நீங்கள் உங்களது நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஆம் என்றால் எந்த வகை காரணங்களை வைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை சொல்ல வேண்டும். முதலில் மகிழ்ச்சியை எப்படி அளவிடுவது? ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். பொதுவாக வாழ்க்கையில் நாம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்ற ஒரு விளக்கம் உள்ளது.
நம்மை மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கும் விஷயங்களில் ஓய்வு நேரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் நம்பர் ஒன் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தில் அவர்களின் வேலை நேரம் வாரத்தில் மூன்று மணி நேரம் குறைக்க உரிமை உள்ளது. அமெரிக்கர்கள் வாரத்தில் 44 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆனால் பின்லாந்தில் 40 மணி நேரம் மட்டுமே ஒரு வாரத்தில் வேலை செய்கின்றனர். மேலும் நிறைய விடுமுறைகளும் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக பின்லாந்து அரசு சிறந்த முறையில் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றால் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு குற்றங்கள் மற்றும் ஊழல்கள் குறைவாகவே உள்ளன, இதனால் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவும் நம்பிக்கையும் உள்ளது.
இவை அனைத்தும் இணைந்து செயல்படுவதால் பின்லாந்து மக்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர், அதுவே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் காரணம்.
மார்ச் 20 அன்று வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை (WHR) 2024 இல் 143 நாடுகளில் பின்லாந்து 7 வது முறையாக முன்னிலை பெற்றுள்ளது. உலகிலேயே பின்லாந்து நாட்டில் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அவ்வளவு எளிதாக இந்த பட்டத்தை கையில் தூக்கி கொடுத்து விட மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் கேள்விகளை கேட்பதில்லை. பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. சுமார் 1,700 உறுப்பினர்கள், உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல பல்கலைக்கழகங்களின் உதவியுடன் இந்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான வழிமுறைகளைப் பின்பற்றி, பல கோணங்களில் கேள்விகளை வடிவமைத்து, அதற்கேற்றவாறு இயங்கும் நாட்டை தான் தேர்வு செய்வர்.
ஒவ்வொரு நாட்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3000 பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. GDP, சமூக பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இரக்க குணம், தனிமனித சுதந்திரம், ஊழலின்மை சுகாதாரம், தாராள மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதிலை வைத்து முடிவு செய்துள்ளனர். அவர்கள் சொல்லும் பதிலுக்கு ஏற்ப 0 முதல் 10 வரை அளவீட்டு எண்களும் கொடுக்கப்பட்டன. ஜீரோ என்றால் மிகவும் மோசம், பத்து மதிப்பெண்கள் பெற்றால் அது மிகச் சிறந்த அனுபவம் என்றும் வைத்துக் கொண்டனர்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்லாந்து ஏழு ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. நம் இந்தியா சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் 126 வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் கடைசி இரண்டு இடங்களை பெற்றுள்ளது.
முக்கிய நாடுகளான சீனா 60வது இடத்திலும், ஜப்பான் 51 ஆவது இடத்திலும், அமெரிக்கா 23 ஆம் இடத்திலும், ரஷ்யா 72 வது இடத்திலும் உள்ளது. ஊழலின்மை, சரியான மருத்துவம், சிறந்த கல்வி, பாதுகாப்பு போன்றவை அதிகரித்து குற்றங்கள் குறைந்தால் மற்ற நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.