நம் எல்லோருமே இந்த உலகத்தில் மிகப்பெரிய பேரழகி யார் என்று கேட்டால் முதலில் சொல்வது இந்த பெயரை தான்-கிளியோபட்ரா. பேரழகி கிளியோபட்ரா 39 வயதில் இறந்து விட்டாலும் இன்று வரை சக்தி வாய்ந்த பெண் என்று கூறப்படும் அளவிற்கு சாதனை படைத்தது எப்படி? விரிவாக பார்க்கலாம்.
332 பிசி காலகட்டங்களில் ஆட்சி செய்த மன்னர் அலெக்ஸாண்டரின் கீழ் போர் தளபதியாக இருந்தவர் டோலமி. அலெக்சாண்டர் இறப்புக்கு பிறகு 305 பி.சி யில் டோலமி எகிப்து நாட்டை ஆண்டு வந்தார். இவருக்கு பிறந்த பெண் தான் கிளியோபட்ரா. பிறப்பால் கிரேக்க வம்சத்தைச் சேர்ந்த கிளியோபாட்ரா பல மொழிகளில் வல்லமை பெற்றவர். கிரேக்க வம்சத்தில் பிறந்து சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மொழியை கற்றுக்கொண்டு அதை முறையாக பயன்படுத்திய ஒரே நபர் கிளியோபட்ரா மட்டுமே.
தனது 18 வயதில் தந்தையை இழந்த கிளியோபாட்ரா, அடுத்ததாக யார் எகிப்தை ஆள வேண்டும் என்ற சர்ச்சை நாட்டில் எழுந்தது. எகிப்திய முறைப்படி அரசரின் அடுத்த வம்சாவளியினர்தான் ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் கிளியோபட்ரா தனி ஒரு பெண்ணாக ஆட்சிக்கு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் கிளியோபட்ரா சிம்மாசனத்தை அடைவதற்காக தனது பத்து வயது தம்பியை எகிப்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டாள். மற்ற அரசர்களைப் போல் சுயநலம் இல்லாமல் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நல்லாட்சி புரிந்து வந்தாள். கிளியோபட்ராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மேலும் எகிப்திய பெண்கள் கிளியோபட்ராவைப் போலவே உடை உடுத்திக் கொள்ளவும், முக ஒப்பனை செய்து கொள்ளவும், அணிகலன்கள் அணிந்து கொள்ளவும் விரும்பினர். செழிப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த கிளியோபட்ராவின் புகழைப் பார்த்த அவளது தம்பிக்கு பொறாமை ஏற்பட்டது. கிளியோபட்ராவின் தம்பி சூழ்ச்சியாளர்கள் சிலரின் தூண்டுதல் படி 'இப்படியே விட்டாள் வரலாறு இவள் பெயரைத்தான் சொல்லும். ஒரு ஆண் மகனாக நான் தான் ஆட்சிக்கு வர வேண்டும்' என்று கூறி சண்டையிட்டான். அதனால் எகிப்தில் உள்நாட்டு போர் வெடித்தது. சூழ்நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து ரோமானிய நாட்டிற்கு தப்பித்துச் சென்றாள் கிளியோபட்ரா.
கிளியோபட்ரா தனது சிம்மாசனத்தை மீண்டும் பெற ரொமானிய நாட்டில் உள்ள ஜூலியஸ் சீசரின் உதவியை நாடினாள். ஜூலியஸ் சீசருக்கும் கிளியோபட்ராவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் 30 ஆண்டுகள். கிளியோபட்ராவைப் போல் ஒரு பேரழகி வந்து உதவி கேட்டால் முடியாதென்றா சொல்ல முடியும்? கிளியோபட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவளை திருமணம் செய்து கொண்டார். பிறகு சீசர் உடன் சேர்ந்து எகிப்து நாட்டை கைப்பற்ற இருவரும் போர் அறிவித்தனர். போரில் கிளியோபாட்ராவின் தம்பி உயிரிழந்தான். மீண்டும் எகிப்து நாட்டு சிம்மாசனத்தில் அமர, தனது இரண்டாவது தம்பியையும் திருமணம் செய்து கொண்டு ஆட்சியில் அமர்ந்தாள் கிளியோபட்ரா.
நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது கிளியோபட்ராவிற்கும் எகிப்து நாட்டிலேயே தங்கியிருந்த சீசருக்கும் ரகசியமாக 'சிசேரியன்' என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எகிப்தில் தங்கி இருந்த சீசர் ஒரு நாள் ரோம் திரும்பிய போது அங்கு மர்ம நபர்களால் 23 முறை கத்தியால் குத்தப்பட்டு துடி துடிக்க இறந்தார். இந்த செய்தி எகிப்திய மற்றும் ரோமானிய நாட்டில் தீயாய் பரவியது. சீசர் இறந்த செய்தியை கேட்ட கிளியோபட்ரா மனம் உடைந்து போய், கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ரோம் புறப்பட்டு சென்றாள். அப்போது சீசரின் நண்பரான மார்க் ஆண்டனியின் உதவியை நாடி, இருவரும் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி இடையே மெதுவாக காதல் மலர்ந்தது. முதல் மனைவியை மறந்து கிளியோபட்ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மார்க் ஆண்டனி. இதனால் முதல் மனைவியின் சகோதரனான ஆக்டேவியன் எப்படியாவது மார்க் ஆண்டனியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தான்.
எகிப்தில் வாழ்ந்து வந்த மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபட்ராவிற்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. கிளியோபட்ரா தனக்கு எதிராக செயல்படும் அனைவரையும் நாடு கடத்தினாள். ஆக்டேவியன் ரோமானிய மக்களிடம் மார்க் ஆண்டனியைப் பற்றி அவதூறுகள் பரப்பினான். ரோமன் ரத்தத்தில் பிறக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மார்க் ஆண்டனி ஒரு தேச துரோகி என மக்களிடம் தவறான எண்ணங்களை புகுப்பித்தான்.
ஆத்திரமடைந்த ரோமானிய மக்கள் எகிப்து நாட்டின் மீது படையெடுத்து சென்றனர். முதலில் மார்க் ஆண்டனியை கொன்று அவனுக்கு இறுதிச்சடங்கும் நடத்தப்பட்டது. தான் யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற காரணத்திற்காக கிளியோபட்ரா விஷ பாம்பை விட்டு கடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டாள். கிளியோபட்ராவின் இறப்புக்கு பிறகு ரோமானிய அரசு எகிப்து நாட்டை கைப்பற்றியது.
இன்றுவரை கிளியோபாட்ராவின் உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது. ஆண்டனியும் கிளியோபாட்ராவும் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் தைரியமாக எதிரிகளோடு சண்டையிட்டு தனது 39 வயதிற்குள் புகழ் பெற்றவளாக வரலாற்றில் திகழ்ந்த ஒரே பெண் கிளியோபட்ரா மட்டுமே.