்ரா அலெக்ஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள சாலையில் அங்கும் இங்கும் நடந்தவாரே நோட்டமிட்டான். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து உடனே காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். பிறகு போலீசார் ஜேசனை கண்டித்து அனுப்பி விட்டனர்.
எஸ்ராவை பொருத்தவரை அலெக்ஸை சமாதானம் படுத்தி மீண்டும் நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, பிறகு ஜேசனுடன் ஒன்று சேர்வது தான் திட்டம். அதற்கு அலெக்ஸிடமே உதவியை நாடி கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதனால், தானாகவே ஒரு சதி திட்டம் தீட்டினாள் எஸ்ரா. அலெக்ஸை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தாள். சமாதானம் பேச கூப்பிடுகிறாளோ என்று நம்பி அவனும் சொன்ன இடத்திற்கு வந்தான்.
அங்கு சில நேரம் கழித்து, உடம்பு முழுக்க சேரும் சகதியாக, ரத்தம் சொட்ட சொட்ட மெதுவாக நடந்து சென்று அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடினாள் எஸ்ரா. தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர்களிடம் கூறினாள். உடனே அவர்கள் 911க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டது. தனக்கு என்ன நேர்ந்தது என்று முழுமையாக ஞாபகப்படுத்தி பார்க்க முடியவில்லை என்றும், அலெக்ஸ் என்னை ஏதாவது செய்து விடுவான் என கூறியும், ஜேசனை உடனே பார்க்க வேண்டும் என்றும் அவர்களிடம் கூறினாள். எஸ்ரா கூறுவதை முழுமையாக நம்பியது காவல்துறை.
எஸ்ரா கூறும்படியான சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை விரைந்தனர். அங்கு பார்த்த சம்பவம் முற்றிலும் வேறு. எஸ்ராவின் காரில் இறந்த நிலையில் அலெக்ஸ் சடலமாக மீட்கப்பட்டான். அவனது உடம்பில் பதினாறு முறை கொடூரமாக கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதை எஸ்ராவிடம் காவல்துறை கேட்டதற்கு அவளது பதில், "அலெக்ஸ் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினான். அதனால், நான் என்னை தற்காத்துக் கொள்ள அவனை கத்தியால் குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து விட்டேன்" என்றாள்.
விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்தது. எஸ்ராவின் கையில் "பாய்" என்று கத்தியால் கீறியபடி எழுதப்பட்டிருந்தது. அந்த கத்தியின் உரிமையாளர் எஸ்ராவின் தந்தை. அது அலெக்ஸ் கையில் எப்படி வந்தது என்பதற்கு தெளிவான எஸ்ராவால் தெளிவான விளக்கம் கொடுக்க முடியவில்லை. அதே கத்தியால் எஸ்ராதான் அலெக்ஸை குத்தினாள் என்பது நிரூபனமான ஒன்று. மேலும் எஸ்ரா கூறும் எதுவும் நடந்த நிகழ்வுக்கு ஒத்துப் போகவில்லை. எஸ்ரா தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளாள் என்பது சில மாதங்களுக்கு பிறகு நிரூபிக்கப்பட்டது.
எப்படியாவது ஜேசனுடன் சேர்ந்து விட வேண்டும் என்று பல கில்லாடி திட்டங்கள் போட்டு, அவனது ஆறுதலை பெற நினைத்து, கடைசியில் அவளது வாழ்க்கையே ஜெயிலில் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் எஸ்ராவுக்கு பலமாக பேசிய சமூக ஊடகங்களும் அவளது போலியான நடிப்பைப் பார்த்து வாய் அடைத்துப் போயினர்.