காதலர்களின் நகரம் என்று அழைக்கப்படும் 'பாரிஸ்' என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஈபிள் டவர். இது அதிகம் பார்வையிடப்பட்ட உலக சுற்றுலா தளங்களில் ஒன்று. ஈபில் டவரை பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த நகரத்திற்கு கீழே உள்ள அமானுஷ்ய நகரத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு தைரியமாக ஆய்வு பயணம் செய்பவர்களாக இருந்தாலும் இந்த இடத்திற்குள் சென்றாள் நடுநடுங்கி போவார்கள். ஏனென்றால், இங்குள்ள சுரங்கப் பாதைக்குள் சென்ற பலரும் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர். இந்த இடத்திற்குள் நுழையும் முன்பே 'நிற்கவும்! இது இறந்தவர்களின் சாம்ராஜ்யம்' என்று எழுதப்பட்டிருக்கும்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்த இடம்தான் 'கேட்டாகம்ஸ்' (catacombs) என்று சொல்லப்படும் எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட சுரங்கம். 17ஆம் நூற்றாண்டில் பாரிஸ் நகரம் மற்ற ஐரோப்பிய நகரங்களை விட செழிப்பாக வளர்ந்திருந்தது. புதுமையான கட்டிடங்கள், புதுப்புது கண்டுபிடிப்புகள் என வளர்ந்து வரும் நகரமாக திகழ்ந்தது. அப்போது பூமிக்கு அடியில் சுண்ணாம்பு அதிக அளவில் கிடைப்பதை கண்டுபிடித்தனர். அதற்காக 65 அடி ஆழத்தில் சுமார் 200 மைல் தூரம் சுரங்கம் தோண்டப்பட்டு சுண்ணாம்பு எடுக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் சுரங்கம் தோன்றுவதை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவ்விடம் அப்படியே கைவிடப்பட்டது. கைவிடப்பட்ட இந்த இடத்தை திருடர்கள், மாஃபியா போன்றவர்கள் ரகசிய இடமாக பயன்படுத்தி வந்தனர். இதனை தெரிந்துகொண்ட அரசு அவ்விடத்திற்கு செல்ல நிரந்தர தடை விதித்தது.
வருடங்கள் ஓடின. பாரிஸ் நகரத்துக்கு பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து மக்கள் வாழ்ந்து வந்தனர். அதனால் மக்கள் தொகை பெருகியது. மக்கள் தொகை பெருகப் பெருக இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கே இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. நம் இந்திய நாட்டைப் போல் இறந்தவர்களை எரிக்கும் சடங்கு முறையை பின்பற்றாதவர்கள். அதனால் இறந்த பிணங்களை புதைப்பதற்கே இடமில்லாமல் திண்டாடியது பாரிஸ்.
வழக்கமாக ஆறு அடிக்கு குழி தோண்டி புதைத்தவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக நான்கு அடிக்கு தோண்ட ஆரம்பித்தனர். பிறகு அது இரண்டு அடியாக குறைந்தது. அடுத்த கட்டமாக சிலர் பிணத்தை அப்படியே சவக்காட்டில் விட்டுச் சென்றனர். பிணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், முறையாக புதைக்க இடம் கிடைக்காததாலும், துர்நாற்றத்தால் நோய்கள் பரவ ஆரம்பித்தன.
பிணங்களை புதைக்க இடம் இல்லாத காரணத்தால் பிரான்ஸ் அரசு ஒரு திட்டம் வகுத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு எடுக்கத் தோண்டப்பட்ட சுரங்கம் காலியாக இருந்ததால் அவ்விடத்திற்கு இந்த எலும்பு கூடுகளை அடக்கம் செய்ய நினைத்தனர். அதற்காக பல நூறு ஆண்டுகள் பழமையான, இரண்டாம் உலகப்போரில் மாண்ட வீரர்களின் கல்லறைகளும் தோண்டி எடுக்கப்பட்டன.
1785 ஆம் ஆண்டு கேட்டாகம்ஸ் என்கின்ற சுரங்கம் கல்லறையாக வடிவமைக்கப்பட ஆரம்பித்தது. கல்லறை என்று சொல்லிவிட்டு அதில் என்ன வடிவம் அமைக்கப்பட போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். கேட்டாகம்ஸ் இடம் முழுவதுமே தோண்டி எடுக்கப்பட்ட மண்டையோடுகள் மற்றும் எலும்புகளை வைத்து கோர்வையாக அலங்கரிக்கப்பட்டன. சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சுரங்கப்பாதை இருந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்கள் கூடி சுமார் 60 லட்சம் எலும்புக்கூடுகள் பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டன. சில இடங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும்படி இருந்தது. ஒரு சில இடங்களில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதையும் பார்க்க முடியும்.
1809 ஆம் ஆண்டு முதல் மக்கள் வந்து பார்வையிட 'கேட்டாகம்ஸ்' திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் மட்டுமே சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர் மக்கள். ஆனால், ஆர்வக்கோளாரு அதிகபிரசங்கிகள் சிலர், கட்டுப்பாடுகளை மீறி பல்வேறு திசைகளில் சென்று தொலைந்து போன கதைகளும் உண்டு. அப்படி தொலைந்து போனவர்களின் உடல்கள் பல மாதங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்டன.
இந்த இடத்திற்கு பார்வையிட சென்றவர்கள் ஒரே மாதிரியான பதிலை தான் கூறுகிறார்கள். இந்த சுரங்க பாதைக்குள் பல வழிகள் உள்ளன. அவ்வப்போது தூரத்தில் யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்கும். அது மட்டும் இன்றி காற்றில் ஒரு உருவம் தோன்றி மறைவது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளும் நடக்கும். சிலர் இந்த இடத்திற்குள் சென்றால் நமது எண்ணங்களையே மாற்றக் கூடிய அளவிற்கு தீய சக்திகள் நிறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர். இவ்விடத்திற்கு செல்பவர்கள் பயப்பட வேண்டியது அமானுஷ்ய விஷயங்களுக்கு மட்டும் அல்ல, ஆங்காங்கே திறந்தபடி இருக்கும் குழிகளும், முழுமையாக கட்டி முடிக்காத பாதைகளும், திடமற்ற சுவர்களும் கண்டிப்பாக உங்கள் விதியை மாற்ற நேரிடலாம்.
இன்று, உலகையே பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒரு காலத்தில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு கூட திண்டாடிய நிலையில் இருந்தது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தை நீங்கள் பார்வையிட விரும்பினால், அங்கு அலங்கரிக்கப்பட்ட எலும்புக்கூடுகளோடு சேர்த்து அதை பார்வையிட வந்தவர்களின் எலும்பு கூடுகளையும் பார்க்க நேரிடும். பாரிஸின் ஈபில் டவர் உலக அதிசயமாக இருந்தாலும் 'கேட்டாகம்ஸ்' சுரங்கத்தையும் பார்க்க, பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.