இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்குமே பிறப்பும் இறப்பும் பொதுவானது. பூமியில் பிறந்த எந்த உயிரினமாக இருந்தாலும் அது தன் வாழ்நாளின் கடைசி நாளை சந்தித்தே ஆக வேண்டும். சாவையே தோற்கடிக்கும் வல்லமை பெற்ற சில உயிரினங்களின் பட்டியலை பார்க்கலாம்.
1. ஜெல்லி மீன் (Turritopsis dohrnii):
ஜெல்லி மீன்களுக்கு இதயமோ மூளையோ கிடையாது. முழுமையாக வளர்ந்த ஜெல்லி மீனின் உருவம் வெறும் 4.5 மில்லி மீட்டர் (0.18 இன்ச்). இது தன் சாவை நெருங்கியதை உணரும் போது பாலிப் நிலையை(polyp stage) அடைகிறது. அதாவது திரும்ப தன் வயதையும் தோற்றத்தையும் இளமையாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது.ஜெல்லிமீன் காயம் அடைந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, மூன்று நாட்களில் பாலிப் நிலைக்குத் திரும்புகிறது. அதன் செல்களை இளைய வயதிற்கு மாற்றி மீண்டும் வளரத் தொடங்குமாம்.
பாலிப் நிலை என்றால் என்ன?
பொதுவாக இந்த முதுகெலும்பற்ற உயிரினத்திற்கு அதன் வாழ்க்கை சுழற்சியில் (lifecycle) இரண்டு நிலைகள் உள்ளது. அதற்கு பாலிப் மற்றும் மெடுசா நிலை என்று பெயர். இந்த ஜெல்லி மீன்கள் மெடுசா நிலையில் உயிர் வாழ்கின்றன. அப்படி வாழும் போது ஏதாவது ஒரு ஆபத்து நேர்ந்தால் மற்ற உயிரினங்கள் போலவே இறந்துவிடும். ஆனால் பாலிப் என்பது இறக்கும் தருவாயில் இருந்து மீண்டு வர உதவி செய்யும் ஒரு நிலை. தன்னைத் தானே இறக்கும் செல்களிலிருந்து சரி செய்து கொண்டு, புதுப்பித்து மறுபிறவி எடுக்கிறது.
இப்படி ஒரு விஷயம் தெரிஞ்சா நம்ம ஆளுங்க சும்மாவா விடுவாங்க. அது என்ன ஏதென்று பிரிச்சு மேஞ்சிட மாட்டாங்களா? விஞ்ஞானிகள் மருத்துவத்திற்கு பயன்படுத்துவதற்காக ஜெல்லி மீன்களின் செல்லுலர் மெக்கானிசத்தை (cellular mechanism) ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வகையான ஜெல்லி மீன்கள் 1883 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் 1990களில் தான் இதன் தனித்துவத்தை அறிய முடிந்தது.
சரி, அப்படி என்றால் இந்த ஜெல்லி மீன்களுக்கு உண்மையில் சாவே கிடையாதா? கண்டிப்பாக உண்டு. மேலே குறிப்பிட்டது போலவே, ஜெல்லி மீன்கள் காயம் அடைந்தாலோ அல்லது ஆபத்து நேர்ந்தாலோ பாலிப் நிலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அவை மாற்றி அமைக்க தவறும் போது இறப்பு ஏற்படுகிறது.
2. தட்டைப்புழு ( Planaria Flatworms):
மண்புழுக்களின் கட்டுக்கதையை பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். மண் புழுக்களை இரண்டு துண்டுகளாக வெட்டினால் அது மீண்டும் இரண்டு வெவ்வேறு உயிராக மாறிவிடும் என்பது. அது முற்றிலும் உண்மையே. ஆனால் உருண்டையான மண்புழுவாக இல்லாமல் தட்டையான மண்புழுவாக அதுவும் கடலுக்குள் இருக்கும் இந்த பளபளக்கும் புழு வகை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியது.
'பிளேனேரியன்ஸ்' என்ற பெயர் கொண்ட இந்த தட்டையான புழுவிற்கு உடலில் ஆக்ஸிஜனை எடுத்து விநியோகிக்க நுரையீரலோ இதயமோ இல்லை. இதை நீங்கள் குறுக்கே அல்லது நீளமாக வெட்டினாலும், தனது செல்களை சரி செய்து, மீண்டும் பழைய (தட்டையாக) தோற்றத்திற்கு உருமாறிக் கொள்ளும்.
அப்படி என்றால் இந்த தட்டை புழுக்களுக்கு அழிவே கிடையாதா? கண்டிப்பாக உண்டு. நீரிழப்பு, உப்புத்தன்மை, அதிக அமிலத்தன்மை அல்லது அடிப்படை நிலைமைகள், வெப்பம் போன்ற வெளிப்புற சூழ்நிலைகளால் அவை கொல்லப்படலாம். இப்படி வெளிப்புற சூழ்நிலைகளால் மட்டுமே இந்த தட்டை புழுவிற்கு இறப்பு ஏற்படும்.
இது போன்ற விசித்திர கடல் உயிரினங்கள் ஏராளம். நம் கற்பனைக்கும் எட்டாத, பலவகை உயிரினங்கள் இன்னும் கடலுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க பெரும்பாலும் மனிதர்கள் முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.