நம்ம ஊருல எவ்வளவுதான் கஷ்டப்பட்டு ஓவியம் வரைந்தாலும் அதற்கு கிடைக்கிற சன்மானம் என்னவோ அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். அதற்காக நாம கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு ஐடியாக்கு வர்றதுக்கே நாட்கள் ஆகும். அப்படி வரைந்த ஓவியத்திற்கும் எதிர்மறையான கருத்துக்கள் சொல்லத்தான் செய்வாங்க.
ஆனால், இங்கு ஒருவர் வரைந்த ஓவியம் மில்லியன் கணக்கில் ஏலத்துக்கு போனது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் தான் மார்க் ரோத்கோ என்பவரால் 1954 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியம்.
பார்ப்பதற்கு என்னவோ மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் குழந்தைகள் தனது புத்தகத்தில் வரைந்து பழகும் ஓவியம் போன்று தான் உள்ளது. 46 மில்லியன் டாலருக்கு விற்றாலும் இந்த புகைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. 'அன்டைட்டில்டு' என்றும் மஞ்சள் மற்றும் நீல புகைப்படம் என்றே அழைக்கப்படுகிறது. அவர் வரைந்த ஓவியத்திலேயே இதுதான் அதிக விலைக்கு ஏலம் போனது.
அடுத்ததாக வில்லியம் டி கூனிங் என்ற அமெரிக்க கலைஞரால் வரையப்பட்ட ஓவியம் சற்றே வியப்பூட்டும்படி இருக்கிறது. 'இன்டர்சேஞ்ச்' என்று கூறப்படும் இந்த கிறுக்கல் ஓவியம் 1955 ஆம் ஆண்டு டேவிட் ஷெப்பன் என்பவர் ஏலத்தில் வாங்கினார். இந்த ஓவியமும் என்னவோ குழந்தைகளின் கிறுக்கல் போல இருந்தாலும் மவுசு அதிகம் தான்.
ஆச்சரியம் என்னவென்றால் இதனை 2015 ஆம் ஆண்டு 300 மில்லியன் டாலருக்கு டேவிட் ஷெப்பன் என்ற அதே நபர் விற்றார். இது உலகத்திலேயே டாவின்சியின் ஓவியத்திற்கு அடுத்து இரண்டாவதாக அதிக விலைக்கு ஏலம் போனது.
இது போன்ற ஓவியங்களின் அர்த்தம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தாலும் கலையை ரசிக்கும் ஓவியர்கள் மற்றும் சிலருக்கு இது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அடுத்ததாக பார்நெட் நியூமேன் என்பவர் நீல நிறத்தை பயன்படுத்தி வரைந்த இந்த புகைப்படம் 43.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இதன் பெயர் 'ஒன்மென்ட் VI' என்று அழைக்கப்படுகிறது. இவர் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியராக திகழ்ந்தார்.
இதுபோன்ற மிக எளிமையான ஓவியங்கள் புரிதலுக்கு வருவதில்லை என்றாலும் அனைவரையும் வியப்பூட்ட செய்கிறது.